வெற்றியை எப்போது நீங்கள் நழுவவிடுகிறீர்கள் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory | A short story about secret to success

வெளியிடப்பட்ட நேரம்: 09:12 (12/01/2018)

கடைசி தொடர்பு:09:27 (12/01/2018)

வெற்றியை எப்போது நீங்கள் நழுவவிடுகிறீர்கள் தெரியுமா? - உண்மை உணர்த்தும் கதை! #MotivationStory

கதை

`ங்களுக்கான வாய்ப்பு வரும்போது, நீங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம்’ என்கிறார் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli). நமக்குக்குக் கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு என்பதைப் புரிந்துகொள்ளாமல் நழுவவிடுபவர்கள், வெற்றியையே நழுவவிடுகிறார்கள். வரலாறு படைத்தவர்கள் எல்லோருமே சரியாக வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர்களே! `நமக்கு அதிர்ஷ்டம் வரவில்லை’ என்று சோர்ந்துபோய் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லோருமே தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் என்று புரிந்துகொள்ளலாம். இதை அழுத்தம் திருத்தமாக விளக்கும் கதை இது!

பொங்கல் வந்துவிட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகிவிட்டன. நம்மூரில் ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது வீரம். பல மேற்கத்திய நாடுகளில் காளையை ஒரு பெரிய மைதானத்தில் அங்குமிங்கும் ஓடவைத்து, அதற்குக் கோபமூட்டி, அலைக்கழித்து, ஈட்டியால் குத்திக் கொல்வது (Bullfighting) ஒரு வகை விளையாட்டு. ஸ்பெயின், போர்ச்சுக்கல், தான்சேனியா, ஃபிரான்ஸ்... எனப் பல நாடுகளில் இன்றும் `புல்ஃபைட்டிங்’ நடைபெறுகிறது. நம் ஊரில் மட்டுமல்ல, நல்ல ஆஜானுபாகுவான காளையிடம் மோதுவது வீரம் என்கிற கருத்து பரவலாகவே இருக்கிறது. காளையை அடக்குகிற ஆண்மகனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் தந்தைகள் உலகமெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை உணர்த்தும் ஃபிரெஞ்சு நாட்டுப்புறக் கதை இது.

ஃபிரான்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் இருந்தான். அதே கிராமத்தில் வசிக்கும் ஓர் இளம் பெண் மேல் அவனுக்குக் காதல். அவளுக்கும் அவன் மேல் இஷ்டம்தான். ஆனால், தந்தை இதற்கு சம்மதிக்க வேண்டுமே என்கிற பயம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. ஒருநாள் அவனை அழைத்துத் தெளிவாகச் சொல்லிவிட்டாள்... ``எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டம்தான். ஆனா, என் அப்பா சம்மதிக்காம பண்ணிக்க மாட்டேன்...’’

இளைஞன், அந்தப் பெண்ணின் தந்தையை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டான். ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கக் கிளம்பினான். அவரு ஒரு விவசாயி. அவருக்கு அவனை நன்றாகத் தெரியும். அவன், தன் மகளைச் சுற்றிச் சுற்றி வருவதை அவரும் அறிவார். அவன் வந்ததும், ``வா தம்பி... என்ன விஷயம்?’’ என்று கேட்டார்.

ஃபுல்பைட்டிங்

``ஐயா... நான் உங்க மகளை ரொம்ப நேசிக்கிறேன். அவளை எனக்குக் கல்யாணம் செஞ்சு தருவீங்களா?’’ என்று கேட்டான் இளைஞன்.

ஒரு கணம் யோசித்தார். `பையனும் நல்லவன்தான். ஆனால், காலம் முழுக்கத் தன் மகளைவைத்துக் காப்பாற்ற வேண்டுமே!’ - இந்த யோசனையும் வந்தது. ``தம்பி... நீ என் மகளைக் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கிறேன். ஆனா, ஒரு கண்டிஷன்...’’

``சொல்லுங்க... எதுவாயிருந்தாலும் செய்யறேன்.’’

``அப்போ சரி. என்கூட வயலுக்கு வா. வயலுக்கு நடுவுல மாட்டுக்கொட்டகை இருக்கு. அதுல இருந்து ஒண்ணொண்ணா மூணு மாடுகளை அவிழ்த்துவிடுவேன். நீ மாட்டோட வாலைப் பிடிக்கணும். ஏதாவது ஒரே ஒரு மாட்டோட வாலை நீ பிடிச்சுட்டாக்கூட என் மகளை உனக்குக் கல்யாணம் பண்ணித் தந்துடுறேன்.’’

இளைஞன் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டான். அவருடன் வயற்காட்டுக்குப் போனான். மாட்டுக்கொட்டகைக்கு முன்னால் தயாராக மாட்டின் வாலைப் பிடிக்கக் காத்திருந்தான். கதவு திறந்தது. `ஒரு மாடு வரும்... அதன் வாலைப் பிடிக்கணும்’ என்று காத்திருந்தவன், அதிர்ந்துபோனான். வெளியே வந்தது, மிக பிரமாண்டமான வடிவில், மிரட்டுகிற மாதிரியான தோற்றத்திலிருந்தது. அவன் பயந்துபோய் விலகி நின்றான்.

`நமக்கு இன்னும் ரெண்டு வாய்ப்பு இருக்கு... பார்த்துக்குவோம்’ என்று நினைத்துக்கொண்டான். `மாட்டை நேருக்கு நேரா எதிர்கொண்டால் அதன் வாலைப் பிடிக்க முடியாது’ என்று அவனுக்குத் தோன்றியது. அதனால், கொட்டகையின் பக்கவாட்டில் நின்றுகொண்டான்.

``என்ன ரெடியா?’’ விவசாயி குரல் கொடுத்தார்.

``ரெடி’’ என்றான் இளைஞன்.

கதவு திறந்தது. இரண்டாவதாக வந்தது, முதல் மாட்டைவிட மிகப் பெரியது. அந்த உருவத்தைப் பார்த்தே மிரண்டுபோன இளைஞன் அதன் வாலையும் பிடிக்காமல் தவறவிட்டுவிட்டான். இனி அவனுக்கு இருந்தது கடைசி வாய்ப்பு.

``என்னப்பா, கதவைத் திறக்கட்டுமா?’’ விவசாயியின் குரல் கொட்டகைக்குள்ளிருந்து கேட்டது.

மாட்டின் வால்

``திறக்கலாம்.’’

இப்போது இளைஞன் முழுக்கத் தயாராகிவிட்டான். `இந்த மாட்டின் வாலைப் பிடித்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை.’ கதவு திறந்தது. வெளியே வந்தது ரொம்ப நோஞ்சானான மாடு. அதைப் பார்த்ததும் இவனுக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. சரியாக அது ஓடி வரும் நேரத்தைக் கணித்துக்கொண்டு அதன் வால் பகுதி இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்தான். அப்போதுதான் தெரிந்தது, அந்த மாட்டுக்கு வாலே இல்லை என்பது!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்