வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (12/01/2018)

கடைசி தொடர்பு:16:04 (12/01/2018)

இவை இருப்பதே தெரியாது... இப்போது அழிவதும் தெரிவதில்லை..! பஸ்டர்டு பறவைகளின் சோகம்

அழிந்துவரும் பறவை இனங்களின் பட்டியலில் ஒவ்வொரு நாளும் ஒரு பறவை இடம்பெறுகிறது எனலாம். இப்படி பத்தோடு பதினொன்று என்று கடந்து போகிற ஒரு செய்திக்கு பின்னால் ஒரு இனத்தின் அழிவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. மின்வேலிகளில் ஆரம்பித்து மின்கம்பிகள் வரை எல்லாமே உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவையே. உயிரினங்கள்  குறித்து எழுதப்படுகின்ற 100 கட்டுரைகளில் பாதிக்கும் மேற்பட்டவை, உயிரினங்களின் அழிவு பற்றியவையே!

பஸ்டர்டு இனப்பறவை

இந்தியாவின் தார் பாலைவனத்தில், வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில், அரியவகை பறவையின் எஞ்சிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எஞ்சியிருந்த எலும்புகள், பழுப்பு நிற இறகுகள், எல்லாம் மின்சாரக் கம்பிகளுக்கு கீழாக கண்டெடுக்கப்பட்டன. அவை பெண் பறவையின் உடல் பாகங்கள் என கண்டறியப்பட்டது. இந்தப் பறவை பஸ்டர்டு வகையைச் சார்ந்தது. அழிந்து வரும் பறவைகளில் வெளி உலகத்துக்குத் தெரியாத பறவைகளில் இந்தப் பறவை முக்கியமானது. உலக அளவில் இவற்றில் 150 பறவைகளே எஞ்சியுள்ளன. 150 பறவைகள் மட்டுமே இருக்கிற ஒரு இனத்தின் பெண் பறவையின் அழிவு துயரமானது. அழிந்து வரும் பறவைகள் இனப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிற பறவை பஸ்டர்டு. டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்தின், (WII) நிபுணர் சுதீர்த்த தத்தா பறவைகள் இறப்பு தொடர்பாக பேசும்போது, 2017-ம் ஆண்டு மட்டும், இந்தப் பகுதியில் உள்ள பெரிய மின்சக்தி மற்றும் உயரழுத்த மின்சார கம்பிகள்மீது மோதி மூன்று பறவைகள் இறந்ததைக் கண்கூடாக நேரிட்டது. ஆனால், அப்படியான இறப்புகள் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாமல் கடந்துவந்தது வேதனை அளிக்கிறது என்கிறார். கடந்த டிசம்பர் 28-ம் தேதி ஒரு பறவை மின்சார கம்பிகளில் அடிபட்டு இறந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார்.

Indian bustards

“பஸ்டர்டு பறவைகள் கனமானவை. ஆண் பறவை 15 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். இவை குறைந்த உயரத்தில் பறக்கும் திறன்கொண்டவை. குறுகிய பார்வை கொண்ட பறவை என்பதால் மின்கம்பிகளை தொலைவில் வரும்பொழுதே இவற்றால் காண முடிவதில்லை. கம்பிகளின் பக்கத்தில் வந்த பிறகே பார்க்கின்றன. சுதாரித்து பாதையை மாற்றுவதற்கு முன்பாக அப்பறவைகள் மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்துவிடுகின்றன. மெதுவாக பறக்கும் தன்மையும் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார் தத்தா. இது பஸ்டர்டு பறவை இனங்கள் முழுமைக்கும் இருக்கிற பொதுவான பிரச்னை. 2010-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஆபத்தான லுட்விக் இன் பஸ்டர்டு மற்றும் கோரி பஸ்டர்டு ஆகிய பறவை இனங்கள் தென்னாப்பிரிக்காவில் மின்சக்தி மோதல்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. மின்சக்தி அபாயங்களால் பறவைகள் தங்களின் வலசை பாதைகளை மாற்றி இருக்கின்றன. இது பறவை இனங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.  

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1,40,000-லிருந்து 3,28,000 பறவைகள் இடையே காற்று விசையாழிகள் மூலமாக கொல்லப்படுகின்றன. ஆனால், இந்த நேரடி படுகொலைகளைவிட பறவைகள் வாழ்விடத்தை அழிப்பது பறவை இனத்தின் இழப்புக்கு மிகப்பெரிய காரணம். பெரிய அளவிலான காற்றாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழங்கல் முறைகள் அதிகரிக்கும்பொழுது பறவைகளின் வாழ்விடங்கள் இயற்கையாகவே அழிந்துவிடும். பறவைகளை திசைமாற்றுவதற்கு விமானங்களில் பயன்படுத்தப்படும் திசைகாட்டிகள் என அழைக்கப்படும் பிரகாசமான வண்ண அடையாளங்களை நிறுவுமாறு  தத்தாவின் குழு மின்சார நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்தது. பறவைகள்,  திசைமாற்றிகள் அமைப்பதால் மின்கம்பிகளின் மோதல் தொடர்பான மரணங்கள் குறைக்க முடியும் என சொல்கிற தத்தாக் குழு 2017-ம் ஆண்டு மே மாதம், சோதனை முயற்சியாக, ராஜஸ்தானில் செயல்படும் எரிசக்தி மற்றும் மின்சார சக்தி நிறுவனங்களுக்கு 27 பறவை திசை மாற்றும் கருவிகளை ஒப்படைத்தனர். ஆனால், அவற்றை எந்த மின்சக்தி நிறுவனங்களும் சோதித்துப் பார்க்க முன்வரவில்லை. ஏனெனில் இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றால் அதிகப் பணம் செலவழித்து இதை பல்வேறு இடங்களில் நிறுவ வேண்டும் என்பதால், யாரும் சோதிக்கவில்லை என தத்தாக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

Bustard birds

தார் பாலைவனத்தில் பறவைகளின் வலசை பாதைகளைக் கண்டறிந்த தத்தாவின் குழு, ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து பறவைகள் மின்சாரம் மோதல் காரணமாக இறக்கின்றன என்று கண்டறிந்தது. இப்படியான மின்சார மோதல்களில் இறந்து போகிற பறவைகளாக எகிப்திய கழுகு (நெபோரன் பெர்குபொட்டெரஸ்), க்ரிஃபான் கழுகு (ஜிப்ஸ் ஃபூல்யூஸ்) மற்றும் புறா (கொலம்பா லிவியா) ஆகியவை அடங்கும். தார் பாலைவனம்  நிலப்பரப்பில் சுமார் 6,000 கிலோமீட்டர்  நீளமுள்ளதாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் சுமார் 18,000 பறவைகள் இறக்க நேரிடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வனத் துறையினரும், WII யிலிருந்து பாதுகாப்பாளர்களும், மிக முக்கியமான ஆபத்தான இடங்களில் மின்சாரக் கம்பிகளை நிலத்துக்கு அடியில் கொண்டு செல்லலாம் என பரிந்துரைக்கின்றனர். இதற்கு முன்பாக இப்படியான முயற்சியை குஜராத் அரசு முன்னெடுத்திருக்கிறது என சில உதாரணங்களை முன் வைக்கின்றனர். முன்னதாக 2011-ம் ஆண்டு நிலத்தில் நிறுவப்பட்ட மின்சார கம்பிகள் மூலமாக 400-க்கும் மேற்பட்ட ஃபிளமிங்கோ பறவைகள் இறந்திருக்கின்றன. கம்பிகள் நிறுவப்பட்ட 10 நாள்களுக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்தது.  இதனைக் கருத்தில்கொண்ட குஜராத் எரிசக்தி டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜி.டி.சி.ஓ.ஓ) காதிர் பகுதியில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மின்சாரக் கம்பிகளை நிலத்தடியில் கொண்டுசெல்ல உத்தரவிட்டது. குறைந்த மின்னழுத்த மின் கம்பிகளை நிலத்தடி வழியாகக் கொண்டுசெல்லலாம். ஆனால், இந்த முறையை செயல்படுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும். அதற்குள்ளான காலகட்டத்தில்  பல பறவை இனங்கள் அழிவதற்கான காரணிகள் நிறையவே இருக்கின்றன.


டிரெண்டிங் @ விகடன்