வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (12/01/2018)

கடைசி தொடர்பு:17:23 (12/01/2018)

“எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்!” - சுவாமி விவேகானந்தர் பிறந்ததினச் சிறப்புப் பகிர்வு!

சுவாமி விவேகானந்தர்

“தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து ஆயிரம் தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத்திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய ஆயிரம் தடவை முயலுங்கள்; அந்த ஆயிரம் தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள்; முயற்சியைக் கைவிடாதீர்கள்” என்றவர் சுவாமி விவேகானந்தர். அவருடைய பிறந்த தினம் இன்று.

“உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன” என்று சொல்லி, அதன்படி வாழ்ந்த சுவாமி விவேகானந்தர், ஒருசமயம் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது... அவர் இருந்த நீரோடைக்கு அருகில் இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் லேசாக அசைந்துகொண்டிருந்தன. அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால், அவர்களால் ஒரு முட்டையோட்டைக்கூடச் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலைப் பார்த்த விவேகானந்தர் புன்னகைத்தபடி இருந்தார். 

முட்டையோடுகளைச் சுட்டுத்தள்ளிய சுவாமிஜி!

இதைக் கண்ட ஓர் இளைஞன் அவரிடம், ‘‘பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல்போன்று தெரியும். ஆனால், நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல’’ என்றான். உடனே, விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறிவைத்துச் சுட ஆரம்பித்தார். அங்கு மிதந்த அத்தனை முட்டையோடுகளையும் அவர் சுட்டுத் தள்ளினார். இதைப் பார்த்து பெரிதும் வியப்படைந்த இளைஞர்கள், அவரிடம்... ‘‘நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டுத் தள்ளியிருக்கிறீர்கள்’’ என்றனர். 

விவேகானந்தர்அதற்கு விவேகானந்தர், ‘‘என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன்முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்’’ என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள், ‘‘அப்படியானால் ஒரு குறிகூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது’’  என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், ‘‘எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும்’’ என்று பதிலளித்தார்.

‘‘எல்லா ஆற்றலும் உன்னில் உள்ளது. உங்களால் எதையும் மற்றும் எல்லாவற்றையும் செய்ய முடியும். அதை நம்புங்கள், நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்று நம்பாதீர்கள்’’ என்று இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியர் சுவாமி விவேகானந்தர். அதேவேளையில், ‘‘வெற்றிகளைச் சந்தித்தவன் இதயம், பூவைப்போல் மென்மையானது; தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பைவிட வலிமையானது’’ என்று சொல்லி அவர்களின் மனதைத் திடப்படுத்தியவர் அவர்.

‘‘எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்!’’  

இன்னொரு சமயம், அமெரிக்காவில் நண்பர் ஒருவருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கு வழியில் இருந்த கால்ஃப் விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு சிறிய குழியில் தூரத்திலிருந்து பந்தைச் சரியாக அந்தக் குழியில் விழவைக்க வேண்டும். அதுதான் போட்டியின் விதி. விவேகானந்தருக்குப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. ‘‘ஒவ்வொருவருக்கும் நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்’’ என்று சொல்லப்பட்டது. ‘‘எனக்கு ஒரேயொரு வாய்ப்பு போதும்’’ என்றார் விவேகானந்தர். அருகிலிருந்த நண்பர், ‘‘இது முடியாது’’ என்றார். ஆனால் விவேகானந்தர், ஒரு வாய்ப்பிலேயே பந்தைக் குழிக்குள் சரியாகச் செலுத்திவிட்டார். அவருக்குப் பரிசு கிடைத்தது. அவருடைய நண்பர், ‘‘எப்படி இது உங்களால் முடிந்தது’’ எனக் கேட்டார். அதற்கு விவேகானந்தர், ‘‘கிடைக்கும் வாய்ப்பைச் சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும்; திறமைகளைச் செயலில் காட்ட வேண்டும்; பயன்பாடுகளை நினைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று பதிலளித்தார்.

எவருக்கும், வாய்ப்புகள் என்பது வாசற்கதவுகளைத் தட்டிக்கொண்டிருப்பதில்லை... ஆனால், வாய்ப்பு வரும்பட்சத்தில் அதனை அவர்கள் துணிவுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதற்கு சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களே உதாரணம். 
பலவீனத்தோடு வாழ்ந்த இளைஞர்களிடம், ‘‘பலமே வாழ்க்கை... பலவீனமே மரணம்’’  என்று நம்பிக்கை வித்துகளை விதைத்த விவேகானந்தரை... இளம்வயதிலேயே இந்த மண் வசப்படுத்திக்கொண்டது, இளைஞர்களுக்கு ஏமாற்றமே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்