வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (12/01/2018)

கடைசி தொடர்பு:15:02 (12/01/2018)

சென்னை - மைசூர் எக்ஸ்பிரஸில் இணைக்கப்பட்ட அனுபூதி சிறப்புப் பெட்டி... என்ன ஸ்பெஷல்? #SpotVisit

தெற்கு ரயில்வே தனது பயணிகளுக்கு பொங்கல் பரிசாக சென்னை சென்ட்ரல் - மைசூர் வழியாக இயங்கும் வண்டி எண்: 12007/12008 சதாப்தி விரைவு ரயிலில் அனுபூதி என்ற சிறப்பு ரயில் பெட்டியை இணைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதில் என்ன சிறப்பம்சங்கள் எனப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம்.

அனுபூதி சிறப்பு பெட்டி

கதவுகளைத் திறக்க கைப்பிடியைத் தேடிக்கொண்டிருந்த போது ஒரு பச்சை நிற டச் பட்டன் "கதவைத் திறக்க என்னைத் தொடு" என்றது. தொட்டதும் "ஸர்ர்.." என்று மெதுவாகத் திறந்து நம்மை வரவேற்றது. அனுபூதியின் சிறப்பம்சங்களை தெற்கு ரயில்வே டிப்போ அதிகாரி திரு.எ.சுரேஷ் மற்றும் உதவிப்பிரிவு இயந்திரப் பொறியாளர் திரு.துஷார் ஆதித்யா ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

அனுபூதி ரயில்பெட்டியில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகள், பணிச்சூழலுக்கு ஏற்றவாறு இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சென்சார் முறையில் இயங்கக்கூடிய தண்ணீர் குழாய்கள், ஹாண்ட் ட்ரையர்ஸ் என எல்லாமே டாப் எண்டு தொழில்நுட்பங்கள்தாம். பயணிகள் பயணத்தின் போது படிப்பதற்கு உதவியாக ஒவ்வோர் இருக்கைக்கும் தனித்தனியான "வாசிப்பு விளக்குகள்" வழங்கப்படுகின்றன. இரண்டுக்கும் மேற்பட்ட பிளக் பாயின்டுகள், செல்போன் மற்றும் மடிக்கணினிகள் உபயோகத்திற்காகத் தரப்படுகின்றன. விமானங்களில் உள்ளது போல "அட்டெண்டர்ஸ் காலிங் பெல்" அதாவது பணியாளர்களை அழைக்கும் பெல்லும் தலைக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பம் ரயில் எங்கு செல்கிறது, பயணி இறங்கும் ரயில் நிலையம் எப்பொழுது வரும், எத்தனை மணி நேரப்பயணம், அடுத்து எந்த ரயில் நிலையம் வரப்போகிறது என அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் பயணிகளின் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள எல்.சி.டி திரையில் கொண்டுவந்து தருகிறது.

Anubhuti coach

இதன் வெளிப்புறம் முழுதும் "ஆன்டி - கிராஃபிட்டி" கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பெட்டியின் வெளிப்புறம் பணியாளர்கள் எளிதில் சுத்தம் செய்யவும், தண்ணீரிலிருந்து துருப்பிடிக்காமலும், புற ஊதாக்கதிர்களிலிருந்து பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலும் பாதுகாக்கும் பெயின்டாகும். அனுபூதியில் நாம் பயணம் செய்ய சதாப்தி ரயிலின் எக்ஸ்கியூடிவ் வகுப்பு கட்டணத்திலிருந்து 1.2 மடங்கு அதிகமாக இருக்கும். அதனுடன் இட ஒதுக்கீடுக் கட்டணம், சூப்பர் ஃபாஸ்ட் சர்க்கார்ஜ், ஜி.எஸ்.டி. போன்ற இதரக் கட்டணங்கள் பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான பயணக் கட்டணம் இதர ரயில்களுக்கு விதிக்கப்படுவது போல் சாதாரண விதிகளே பொருந்தும்.

பொதுவாக சதாப்தி ரயில்களில் இருக்கையுடன் கொடுக்கப்படும் மேஜை, எவ்வளவுதான் மடக்கி வைத்தாலும் கால்களை இடித்தவாறே இருக்கும். ஆனால், இப்பெட்டியில் மடிக்கணினி போல மேஜையை அப்படியே மடக்கி பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்து மூடிவிடலாம். அதே போல கால்கள் வைக்க இருக்கைக்கு முன்னால் வஸ்துகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பயோ கழிப்பறைதான் பயன்படுத்தப்படுகிறது.

அனுபூதி பெட்டி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எம்.எல்.ஏ-க்கள் / எம்.எல்.சி -க்களுக்கு வழங்கப்பட்ட இரயில் பயணக் கூப்பன்களும் அனுமதிக்கப்படும். முதல் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பொழுதில் காலியாக உள்ள இடங்கள், நடப்பு டிக்கெட் புக்கிங்-க்கு 10% தள்ளுபடி விலையில் வழங்கப்படும். பயணங்களை ரத்து செய்தல், அதற்கான பணத்தை திரும்பப்பெறுதல் போன்றவற்றிற்கு சாதாரண விதிகள் பொருந்தும். இருக்கைகளில் எல்.சி.டி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் மோடியின் மான் கி பாத் உரைகளைக்கூட கேட்கலாமாம்! 
 


டிரெண்டிங் @ விகடன்