ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் முதல் பஜாஜ் அவென்ஜர் வரை... 2018- அசத்தல் பைக்குகள் என்னென்ன?! | List of bikes launched in 2018 so far

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (16/01/2018)

கடைசி தொடர்பு:16:47 (16/01/2018)

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் முதல் பஜாஜ் அவென்ஜர் வரை... 2018- அசத்தல் பைக்குகள் என்னென்ன?!

2018-ம் ஆண்டில் வாகனங்களின் விலை எவ்வளவு உயரப்போகிறது என்பதைப் பார்த்தோம். தற்போது 2018 தொடங்கி பொங்கல் முடிந்துவிட்ட நிலையில், இந்த 2 வாரங்களில் அறிமுகமாகி உள்ள புதிய டூ-வீலர்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை!

 

tvs victor

 

டிவிஎஸ் விக்டர்: கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் டூயல்-டோன் Gloss (கறுப்பு - மஞ்சள்) கலரில் வெளிவந்த விக்டர் பைக்கின் பீரிமியம் எடிஷன் மாடலில், 2 புதிய டூயல்-டோன் Matt ஃப்னிஷ் கலர் ஆப்ஷன்களைக் (நீலம், சில்வர்) களமிறக்கியுள்ளது டிவிஎஸ். இதில் வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது டூயல் டோன் (கறுப்பு - பீஜ்) சீட், தங்க நிற கிளட்ச் கவர், க்ரோம் ஃப்னிஷுடன் கூடிய பக்கவாட்டு பாடி பேனல்கள், க்ரோம் க்ராஷ் கார்டு, LED DRL மற்றும் க்ரோம் பட்டை உடன் கூடிய ஹெட்லைட், பாடி கலரில் க்ராப் ரெயில் எனக் குறிப்பிடத்தக்க வசதிகள் இடம்பெற்றுள்ளன. 2018 டிவிஎஸ் விக்டர் பீரிமியம் எடிஷனின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, 57950 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

bajaj v15

 

பஜாஜ் V12 & V15: 'விக்ராந்த் கப்பலின் இரும்பைக் கொண்டிருக்கும் பைக்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான V சீரிஸ் (125சிசி மற்றும் 150சிசி) பைக்ஸ், 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2018-ம் ஆண்டுக்கான மாடலின் பின்பக்கத்தில், பூட்டும் வசதியுடன் கூடிய கவுலுக்குப் பதிலாக, குஷனுடன் கூடிய பேக் ரெஸ்ட்டை பொருத்தியுள்ளது பஜாஜ். மற்றபடி பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. தற்போது 200சிசிக்கு உட்பட்ட பஜாஜ் பைக்குகளுக்கு, ஒரு வருட இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2018 V சீரிஸ் பைக்குகளின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, 58,163 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.

 

2018 பைக்

 

பஜாஜ் அவென்ஜர் 220: கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்த இன்ட்ரூடர் 150 பைக்குக்குப் போட்டியாக, மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் 220 சீரிஸ் மாடல்களைக் (ஸ்ட்ரீட், க்ரூஸ்) களமிறக்கியுள்ளது பஜாஜ். க்ரூஸ் 220 பைக்கில் Gloss வெள்ளை நிறம், நீல நிற பேக்லிட் கொண்ட டிஜிட்டல் மீட்டர், வைஸர் உள்ளது. இதுவே ஸ்ட்ரீட் 220 பைக் என்றால், Matt Black நிறம், ஆரஞ்ச் நிற பேக்லிட் கொண்ட டிஜிட்டல் மீட்டர், குஷனுடன் கூடிய க்ராப் ரெயில் இருக்கின்றன. மற்றபடி இந்த இரண்டு மாடல்களிலும் பொதுவாக LED DRL உடனான ஹெட்லைட், Full டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய டெயில் லைட், புதிய க்ராஃபிக்ஸ், வெள்ளை மற்றும் கறுப்பு நிற ஆப்ஷன்கள் உள்ளன. 2018 பஜாஜ் அவென்ஜர் 220 பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, 93,786 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.

 

bajaj

 

பஜாஜ் டோமினார் D400: 2016-ம் ஆண்டின் இறுதியில், ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்குப் போட்டியாக, பஜாஜ் அறிமுகப்படுத்திய பைக்தான் டோமினார் D400. தற்போது Matt Black, Gloss சிவப்பு மற்றும் நீலம் எனும் 3 புதிய கலர்களில், 2018-ம் ஆண்டுக்கான மாடலைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். இதில் இன்ஜினின் அடிப்பகுதி கறுப்பு நிறத்துக்கும், அலாய் வீல்கள் தங்க நிறத்துக்கும் மாறியுள்ளன. மற்றபடி பைக்கில் மெக்கானிக்கலாகவும், விலையிலும் எந்த மாற்றங்களும் இல்லை. எனவே, 2018 டோமினார் D400 பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, முன்பைப் போலவே 1,42 லட்சம் ரூபாயில் இருந்தே ஆரம்பமாகிறது. புதிய கலர் ஆப்ஷன்கள், இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துமா என்பது, போகப் போகத் தெரியும்.

 

2018 bike launches

 

ஹீரோ HF டான்: 'இந்தியாவில் அதிக டூ-வீலர்களை விற்பனை செய்யும் நிறுவனம்' என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விலை குறைவான மாடல்தான் HF டான். ஆனால், குறைவான விற்பனை எண்ணிக்கை காரணமாக, கடந்தாண்டு மே மாதத்தில் இதன் உற்பத்தியை இந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இந்நிலையில், ஒரிசாவில் இந்த பைக்கை சத்தமில்லாமல் விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது ஹீரோ. கறுப்பு மற்றும் சிவப்பு எனும் 2 நிறங்களில் கிடைக்கும் 2018-ம் ஆண்டுக்கான மாடலின் BS-4 இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட் - AHO ஹெட்லைட் - சஸ்பென்ஷன் - ஸ்போக் வீல்கள் - க்ராஷ் கார்டு - க்ராப் ரெயில் என பைக் முழுவதும் கறுப்பு நிறம் வியாபித்திருக்கிறது. மற்றபடி முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. பஜாஜ் CT 100 B பைக்குக்குப் போட்டியாக வெளிவந்திருக்கும் 2018 ஹீரோ HF டான் பைக்கின் ஒரிசா எக்ஸ் ஷோரும் விலை, 37,400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ktm duke 390

கேடிஎம் டியூக் 390: ‘அதிரடியான பெர்ஃபாமென்ஸ் - அட்டகாசமான விலை’ என்ற புகழுக்குச் சொந்தமான பைக்தான் கேடிஎம் டியூக் 390. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த பைக்கின் இரண்டாம் தலைமுறை மாடலை, தனக்கே உரித்தான ஆரஞ்ச் நிறத்தில் இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டியூக் 390 பைக்குகள், வெள்ளை நிறத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'Indian Motorcycle of the Year 2018' விருது வென்றதைக் கொண்டாடும் விதமாக, 2018-ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட மாடலை, வெள்ளை நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது கேடிஎம். இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் LED ஹெட்லைட் ஆகியவற்றில் இருந்த பிரச்னைகளை, சாஃப்ட்வேர் அப்டேட் வாயிலாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜின் சூட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக, ரேடியேட்டரில் இருக்கும் ஃபேனின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஜின் ஐடிலிங், 1200 - 1800 ஆர்பிஎம்மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. 2018 கேடிஎம் டியூக் 390 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை, 2.38 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

kawasaki ninja 650

கவாஸாகி நின்ஜா 650: 'கொடுக்கும் காசுக்கு மதிப்புக்கேற்ற மிட் சைஸ் ஸ்போர்ட்ஸ் டூரர்' என்ற பெயர், கவாஸாகியின் நின்ஜா 650 பைக்கையே சேரும். கடந்தாண்டு மார்ச் மாதத்தில், முற்றிலும் புதிய நின்ஜா 650 பைக்கை, கறுப்பு (சிங்கிள் டோன்) மற்றும் கறுப்பு - பச்சை (டூயல் டோன்) கலர்களில், இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இடையே கறுப்பு - பச்சை கலருக்கு மாற்றாக, KRT எடிஷனைக் கடந்த நவம்பரில் வெளியிட்டது கவாஸாகி. இந்நிலையில், கறுப்பு நிறத்துக்குப் பதிலாக, நீல நிறத்தில் நின்ஜா 650 பைக்கை இந்நிறுவனம் களமிறக்கியுள்ளது. மற்றபடி பைக்கில் மெக்கானிக்கலாகவும், விலையிலும் எந்த மாற்றங்களும் இல்லை. 2018 கவாஸாகி நின்ஜா 650 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை, முன்பைப் போலவே 5.33 லட்ச ரூபாய் என்றளவில் இருக்கிறது.

 

yamaha fzs-fi

 

யமஹா FZS-Fi: '150-160 சிசி பிரிவில், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை ஸ்டாண்டர்டாக கொண்டிருக்கும் பைக்' என்ற புகழுக்குச் சொந்தமான பைக்தான் யமஹா FZS-Fi. 2008-ம் ஆண்டில் முதல் தலைமுறை மாடல், 2014-ம் ஆண்டில் இரண்டாம் தலைமுறை மாடல் என இந்நிறுவனத்தின் FZ சீரிஸ் பைக்குகள், இந்தியாவில் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் விதமாக, பின்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் நீல நிற கலர் ஆப்ஷனுடன் கூடிய FZS-Fi பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளிவந்த FZ-25 பைக்கில் இருக்கும் ஷார்ப்பான ரியர் வியூ மிரர்கள், 17 இன்ச் Multi Spoke அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்ஸ் (282 மிமீ - 220 மிமீ) ஆகியவை, அப்படியே FZS-Fi பைக்கிற்கு இடம் பெயர்ந்திருக்கின்றன. இந்த மாற்றங்களால், முந்தைய FZS-Fi பைக்கைவிட இதன் எடை 1 கிலோ அதிகரித்துள்ளது. 2018 யமஹா FZS-Fi பைக்கின் சென்னை எக்ஸ் ஷோரூம் விலை, 86,042 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முன்பைவிட 3 ஆயிரம் ரூபாய் அதிகம்!

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்: ஓரளவுக்கு கட்டுபடியாகக்கூடிய விலையில் ஒரு அட்வென்ச்சர் பைக் வேண்டும் என்பவர்களுக்கு, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்தான் ஒரே சாய்ஸ். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அறிமுகமான இந்த பைக், மெக்கானிக்கலாக சில பிரச்னைகளைச் சந்தித்ததால், விற்பனையில் சரிவு ஏற்பட்டது. மேலும், இது BS-3 விதிகளையே பின்பற்றியதால், இடையே இதன் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. முன்னே சொன்ன பிரச்னைகளைக் களைந்து, BS-4 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கை (Fi இன்ஜின் - மெட்டல் கார்டு உடனான ஆயில் கூலர் - பின்பக்க சீட்டுக்கு கீழே பைகளை மாட்டுவதற்கான மவுண்ட் - Matt கறுப்பு நிற ஃப்யூல் டேங்க் மூடி), கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் களமிறக்கியது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில் Sleet எனும் Matt க்ரே Camouflage கலர் ஆப்ஷன் மற்றும் எக்ஸ்ப்ளோரர் கிட் ஆகியவற்றை, இந்நிறுவனம் இந்த பைக்கில் சேர்த்துள்ளது.

லிமிடெட் எடிஷனாக (500 பைக்குகள்) தயாரிக்கப்பட்டுள்ள இவற்றை வாங்க விருப்பம் உள்ளவர்கள், ராயல் என்ஃபீல்டு வலைதளத்தில் ஜனவரி 12 - 30, 2018 வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 30-ம் தேதி விற்பனை நடைபெற உள்ள நிலையில், அப்போது 5000 ரூபாயை புக்கிங் தொகையாகச் செலுத்த வேண்டும். இதில் வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, Cross Brace மற்றும் Bar End Weight உடன் கூடிய அலுமினியம் ஹேண்டில்பார் - முன்பைவிட அளவில் பெரிய ஸ்டீல் இன்ஜின் கார்டு - ஸ்டீல்லால் ஆன Pannier Mounting Rail - அலுமினியத்தால் ஆன 26 லிட்டர் Pannier ஆகிய வசதிகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. ஆனால், இவற்றை நாம் பெறுவதற்காக, 28 ஆயிரம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்! எனவே, 2018 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் சென்னை ஆன் ரோடு விலை, 2.12 லட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்