ஆதரவற்ற குட்டி யானைகளுக்காக ஸ்பெஷல் பால் தயாரித்த பெண்! - ஓர் உண்மைக் கதை #MotivationStory | An African Love Story by Daphne sheldrick

வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (16/01/2018)

கடைசி தொடர்பு:09:20 (16/01/2018)

ஆதரவற்ற குட்டி யானைகளுக்காக ஸ்பெஷல் பால் தயாரித்த பெண்! - ஓர் உண்மைக் கதை #MotivationStory

கதை

`ரு விலங்கின் கண்களுக்குப் பிரமாதமான ஒரு மொழியைப் பேசும் சக்தி இருக்கிறது’ என்கிறார் தத்துவமேதை மார்ட்டின் பபர் (Martin Buber). அந்த மொழியைப் புரிந்துகொண்டவர்கள் சக பிராணிகளிடம் நேசம் பாராட்டுகிறார்கள்; தெருவில் அனாதையாகத் திரியும் பூனைக்குட்டியைக் காப்பாற்றி வளர்க்கிறார்கள்;  ஒரு நாய்க்குட்டி அடிபட்டுக்கிடந்தால், புளூ கிராஸ் அமைப்புக்கு போன் செய்ய ஓடுகிறார்கள். அந்த மொழி புரியாதவர்கள், அதை உதாசீனப்படுத்துகிறார்கள்; அடித்து விரட்டுகிறார்கள். இந்த உலகில் மனிதன் வாழ்வதற்கு எவ்வளவு உரிமையிருக்கிறதோ, அவ்வளவு உரிமை எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. ஆனால், எத்தனை வேட்டையாடுதல் தடுப்புச் சட்டம், மிருகவதை தடுப்புச் சட்டம் போட்டாலும், இறைச்சிக்காகவும், பிற பயன்களுக்காகவும் விலங்குகளை அடித்துக் கொல்வது இன்றைக்கும் உலகமெங்கும் தொடர்கதை. அது போன்றவர்களிடமிருந்து பிராணிகளைக் காப்பாற்றும் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் பலர் விலங்குகளைக் காப்பாற்றுவதை லட்சியமாகவே வைத்திருப்பவர்கள். அவர்களில், `யானைகளின் அன்னை’ என்று போற்றப்படும்   டேஃப்னே ஷெல்டிரிக் (Daphne Sheldrick) செய்த சேவை மகத்தானது. அவர் காப்பாற்றி வளர்த்த யானைகள் கணக்கிலடங்காதவை. இளகின மனம் கொண்ட அவரின் கதையைப் பார்ப்போமா? 

டேஃப்னே ஷெல்ரிக்

                                                                                                      ( PC:sheldrickwildlifetrust.org )

ஆப்பிரிக்காவில் மிருகங்களின் மேல் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மிக அதிகம். அதிலும் யானைகள் வேட்டையாடப்படுவது அன்றாடம் நடக்கும் அவலம். தந்தங்களுக்காக கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றன யானைகள்.  ஆசியாவின் பல நாடுகளில் யானைத் தந்தம் விலைமதிப்பில்லாதது; அதை வைத்திருப்பது கௌரவம்; நல்ல முதலீடும்கூட. இதன் காரணமாகவே யானைகளின் எண்ணிக்கை மளமளவென சரிந்துவருகிறது. அப்பாவி யானைகள் வேட்டையாடுப்படுவதை எதிர்த்து தைரியமாகப் போராடினார்  கென்யாவைச் சேர்ந்த டேஃப்னே ஷெல்டிரிக். 

1934-ம் ஆண்டு, ஜூன் 4-ம் தேதி கென்யாவில் பிறந்தார் டேஃப்னே ஷெல்டிரிக். அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் பல செல்லப் பிராணிகள் புடைசூழ வளர்ந்தார். இயல்பாகவே அவருக்கு விலங்குகளின் மேல் பிரியம் அதிகமிருந்தது. அது இறுதிவரை தொடரவும் செய்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் டேவிட்டுடன் இணைந்து, கென்யாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவான ஸாவோ-ஈஸ்ட் நேஷனல் பார்க்கில் (Tsavo East National Park) பணியாற்றினார். அப்போதுதான் காட்டில் விலங்குகள் வேட்டையாடப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்படும் குட்டிகளின் மேல் அவர் கவனம்திரும்ப ஆரம்பித்தது.  

குட்டிகளை கவனித்துக் கொள்ளும் டேஃப்னே ஷெல்ரிக்

                                                                                                    ( PC:sheldrickwildlifetrust.org )

டேஃப்னே ஷெல்டிரிக்கும் அவர் கணவரும் சேர்ந்து காட்டில் அனாதையாக்கப்படும் வனவிலங்குகளுக்காக ஓர் உயிரியல் பூங்காவை உருவாக்கினார்கள். முக்கியமாக காட்டில் நிராதரவாக்கப்படும் குட்டி யானைகளுக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றியது அவர்களின் உயிரியல் பூங்கா. பெரிய யானைகள் வேட்டையாடிக் கொல்லப்படும்போது, அவற்றின் குட்டிகளும் கிட்டத்தட்ட மரணத்துக்குத் தள்ளப்பட்டுவிடும். பல குட்டி யானைகள் காப்பாற்றுவதற்கு ஆளின்றி, இரை கிடைக்காமல் பட்டினியிலேயே உயிரை விடுவதும் உண்டு. அவற்றுக்கெல்லாம் அடைக்கலம் கொடுப்பதையே தன் முக்கியமான வேலையாக வைத்துக்கொண்டார் டேஃப்னே ஷெல்டிரிக். 
`` `எதை விதைக்கிறோமோ அதுவே முளைக்கும்’ என்பது யானைகளுக்கும் பொருந்தும். யானையை நல்ல முறையில் நாம் நடத்தினால், நம்மிடமும் பாசத்தோடும் அன்போடும் நடந்துகொள்ளும். அதனிடம் வன்முறையைக் கையாண்டால், நம் மீது பகைகொள்ளும். நாம் அதை எப்படித் தொடுகிறோம் என்பதைக்கூட அதனால் புரிந்துகொள்ள முடியும். ஒரு பறவையின் இறகு விழுந்தால்கூட யானையால் அதை உணர முடியும்’’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் டேஃப்னே ஷெல்டிரிக். 

யானைக்குட்டிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆதாரமான உணவு பால்தான். தாய், தந்தையைப் பிரிந்து அனாதையாக வந்து சேரும் குட்டி யானைகளுக்கு பசுவின் பால் ஒத்துக்கொள்வதில்லை. அந்தப் பாலை மட்டும் புகட்டி, அவற்றை நீண்ட நாள்களுக்குக் காப்பாற்றுவது மிகக் கடினம். டேஃப்னே ஷெல்டிரிக் சோர்ந்து போய்விடவில்லை. குட்டி யானைகளைக் காப்பாற்றுவதற்காக, பல மாதங்கள் முயற்சி செய்து, ஒரு ஸ்பெஷல் பால் கலவையைக் கண்டுபிடித்தார். அது, ஒரு சின்னஞ்சிறு யானைக்குட்டிக்கு ஜீவாதாரமான உணவாக அமைந்தது. பல குட்டி யானைகள் உயிர் பிழைத்து வளர உதவியது. கணவரின் மரணத்துக்குப் பின்னர், அவர் நினைவாக, `டேவிட் ஷெல்டிரிக் வைல்டுலைஃப் ட்ரஸ்ட்’ என்ற ஒன்றை ஆரம்பித்தார் டேஃப்னே ஷெல்டிரிக். வனவிலங்குகளைப் பாதுகாக்கும் அரணாக அவருடைய யானைகள் காப்பகம் இருந்தது.  

யானையுடன் ஷெல்ட்ரிக்

                                                                                                             ( PC:sheldrickwildlifetrust.org )

யானைகள் மனிதர்களைவிட நுட்பமான உணர்வுகளைக்கொண்டவை. கண்முன்னே தங்கள் பெற்றோர்களைப் பறிகொடுத்துவிட்ட அதிர்ச்சியோடும் துயரத்தோடும் வரும் குட்டி யானைகளை அரவணைத்துக்கொண்டார் டேஃப்னே ஷெல்டிரிக். வெகு தொலைவில் தங்கள் அப்பா அம்மா கொல்லப்பட்டது நிகழ்ந்திருந்தாலும், அந்த நினைவு அத்தனை எளிதாக குட்டி யானைகளிடமிருந்து விலகுவதில்லை. அதை மறக்க அவற்றுக்குப் பல மாதங்களாகும். அந்த நேரத்தில் அவற்றுக்குத் தேவை ஓர் அரவணைப்பு, பரிவு காட்டும் நெஞ்சம். இதை நன்கு உணர்ந்திருந்தார் டேஃனே ஷெல்டிரிக். மிக மிக அர்ப்பணிப்போடு கூடிய கவனிப்பும், உண்மையான அன்பும்தான் குட்டிகளை, துயரத்திலிருந்து மெள்ள மெள்ள மீட்க உதவும்.  அப்படி அன்பு காடுகிறவர்களை யானைகள் ஒருபோதும் மறப்பதில்லை. 
இன்றைக்கு டேஃப்னே ஷெல்டிரிக்கின் யானைகள் காப்பகம் நூற்றுக்கணக்கான யானைகளுக்குப் புகலிடமாக இருக்கிறது. அவருடைய  அமைப்பு, யானைகள் கொல்லப்படுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருகிறது. யானைகளைக் காக்கவேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருகிறது. டேஃப்னே ஷெல்டிரிக், `யானைகளின் அன்னை’ என்று அழைக்கப்படுகிறார். அவர் செய்த சேவைகளுக்காக பல விருதுகள் அவரைத் தேடி வந்தன...

அன்பாக கவனித்துக் கொள்ளும் ஷெல்ட்ரிக்

                                                                                                  ( PC:sheldrickwildlifetrust.org )

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிஸபெத் கொடுத்த அரசாணை உட்பட.  வனவிலங்குகளின் மேல் மட்டுமல்ல, இந்த உலகிலுள்ள அனைத்து உயிர்களின் மேலும் நாம் அக்கறைகொள்ள வேண்டும், அன்பு பாராட்ட வேண்டும் என்பதற்கு சாட்சி, டேஃப்னே ஷெல்டிரிக்கின் வாழ்க்கைக் கதை! 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்