வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (12/01/2018)

கடைசி தொடர்பு:17:13 (12/01/2018)

பொங்கலுக்குத் தயாராகும் புதுப்பானைகள் - ஒரு நேரடி விசிட்! #Pongal

நாம் பூம்புகார் - மயிலாடுதுறை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் இருந்த வீடு நம் பார்வையில்பட்டதும் நம் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன. வீட்டின் வாசல் முன்பாக அழகழகான மண்பானைகள், மண்பாண்டங்கள் மற்றும் மண் அடுப்புகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மற்றொருபுறத்தில் அப்போதுதான் சக்கரத்திலிருந்து வனைந்து எடுக்கப்பட்ட பானைகள், அடுப்புகள் வெயிலில் காய வைக்கப்பட்டிருக்கின்றன. அப்போதுதான் பொங்கல் நெருங்கிவிட்டது நமக்குத் தெரியவந்தது.

மண் பானை

நாம் பார்த்தபோது, ஒருவர் சக்கரத்தில் களிமண்ணை வைத்து அழகான பானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கே உரிய எளிமையான உடையைக்கூட, அவர் செய்யும் மண்பாண்டங்களைப்போலவே மிக நேர்த்தியாக உடுத்திக்கொண்டிந்தார். அவருடைய வேலையில் குறுக்கிட நமக்கு மனம் வரவில்லைதான் என்றாலும், மண்பாண்டத் தொழிலைப் பற்றியும், அதில் அவருக்கு ஏற்படக்கூடும் பிரச்னைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்காகப் பேச்சுக் கொடுத்தோம்.

பானை செய்யும் இடம்

தன்னை செல்லதுரை என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர், நம்மிடம் பேசத் தொடங்கினார்.

''எங்களுக்கு மண் பானை மற்றும் மண் பாண்டங்கள் செய்யறதுதான் தொழில். பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டிருக்கோம். இப்போ பொங்கல் நெருங்கிட்டதாலதான் நெறைய பானைகள் செஞ்சிவெச்சிருக்கேன். இவ்வளவும் விக்குமாங்கறது சந்தேகம்தான். ஏன்னா, மக்கள் முன்ன மாதிரி இல்லை. பொங்கலன்னைக்கி கேஸ் அடுப்புல பொங்கிச் சாப்பிடுறாங்க. அடுப்புல பொங்கல் வைக்கிறவங்கள்லகூட பித்தளை அல்லது சில்வர் பாத்திரத்துலதான் வைக்கறாங்க. அதனால மண்பானைகளை வாங்கறது கொறைஞ்சிபோச்சு'' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பானைகளுடன் செல்லதுரை

“நீங்க செய்யற மண்பானைகளை எப்படி விற்பனை செய்யறீங்க?''

''மண் பானையில் பொங்கல் வைக்கறதை விரும்பறவங்கள்ல சிலபேர் வீட்டுக்கே வந்து வாங்கிக்கிட்டுப் போறாங்க. நாங்க பக்கத்து ஊர்ல சந்தை போடறப்ப அங்க எடுத்துக்கிட்டுப் போய் விற்போம். பொங்கல் நேரம்ங்கறதால நெறைய பேர் வாங்கிட்டுப் போவாங்க. மத்தபடி ரொம்ப வருமானம்லாம் கெடையாதுங்க. அந்தக் காலத்துல சமையலெல்லாம் மண் பானை, மண் சட்டியிலதான் செய்வாங்க. அதனால சாப்பாடும் நல்லாவும் ஆரோக்கியமாவும் இருந்துச்சு. இப்ப படிச்சவங்க நெறையபேர் எங்கக்கிட்ட வந்து மண்பானை கேட்டு வாங்கிக்கிட்டுப் போறாங்க. மண் பானையில வைக்கற தண்ணியைக் குடிச்சா நல்லதுனு படிச்சதாச் சொல்றாங்க'' என்றார்.

மண்பானைகள்

“மண் பாண்டங்களைச் செய்வதில் உங்களுக்குப் பிரச்னைகள் எதுவும் இருக்கா?''

''நெறையவே இருக்கு. சாதாரண களிமண்ணால பானை பண்ண முடியாது. மண்பானைகளைச் செய்யறதுக்குன்னு தனி ரக களிமண்ணு இருக்கு. அது எல்லா எடத்துலயும் கெடைக்காது. மண்பானை செய்யறதுக்கான களிமண் எவ்வளவு தொலைவுல இருந்தாலும் தேடிப்போய் கொண்டு வருவோம். எனக்கு ஒரு பானையை செஞ்சு முடிக்க அரை மணியாவும். பானையைச் சக்கரத்துல இருந்து எடுத்த பிறகு நல்லா காயவைக்கணும். அதுக்கப்புறமாத்தான் சூளை போட்டு சுடணும். சக்கரத்துலேர்ந்து எடுத்து காய வைக்கறப்போ சில பானைங்க உடைஞ்சிடும். காத்து வேகமா அடிச்சா சிலது உருவம் மாறிடும். இதெல்லாம் போக ஒழுங்கா இருக்குற பானைங்கதான் சுடறதுக்குப் போகும்'' என்று தனக்கு இருக்கும் சிரமங்களை எடுத்துச் சொன்னார்.

பானை

அவரிடம் பேசியபோதுதான் அந்தத் தொழிலில் இருக்கும் சிரமங்கள் நமக்குப் புரிந்தது. இன்னும் பேசிக்கொண்டிருந்தால் அவருடைய வேலை பாதிக்குமே என்று நினைத்து, அவரை சிரமப்படுத்த விரும்பாமல் சில படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.


டிரெண்டிங் @ விகடன்