வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (11/01/2018)

கடைசி தொடர்பு:16:52 (11/01/2018)

ஆதாரின் பாதுகாப்பை அதிகரிக்கும் விர்ச்சுவல் ஐடி... எப்படிப் பெறுவது? #Aadhaar

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் ஆதார்தான் தேசிய அளவிலான சர்ச்சையாக இருக்கிறது. ஆதார் அலை இன்னும் ஓயவில்லை. மொபைல் எண், வங்கிக்கணக்கு, பான் கார்டு, எனப் பல சேவைகளுக்கு ஆதார் எண்ணை மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டாயமாக இணைத்துவிட வேண்டும் என தினமும் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது மத்திய அரசு. சரி அதை இணைத்துவிடலாம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற செய்தி வெளியாகி இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. 

ஆதார்

500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட ஆதார் தகவல்களை அணுக முடியும் என்ற தகவலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது ஒரு நாளிதழ். வழக்கம் போலவே அந்தத் தகவல் பொய்யானது ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன என்று கூறியது தேசிய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI). அது மட்டுமன்றி அந்தச் செய்தியைப் பதிவு செய்திருந்த பத்திரிகையாளர் மீது வழக்குத் தொடுத்தது. சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் "அந்தப் பத்திரிகையாளருக்கு விருது கொடுக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டியது UIDAI தான்" என்று எட்வர்ட் ஸ்னோடென் கூட தனது கருத்தை தெரிவித்திருந்தார். 

ஒரு மொபைலும் ஐம்பது பைசாவும்!

மொபைல்

இந்நிலையில் தற்போது மீண்டும் இன்னொரு விஷயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொபைலில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தரப்படும் ஒரு வசதியின் மூலமாக ஓர் ஆதார் எண் எந்த வங்கியில் இணைக்கப்பட்டிக்கிறது என்பதைக் கண்டறிய முடியும் என்ற தகவல்தான் அது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அளிக்கக்கூடிய USSD சேவையில் ஒரு வகைதான் NUUP. வங்கிச் சேவைகளை எளிதில் அணுக வேண்டும் என்பதற்காகவே இந்த NUUP சேவை மொபைலில் வழங்கப்படுகிறது. மொபைலில் *99*99*1# என்று டைப் செய்து அழைத்தால் அடுத்ததாக ஒரு மெனு தோன்றுகிறது. அதில் ஆதார் எண்ணை உள்ளிடுவதற்கான இடம் தரப்பட்டுள்ளது. 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு உறுதி செய்தால் அந்த ஆதார் எண் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது தோன்றுகிறது. இந்தத் தகவலை நமக்கு அளிப்பதற்காக ஐம்பது பைசாவை சேவைக் கட்டணமாக வசூலிக்கின்றன தொலைதொடர்பு நிறுவனங்கள். இது ஒரு நல்ல வசதிதானே என்று நினைப்பவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சித் தகவல் காத்திருக்கிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்தி மற்ற நபர்களின் ஆதார் எண் எந்த வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூட கண்டுபிடித்து விட முடியும் என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் தகவல். இதன் படி பார்த்தால் ஒரு மொபைலும் அதில் ஐம்பது பைசா பேலன்ஸ் இருந்தால் மட்டும் போதும். ஒரு நபர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். இப்படி ஆதார் கட்டமைப்பில் இருக்கும் பல குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர் சமூகநல ஆர்வலர்கள். ஆதார் ஆணையமும் ஒவ்வொருமுறையும் விளக்கமளித்து வருகிறது. 

மேலே சொன்ன இந்த வசதியின் மூலமாக ஒருவரின் பயோமெட்ரிக் தகவல்களோ அல்லது மற்ற தகவல்களோ வெளிவருவதில்லை என்பது ஆறுதலான விஷயமென்றாலும். ஒரு நபரின் அனுமதியின்றி அவர் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை அறிய முடியும் என்பதே தகவல்கள் பாதுகாப்பாக இல்லையென்பதைத்தான் உணர்த்துகின்றன. இதுவும் ஒரு வகையிலான தரவு மீறல்தானே? 

ஆதார் தகவல்களை எப்படிப் பாதுகாக்கலாம்?

பயோமெட்ரிக் லாக் 

பயோமெட்ரிக் லாக் 

இந்த வசதியின் மூலமாக ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்து கொள்ள முடியும். லாக் செய்து விட்டால் கண் கருவிழியையோ, கைரேகைகளையோ வேறு யாரும் பயன்படுத்த முடியாது. தேவைப்படும் பொழுது இதை அன்லாக் செய்து கொள்ளமுடியும்.

ஒருவரின் ஆதார் பாதுகாப்பாக இருகிறதா என்பதை அறிய மற்றொரு வசதியை அளித்துள்ளது தேசிய தனிநபர் அடையாள ஆணையம். Aadhaar Authentication History என்ற வசதியின் மூலமாக ஆதார்  எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடியும். இதில் தரப்படும் தகவல்கள் தெளிவாக இல்லையென்றாலும் கூட ஆதார் எந்தெந்த தேதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற தகவலை இதன் மூலமாகப் பெறலாம்

.ஆதார் தகவல்கள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் தகவல்களைப் பாதுகாக்க விர்ச்சுவல் ஐடி என்ற புதிய வசதியை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது. வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வரவிருக்கிறது.

விர்ச்சுவல் ஐடியை எப்படிப் பெறுவது?

16 இலக்கம் கொண்ட இந்த விர்ச்சுவல் ஐடியை UIDAI இணைதளத்திலோ அல்லது mAadhaar செயலி மூலமாகவோ லாக்இன் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பிறகு தேவைப்படும் இடங்களில் ஆதார் எண்ணுக்கு பதிலாக அந்த விர்ச்சுவல் ஐடியையே பயன்படுத்தலாம். இதன்மூலம் ஒருவரின் ஆதார் எண்ணை, மற்றொருவர் நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியாது.

இது நிரந்தரமான எண் கிடையாது தற்காலிகமானதுதான்.  ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விர்ச்சுவல் ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம். 

இந்த விர்ச்சுவல் ஐடி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். விர்ச்சுவல் ஐடி வேண்டாம் என்றால் ஆதார் எண்ணையே பயன்படுத்தலாம்.

இந்த விர்ச்சுவல் ஐடியை ஆதார் பயனாளர் மட்டுமே உருவாக்க முடியும். ஆதார் ஏஜென்சி உட்பட வேறு யாராலும் விர்ச்சுவல் ஐடியை உருவாக்குவதற்கு அனுமதி கிடையாது. ஜூன் 1-ம் தேதி முதல் ஆதார் சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் இந்த விர்ச்சுவல் ஐ.டி.யைப் பயன்படுத்தும் கட்டமைப்புகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இது விருப்பத்தேர்வுதான். ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம்; விர்ச்சுவல் ஐடியையும் பயன்படுத்தலாம்.

இந்த விர்ச்சுவல் ஐடி மூலமாக ஒருவரின் ஆதார் எண் பொது வெளியில் பகிரப்படுவது தடுக்கப்படும் எனக் கூறும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம், இதை அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. "விர்ச்சுவல் ஐடி வசதி வரவேற்கப்பட வேண்டியது. தகவல்களைப் பாதுகாப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகளை UIDAI தொடர்ச்சியாக எடுத்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் UIDAIன் முன்னாள் தலைவரான நந்தன் நீலகேணி. தனித்துவமான இந்த வசதியின் மூலமாக 119 கோடி ஆதார் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் UIDAI தலைமை நிர்வாகி அஜய் பூஷன் பாண்டே. 


டிரெண்டிங் @ விகடன்