பிளவுஸ் அணிய கற்றுக் கொடுத்தது யார்..? புடவையின் கதை | Story of a Saree

வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (16/01/2018)

கடைசி தொடர்பு:20:01 (16/01/2018)

பிளவுஸ் அணிய கற்றுக் கொடுத்தது யார்..? புடவையின் கதை

பண்டிகை என்றாலே புத்தாடை. புத்தாடை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புது உற்சாகம்தான். அதிலும் பண்டிகைக் காலங்களில் பாரம்பர்ய ஆடைகள் அணிவது தனி அழகு. தமிழரின் பாரம்பர்ய உடை எனக் கருதப்படும் புடைவையின் ஆதி முதல் அந்தம் வரையிலான தொகுப்பு இங்கே.

Samantha in Saree

இன்று நாம் பின்பற்றும் புடைவை உடுத்தும் முறை முற்றிலும் மேற்கத்தியர்கள் பின்பற்றிய ஃபேஷன். ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு உடைகள் அணியும் முறை பின்பற்றப்பட்டது. அதுவே பாரம்பர்யம் என நம்பப்பட்டது. கி.பி 300-களில் ஆண், பெண் இருவரும் இணை ஆடை ஏதுமின்றி செவ்வக வடிவிலான துணியை மட்டுமே கட்டியுள்ளனர் என்பதை பழம்பெரும் சிற்பங்கள் மூலம் அறியலாம். 16-ம் நூற்றாண்டில், முகலாயர்களின் ஆதிக்கத்தினால் இந்தியாவுக்கு வந்ததுதான் சல்வார் கமீஸ், கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய உடை என்று தற்போது கருதப்படுகிறது. அதுவரை ஒரே துணியை அணிந்திருந்த மக்கள், இரண்டு பாகங்களாகப் பிரித்து அணியும் முறைக்கு மாறினார்கள். ஆனாலும், இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே இந்த மாற்றம் நிகழ்ந்தது.

செட்டிநாடு அல்லது கண்டாங்கி சேலை, தமிழர்களின் பொக்கிஷமாக நீண்ட நாள் இருந்தது. ரவிக்கை எனப்படும் பிளவுஸ் இல்லாமல், இந்தப் பிளைன் காட்டன் புடைவையைக் கட்டும் விதமும் வித்தியாசம். புடைவையின் விளிம்பு முட்டிக்குக் கீழே வரையில்தான் இருக்கும். வயல்களில் உழவும் கிராமியப் பெண்களுக்கு ஏற்ற உடையாகவும் கருதப்பட்டது. சிவப்பு, பச்சை, ரஸ்ட் நிறங்களில் மட்டுமே ஆரம்பத்தில் கண்டாங்கி சேலைகள் உற்பத்தியானது. பின், வெவ்வேறு வண்ணங்களில் நெய்யப்பட்டது. நாளடைவில் இந்த முறையும் மறைந்தது.

புடவை


19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பால் பிளவுஸ் அணியும் வழக்கம் வந்தது. அன்று வரை பிளவுஸ் அணியாமல் வெறும் புடைவையை மட்டும் அணிந்திருந்தனர். ரவீந்திரநாத் தாகூரின் சகோதரனின் மனைவி ஜெநாநந்தா நந்தினி தேவி மூலம்தான் பிளவுஸ் அணியும் வழக்கம் பிரபலமானது. விமரிசையாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நந்தினி தேவியை அனுமதிக்கவில்லை. காரணம் அவர் பிளவுஸ் இல்லாமல் சேலையை மட்டும் அணிந்திருந்தார். இதனால் நந்தினி தேவி மேற்கத்தியர்களின் ரவிக்கை அணியும் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து 'Blouse ' மற்றும் 'Petticoat ' ஆகிய சொற்கள் தமிழரின் அகராதியில் இடம் பெற்றன.

Nayanthara in Saree

உலகிலேயே தரமான பட்டு வகைகள் கிடைக்குமிடம் காஞ்சிபுரம். இங்கே தயாரிக்கப்படும் பட்டுப்புடைவை, அனைத்துத் தமிழ் பெண்களின் அலமாரியிலும் கண்டிப்பாக இருக்கும். ஆரம்ப காலத்தில் ஜரி விளிம்புகளை மட்டும் கொண்ட காஞ்சிபுரம் புடைவைகள், பின்னாளில் முழு புடைவையிலும் ஜரி பின்னப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதுபோல் 'Customised' புடைவைகளும் பிரபலமாயின. ஊர்த் திருவிழா முதல் திருமணம் வரை அனைத்திலும் பட்டுப் புடைவை உடுத்தும் முறை தமிழர்களின் வழக்கமானது. இப்போது தமிழ் பெண்கள் என்றாலே பட்டுப் புடைவை, தலை நிறைய மல்லிகைப்பூ, மூக்குத்தி, மஞ்சள், கொலுசு போன்றவை முக்கிய அடையாளங்களாகிவிட்டன.

Kanchipuram Saree

ஒரே ஒரு துணியை உடுத்திய காலம் போய் இப்போது புடைவை என்றாலே பிளவுஸ், பெட்டிகோட், சேலை பின் போன்றவை அவசியமாகிவிட்டது. எப்போதும் புடைவையில் பார்த்த பெண்களின் காலம் மலையேறி, பண்டிகை நாள்களில் மட்டுமே புடைவையில் பார்த்து ரசிக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close