Published:Updated:

இந்தப் பிறவியும்  வாழ்வும் நிறைவு பெற திருக்குறள் வழி வாழ வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி உருக்கம்

இந்தப் பிறவியும்  வாழ்வும் நிறைவு பெற திருக்குறள் வழி வாழ வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி உருக்கம்
இந்தப் பிறவியும்  வாழ்வும் நிறைவு பெற திருக்குறள் வழி வாழ வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி உருக்கம்

இந்தப் பிறவியும்  வாழ்வும் நிறைவு பெற திருக்குறள் வழி வாழ வேண்டும்..! எடப்பாடி பழனிசாமி உருக்கம்

'திருக்குறளில் கூறப்பட்டுள்ள குறள்களில் உள்ள கருத்துக்கள்படி, நாம் வாழ வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறவியும், வாழ்வும் நிறைவு பெறும். அதாவது வாழும் கலை முதல் ஆளும் கலை வரை கற்றுத் தரும் ஒரே நூல் திருக்குறள். இந்நூலை கையில் வைத்துக்கொண்டு இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து விடலாம்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. திருவள்ளுவர் விருது - முனைவர் கோ. பெரியண்ணன், தந்தைபெரியார் விருது-  பா.வளர்மதி, அம்பேத்கர் விருது-ஜார்ஜ். கே.ஜே, பேரறிஞர் அண்ணா விருது- அ. சுப்ரமணியன், பெருந்தலைவர் காமராசர் விருது- தா.ரா.தினகரன், மகாகவி பாரதியார் விருது-சு. பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன், பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே. ஜீவபாரதி, தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது -எழுத்தாளர்  வை.பாலகுமாரன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது-ப.மருதநாயகம் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 

முதல்வர் பேசுகையில், ''நம் உயிருக்கு மேலான தமிழை தேன்தமிழே! செந்தமிழே! நற்றமிழே! முத்தமிழே! காப்பியத்தமிழே! கன்னித் தமிழே! பூந்தமிழே! என்று அழைப்பதைவிட ‘தமிழே! தாய்த்தமிழே!’ என்று அழைப்பதில்தான் உணர்வு இருக்கிறது; அழகு இருக்கிறது. மம்மி, மதர், அன்னை, தாய் என்று அழைப்பதைவிட ‘அம்மா’ என்று அழைப்பதில்தான் உயிர் இருக்கிறது. காரணம், ‘அ’ என்கின்ற உயிரெழுத்தும் ‘ம்’ என்கின்ற மெய்யெழுத்தும் ‘மா’ என்கின்ற உயிர்மெய் எழுத்தும் சேர்ந்திருக்கும் ஒற்றை தமிழ்ச் சொல் தான் ‘அம்மா’ என்கின்ற வேத சொல். அதனால்தான் ‘அம்மா’ என்கின்ற சொல்லுக்கு அத்தனை சக்தி இருக்கிறது. இனி எத்தனை காலமானாலும் ‘அம்மா’ என்கின்ற சொல்லால் மட்டுமே தமிழையும், தமிழரையும் காக்கவும், வளர்க்கவும் முடியும்.

தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் தை மாதத்தின் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாளாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். திருவள்ளுவரை நினைவுகூரும் நாளாகவும், திருக்குறள் என்னும் நீதி நெறி நூலை மானுடத்திற்கு வழங்கி தமிழரின் பெருமையை உலகமெல்லாம் பரவச்செய்த திருவள்ளுவருக்கு நன்றி நல்கிடும் விழாவாகவும் இத்திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். ‘தமிழ் ’ மொழி தமிழருக்கு அடையாளம் என்றால், திருக்குறள் தமிழருக்கு முகமாக இருக்கிறது. தமிழை நேசித்தால் பிறந்த நாட்டையும், வணங்கும் தெய்வங்களையும், ஈன்ற பெற்றோரையும் நேசிப்பதற்கும், வணங்குவதற்கும் சமம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை. தாய்மொழியிற் சிறந்த வேறு மொழியுமில்லை’ என்பதை நமக்கு நினைவுபடுத்தவே இப்படிப்பட்ட நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன.

தமிழ் என்பது தமிழர்களின் அறிவு, பண்பாடு, வீரம், நாகரிகம், பழக்கவழக்கம் ஆகிய ஐந்தும் கலந்த ஒரு சுவைமிகு கூட்டுக் கலவை. அதை நாம் பஞ்சாமிருதமாக சுவைக்கலாம் என்று தமிழர் பண்டிகைகள் உலகிற்கு பறைசாற்றுகின்றன. மனிதர்கள் நம் செவியோடு பேசுகிறார்கள் நண்பர்கள் நம் உணர்வுகளோடு பேசுகிறார்கள். இறைவன் நம் ஆன்மாவோடு பேசுகிறார். புத்தகங்கள் மட்டும்தான் நம் மனதோடு பேசுகின்றன என்பார்கள். எந்த நூல்கள் மனிதர்களின் மனதோடு பேசி அவர்களுக்குள்ளே தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றனவோ, அவைதான் உலகத்தில் தலை சிறந்த நூல்களாக, படைப்புகளாக மதிக்கப்டுகின்றன, போற்றப்படுகின்றன. அவற்றையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு நூல் போற்றி வணங்கப்படுகிறது என்றால் அது திருக்குறள் மட்டும்தான். உலகில் உள்ள அத்தனை மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

திருக்குறளைப் போல் அறம் சொன்ன நீதி நூல், உலகில் ஒரு சிலவே, அதனால்தான் இங்கிலாந்து நாட்டின் விக்டோரியா மகாராணி, காலையில் கண் விழித்ததும் திருக்குறளை முதலில் படிப்பார். திருக்குறளை படித்து உணர்வதற்கென்றே இன்னொரு பிறவி எடுத்து, தமிழனாக பிறக்கவேண்டும் என்று மகாத்மா காந்திஜி கூறினார். திருக்குறள் தொடர்பான தங்கக் காசு வெளியிட்டார் எல்லீசு என்ற ஆங்கிலேயே அதிகாரி. ரஷ்யாவிலுள்ள கிரெம்ளின் மாளிகைச் சுரங்க அறையில் திருக்குறள் பத்திரமாக வைத்து பாதுகாக்கப்படுகிறது. 
கன்னியாகுமரி புதுடெல்லி விரைவு ரயிலுக்கு ‘திருக்குறள் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலுள்ள ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு ‘திருவள்ளுவர் மேம்பாலம்’ என்று பெயர் சூட்டியிருக்கின்றோம். 

திருக்குறளில் கூறப்பட்டுள்ள குறள்களில் உள்ள கருத்துக்கள்படி, நாம் வாழ வேண்டும். அப்போதுதான் இந்தப் பிறவியும், வாழ்வும் நிறைவு பெறும். ஒரு தனிமனிதன் எப்படி வாழவேண்டும்? ஒரு இல்லறம் எப்படி நடக்கவேண்டும்? ஒரு சமுதாயம் எப்படி இயங்க வேண்டும்? ஒரு மன்னன் எப்படி ஆட்சி செய்ய வேண்டும்? ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? என்று அத்தனை வழிமுறைகளும் திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வாழும் கலை முதல் ஆளும் கலை வரை கற்றுத் தரும் ஒரே நூல் திருக்குறள். இந்நூலை கையில் வைத்துக்கொண்டு இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து விடலாம்.

இன்று விருது பெறும் நீங்கள் இன்னும் பல உயரிய விருதுகளைப் பெற்று நீண்ட நெடுங்காலம் தமிழ் வாழ்வதற்காக நீங்கள் வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன். ‘பிறந்த நாடே சிறந்த கோயில் பேசும் மொழியே தெய்வம் என்பதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால் கொள்கை கோபுரமாகும்’ என்று கூறிக்கொள்வதோடு பூமிக்கு வந்த புண்ணியம் ஏழைகளின் இல்லங்களில் விளக்கேற்றிய ஒளி விளக்கு தாய்மையின் உறைவிடம் தர்மத்தின் மறு உருவம் உலக தமிழர்களின் காவலர் அன்னைத் தமிழ் பூமியில் உயர்ந்து நிற்கும் ‘அம்மா’ என்னும் கோபுரத்தையும், அறிவுத் திருக்கோயிலான திருவள்ளுவரையும் வணங்கி நிறைவு செய்கிறேன்'' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு