வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (11/01/2018)

கடைசி தொடர்பு:15:44 (12/02/2018)

குடும்பத்தின் பாதுகாப்புக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி முக்கியம்... ஏன்?

நண்பர்கள் அல்லது உறவினர்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டாக இருந்தால், இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கச் சொல்லி படுத்தியெடுப்பார்கள். அவர்களின் வற்புறுத்தலுக்காகவே பலரும் பாலிசி எடுப்பார்கள். இப்போது, டெலி மார்க்கெட்டிங் அழைப்புகளால் ஒன்றிரண்டு பேர் காப்பீடு செய்பவர்களும் உண்டு. ஆனால், குடும்பப் பாதுகாப்பை மனதில் வைத்து காப்பீடு செய்பவர்கள் மிகவும் குறைவு.

இன்ஷூரன்ஸ்

தன்னுடைய மதிப்பு என்ன என்பதை அறிந்து இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் மிக மிகக் குறைவு. விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் மட்டுமே இன்ஷூரன்ஸைச் சரியாகப் பயன்படுத்திவருகிறார்கள். குடும்பப் பாதுகாப்புக்காக இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு வீட்டில் சம்பாதிக்கும் நபரின் மதிப்பு அறிந்து, அதற்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுக்க வேண்டும். 

ஒருவரின் மதிப்பைக் கணக்கிடுவது என்பது எளிது. 30 வயதுடையவர் மாதம் 25,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவர் ஆண்டுக்கு 3,00,000 ரூபாய் சம்பாதிப்பார். இவர், அடுத்த 30 வருடங்களுக்கு உழைக்கும் திறன்கொண்டவராக இருப்பார். இந்த வகையில், அவருடைய மொத்த மதிப்பு 37,50,000. வீட்டுக் கடனாக 15 லட்சம் ரூபாயும், இதர செலவுகளுக்காக 10 லட்சம் ரூபாயும் தேவை என எடுத்துக்கொள்ளலாம். இப்போது அந்த நபரின் மொத்த மதிப்பு 62,50,000. இந்தத் தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இதற்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக, ஆண்டுக்கு 10,000 ரூபாய்க்குக் குறைவாகவே செலவு செய்யவேண்டி இருக்கும். 

இதற்கான வாய்ப்பு வகையில் குறித்து இன்டகிரேட்டட் நிறுவனத்தின் உதவி பொதுமேலாளர் குருராஜனிடம் பேசினோம்.

``குடும்பத்துக்காக நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், குடும்பத்தில் உள்ளவர்கள் பாதுகாப்புக்காக இன்ஷூரன்ஸ் எடுக்கத் தவறுகிறோம். மற்றவர்களின் வற்புறுத்தலாலும், வரி சேமிப்புக்காகவும்தான் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைத்துக்கொள்கிறோம். இவ்வாறு எடுக்கப்படும் திட்டங்கள் உங்களுடைய குடும்பத்துக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்பதுகுறித்து யோசிப்பதில்லை. 

இன்ஷூரன்ஸ்50,000 ரூபாய் மதிப்புள்ள டூவிலருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். ஆனால், மதிப்பிட முடியாத நமக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு யோசிக்கிறோம். வீட்டுக் கடன் வாங்கும்போது, வங்கி (அ) நிறுவனங்கள் நம்மிடம் 30 அல்லது 40 பக்கங்களுக்குக் கையெழுத்து வாங்குவார்கள். அப்படிக் கையெழுத்து வாங்கும் பேப்பரில், 'வீட்டுக்கடன் முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே வீடு உங்களுக்கு சொந்தம். இல்லையென்றால், அவ்வீட்டின் மீது வங்கிக்கு (அ) நிறுவனத்துக்கு உரிமை உண்டு என்பதைச் சேர்த்திருப்பார்கள். வீட்டில் சம்பாதிப்பவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால், அவ்வங்கியோ (அ) நிறுவனமோ (மீதமுள்ள கடனைப் பொறுத்து) உங்களுடைய வீட்டையே உரிமை கோரலாம். 

இதையெல்லாம் தவிர்க்கும் வகையில், குடும்பத்தில் முக்கியமான நபர் அவருடைய பொருளாதார மதிப்பைக் கணக்கீட்டு அதற்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, இன்ஷூரன்ஸ் முகவர்களிடம் பாலிசி எடுக்க வேண்டுமென்றால், அவர்களுக்கு வருமானம் தரும் வகையிலான திட்டத்தைத்தான் பரிந்துரைசெய்வார்கள். எந்தக் காரணத்தைக்கொண்டு டேர்ம் பாலிசிகுறித்து சொல்ல மாட்டார்கள். இந்த பாலிசியை விற்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. 

குடும்பத்துக்குப் பாதுகாப்பு அவசியம் என நினைப்பவர்கள் டேர்ம் பாலிசியாவது எடுத்துக்கொள்வது நல்லது. இந்தச் செலவை உங்கள் குடும்பத்தின் மீதான நேசத்தின் வெளிப்பாடு அல்லது அக்கறை என்றே கொள்ள வேண்டும்.. குடும்பப் பாதுகாப்புக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை என்றால், நிதி திட்டமிடல் முழுமையாகாது. ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்கள், இந்த பாலிசிகள் தங்களுடைய குடும்பத்துக்குப் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதும், உங்களுடைய வருமானத்துக்குப் போதுமானதாக இருக்கின்றனவா என்பதையும் கவனித்துப் பாலிசி தொகையை உயர்த்திக்கொள்ளலாம்'' என்றார். 

என்றென்றும் உங்கள் குடும்பம் நல்ல நிலையில் இருக்க, காப்பீடு குறித்து யோசியுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்