வெளியிடப்பட்ட நேரம்: 09:56 (14/01/2018)

கடைசி தொடர்பு:09:56 (14/01/2018)

9 வயதில் ஆப் டெவலப்பர், 13 வயதில் IBM புரோகிராமர்...கலக்கும் இந்திய சிறுவன் டன்மய் பக்ஷி! #VikatanExclusive

ள்ளிக்கூடத்தை தாண்டிய கல்வி என்பதே இன்றைய சிறுவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. பள்ளி, வீடு, தனிப்பயிற்சி வகுப்புகள் என எப்போதுமே பள்ளி பாடங்கள்தாம் இன்றைய சிறுவர்களின் உலகம். அதைத்தாண்டி சிலபேர்தான் விளையாட்டு, இலக்கியம், அறிவியல் என கலக்கிக்கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரைக்கும் கணினி என்பதே பலருக்கும் கனவாக இருந்தது. ஆனால், தற்போது சிறுவர்களே கணினி கோடிங்கில் கலக்கி வருகின்றனர். அந்தளவுக்குத் தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துவிட்டது. அப்படி இன்றைய யுகத்தின் சாதனையாளர்களில் ஒருவர்தான் டன்மய் பக்ஷி. ஐ.பி.எம் நிறுவனத்தின் வாட்சன் சூப்பர் கணினியின் இளம் நிரலாளர்; ஆப் டெவலப்பர்; நூலாசிரியர்; பேச்சாளர்; கணிதவியல் பயிற்சியாளர்; சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கொண்ட யூ-டியூப் சானலின் அட்மின்; இப்படி நீண்டுகொண்டே போகிறது பக்ஷியின் பெருமைகள். இத்தனைக்கும் பக்ஷியின் வயது வெறும் 14-தான் என்றால் நம்ப முடிகிறதா? 

2003-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த பக்ஷி, தற்போது கனடாவில் வசித்துவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்காக கோவை வந்திருந்தவரை சந்தித்தோம்.

Tanmay bakshi

"இந்த இளம் வயதில் எப்படி இந்த ஆர்வம் உங்களுக்கு வந்தது? எங்கு தொடங்கியது இந்த புரோகிராமர் பயணம்?"

“ஐந்து வயதில் எனக்கு ஒவ்வொன்றும் விளையாட்டு பொம்மையாகத்தான் இருந்தது. கம்ப்யூட்டர் புரோகிராமிங்கும் அப்படித்தான். புரோகிராமிங் என்பது ஒரு வேலை. இதற்கு பணமெல்லாம் கொடுக்கிறார்கள் என்பதே அப்போது எங்களுக்குத் தெரியாது. என்னுடைய அப்பாவும் ஒரு புரோகிராமர்தான். அவர் என்னுடைய ஆர்வத்தையும், விருப்பத்தையும் கண்டுபிடித்து அதனை வளர்ப்பதற்கு உதவினார். FOXPRO, VB போன்ற எளிய கணினி மொழிகளிலிருந்து என் பயணத்தைத் தொடங்கினேன். இன்று AI வரைக்கும் வந்துவிட்டேன்."

"முதல் ஆப் பற்றி?"

"புரோகிராமிங் கற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தபின்னர் எனக்கு எந்தத் தடையும் இல்லை. வேகமாக அவற்றைக் கற்றுக்கொண்டேன். என்னுடைய 9-வது வயதில் tTABLES  என்ற ஐ.ஓ.எஸ் ஆப்பை வடிவமைத்தேன். இது பெருக்கல் வாய்ப்பாட்டை கற்றுக்கொள்ள உதவும் ஒரு ஆப். 2013-ல் காதலர் தினத்தன்று இதனை வெளியிட்டேன். எனக்கு 18 வயது ஆகவில்லை என்பதால் என் பெயருக்கு பதில் ஆப் பெயர் மட்டும்தான் இருந்தது."

"நீங்கள் தற்பொழுது செய்துக்கொண்டிருக்கும் பணி?"

"இப்போது, இரண்டு வருடங்களாக செயற்கை நுண்ணறிவை உடல்நலப் பராமரிப்பில் எப்படிப் பயன்படுத்தலாம் என்று மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறேன். தகவல்பரிமாற்றத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவில் உள்ள ஒரு பெண்மணிக்கு உதவும் ஒரு கூட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளேன் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.பி.எம். வாட்சன் போன்ற அமைப்புமுறைகளின் ஆற்றலைக் கொண்டு அந்தப் பெண்ணுக்குச் செயற்கைத் தகவல்பரிமாற்றத் திறன் அளிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இப்படி நான் கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தனி யூ-டியூப் சானல் ஒன்றும் நடத்திவருகிறேன்."

டன்மய் பக்ஷி

"இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறுங்களேன்?"

"இந்த திட்டத்திற்கு பெயர் Cognitive Story. அந்தப் பெண்ணுக்கு ஏழு வயது இருக்கும் போது, சரியாகத் தகவல்பரிமாற்றம் செய்துகொள்ள முடிந்தது. இப்பொது அந்தப் பெண்ணுக்கு 29 வயது ஆகிறது, அவரால் பேசவோ கைகால்களை அசைக்கவோ முடிவதில்லை, “பூ” என்ற ஒலியை மட்டுமே அந்தப் பெண்ணால் எழுப்ப முடிகிறது. அதனால் அந்தப் பெண்ணை “பூ” என்றே குறிப்பிடுவோம். இப்போது வெளிஉலகுடன் தகவல்பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் திறனை அந்தப் பெண் வளர்த்துக்கொள்வதற்கு எப்படி Cognitive Technology-யைப் பயன்படுத்த முடியும் என்றுதான் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். அந்தப் பெண் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்காக மூளையின் EEG அலைகள், cognitive computing, செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம்.

"செயற்கை நுண்ணறிவியல் மனித இனத்திற்கு ஆபத்தாக முடியும் எனக் கூறப்படுவதை குறித்து உங்களது கருத்து?"

"இதற்கான பதில் மிகவும் எளிமையானது. அறிவியல் எப்போதுமே ஆக்கம், அழிவு என இரண்டு பக்கங்களைக் கொண்டது. அதேதான் AI-க்கும். செயற்கை நுண்ணறிவால் நமக்கு நிறைய பலன்கள் ஏற்படும். உதாரணமாக மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் புற்றுநோயைக் கூட குணப்படுத்த முடியும். இன்னும் இப்படி நிறைய சொல்லலாம். ஆபத்தை மட்டுமே பார்த்தால் இந்த நன்மைகளை எல்லாம் இழந்துவிடுவோம்."

"AI கற்றுக்கொள்ள எளிமையானதா?"

"நிச்சயமாக. ஆனால், அடிப்படைகளில் கவனம் செலுத்தவேண்டும். டேட்டா சயின்ஸூம் முக்கியம். எனவே புள்ளியியல் மற்றும் கணிதமும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்."

"உங்களுடைய “Tanmay Teaches” யூடியூப் சேனலை நிறையபேர் தொடர்ந்து பின்தொடர்கிறார்களே...அதைப்பற்றி?"

"புரோகிராமிங்கில் ஆர்வமுள்ள பல மாணவர்களுக்கு உதவும் நோக்கில்தான் என் சானலைத் தொடங்கினேன். தற்போது அதை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தொடவுள்ளது. ஐ.ஓ.எஸ் செயலியை உருவாக்கும் 'ஹலோ ஸ்விப்ட்' என்ற நூலையும் எழுதியுள்ளேன்."

"14 வயது சிறுவனான டன்மய்க்கு கேம் விளையாட எல்லாம் நேரமிருக்கிறதா?"

(சிரிக்கிறார்) "தற்போது “American Truck Simulator” விளையாடிக் கொண்டிருக்கிறேன். அதுவும் தானியங்கி கார்களை டெவலப் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பித்தது. அவ்வப்போது விளையாடுவேன்"

"உங்களின் ரோல்மாடல் யார்?"

"முன்னாள் ஆப்பிள் சி.இ.ஓ. ஸ்டீவ் ஜாப்ஸ்தான். குறிப்பாக அவருடைய பணியில் அவருக்கிருந்த தீவிர விருப்பமும் அர்ப்பணிப்பும்தான் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது"

டன்மய் பக்ஷியின் பெற்றோர்கள்

அருகில் இருந்த டன்மயின் பெற்றோர்களிடம் பேசினோம்.

 “டன்மய் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே, அவன் மற்றவர்களை விடவும் மாறுபட்டவன் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே எங்களால் முடிந்தவரை எல்லா உதவிகளையும் அவனுக்குச் செய்துவந்தோம். அவனுக்குக் கிடைத்த வசதிகளும், தற்போதைய தொழில்நுட்பங்களும் மட்டுமே அவனுடைய வெற்றிக்குக் காரணமில்லை.அவனுடைய ஆர்வமும், தொடர்ச்சியான தேடலும்தான் அவனை இந்தளவுக்குக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது" என்கிறார் டன்மய்யின் அம்மா சுமிதா பக்ஷி.

டன்மயின் தேடல்கள் தொடரட்டும்!


டிரெண்டிங் @ விகடன்