”இன்னும் 50 ஆண்டுகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கலாம்..!” - என்னய்யா சொல்றீங்க?

சுற்றுச்சூழல்

இன்னும் சில மாதங்களில், சூரியன் மீண்டும் தனது வேலையைக் காட்ட தொடங்கிவிடும். மார்கழி மாதத்தின் குளிரைத் தற்போது அனுபவிக்கும் மக்கள் இயற்கையின் அடுத்த தாக்குதலுக்குத் தயாராக இருப்பார்கள். அடுத்தடுத்த மாதங்களில், படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும் வெப்பம், அக்னி நட்சத்திரம் நாளில் உச்சத்தைத் தொடும். குளங்களும் கிணறுகளும் வறண்டுபோகும். அணைகளும் ஏரிகளும் தங்களிடம் இருக்கும் கொஞ்ச நீரையும் குடிநீருக்காக வழங்கிக்கொண்டிருக்கும். ஊரே மழையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் போது, ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மழையைக் கொண்டுவரும். அதன்பிறகு, மீண்டும் குளிர்காலம், கோடைக்காலம் என ஒரு சுழற்சியில் காலநிலை மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும். இங்கே இப்படியென்றால், உலகின் வேறு இடங்களில் வெவ்வேறு விதமான காலநிலை சுழற்சிகள் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் எனப் பருவநிலைகள் ஓரளவுக்கு சுழற்சியில் இருப்பதால் சமாளிக்க முடிகிறது. ஆனால், இது அதிக காலம் நீடிக்கப்போவதில்லை என்று அதிர வைத்திருக்கிறது ஒரு ஆய்வறிக்கை.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.ஒ.பி எனும் நிறுவனம், சுற்றுச்சூழல் தொடர்பான ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது. அதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையில், 2070-ம் ஆண்டில் சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளில் கோடைக்காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வெப்பமயமாதலின் விளைவு

உலக வெப்பமயமாதல்

கடந்த நூற்றாண்டிலிருந்து புவி வெப்பமயமாதல் என்ற விஷயம் அதிகமாக பேசப்பட்டுவருகிறது. பசுமைக்குடில் வாயுக்களால் பூமியின் வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே இருப்பதையும், அதன் காரணமாக பருவ மாற்றங்கள் ஏற்படுவது, கடலின் நீர்மட்டம் அதிகரிப்பது போன்ற சுற்றுச்சூழல் மாறுபாடுகள் நிகழ்வதையும் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஈதன் டிகாஃ பல், ரெட்லி எம்ஹார்டன், மற்றும் அலெக்ஸ்டி செர்பினின் என்ற மூவரும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை உருவாக்கியுள்ளார்கள். ஓர் இடத்தின் வெப்பநிலையை அளப்பதற்கு 'wet-bulb temperature' மற்றும் 'dry-bulb temperature' என்ற இருவேறு முறைகளைப் பயன்படுத்தலாம். இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது dry-bulb temperature தான். இதற்கு மாறாக, wet-bulb temperature முறையில் வெப்பத்தை அளவிடும் கருவியில் ஈரப்பதம் மிக்க ஒரு பொருள் பொருத்தப்படும். கருவியைச் சுற்றி இருக்கும் காற்று, வெப்பம் அதிகமாகும்போது ஈரப்பதம் மிக்க ஒரு பொருளிலிருந்து நீர் ஆவியாகும். அப்போது, கருவியில் வெப்பநிலை குறைவாகவே காட்டும். எனவே, இந்த முறையில் கருவி வெப்பநிலையை குறைவாகக் காட்டினாலும் வெப்பநிலை அதிகமாக இருப்பதாகவே அர்த்தம்.

 அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள்

Photos Courtesy: Ethan Coffel

உலகில், தனித்துவமான காலநிலை இருக்கும் பகுதிகளில் ஒன்று, சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதி. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை தற்போது 31°C-யாக இருப்பதாக இந்த அறிக்கையில் இவர்கள் கூறியிருக்கிறார்கள். 2070-ம் ஆண்டுவாக்கில் இந்த வெப்பநிலை பன்மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியாவது தடுக்கப்படாவிட்டால், காலநிலை சுழற்சியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் மக்கள்தொகை வேகமாக உயர்ந்துவருவது இந்தப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை மேலும் மோசமாக்கக்கூடும்  என்று கூறுகிறார்கள்.

மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்படப்போகிறார்கள்

கோடைக்காலம்

wet-bulb temperature அளவீட்டின்படி பார்த்தால், காற்றில் தொடர்சியாக ஈரப்பதம் அதிகரித்திருப்பதாகவே தெரிகிறது. இது ஒரு நீராவியைப் போல செயல்படுவதால், அது வெப்பமாக இருந்தாலும், ஈரப்பதமகவே கருதப்படும். இதுபோன்ற நிகழ்வுகளால், மனிதனின் உடலைக் குளிர்விக்கும் திறனில் இடையூறு ஏற்படலாம் எனவும், இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படி திடீரென்று வெப்பம் அதிகரிப்பதால், மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள். 1995-ம் ஆண்டின் கோடைக்காலத்தில்,  சிக்காகோ நகரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட்டாகப் பதிவுசெய்யப்பட்டது. இந்த வெப்பநிலையின் காரணமாக, 739 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டது. கடந்த வருடம்கூட சென்னையில் மீனம்பாக்கம் பகுதியில் வெப்பநிலை 43.6 °C யாக பதிவுசெய்யப்பட்டது. இப்படி வெப்பம் அதிகரித்த  நிகழ்வுகள் பல இடங்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இயல்பாகவே, ஒவ்வொரு வருடமும் கடந்த வருடத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருப்பதாகவே மக்கள் உணர்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புவி வெப்பமயமாதல்... பருவநிலை மாற்றம் போன்ற கருத்துகள் போலியானது என்று கூறிவரும் நிலையில், ஸ்டீஃபன் ஹாக்கிங் இதுபோன்று எழும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். "காலநிலை மாற்றங்களால் பூமி வெள்ளி கிரகத்தைப்போல மாறப்போவது உறுதி. புவி வெப்பமயமாதல், பருவநிலை  மாற்றம் போன்ற கருத்துகளை மறுப்பவர்கள் வெள்ளி கிரகத்தைச் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அதற்கான பணத்தை நான் செலுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார். அண்மையில் ஓசோன் படலத்தின் பாதிப்பு படிப்படியாக் குறைந்துவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்த நிலையில் புவி வெப்பமயமாதல் தொடர்பான கருத்துகள் மீண்டும் எழுப்பப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!