வெளியிடப்பட்ட நேரம்: 07:52 (17/01/2018)

கடைசி தொடர்பு:07:56 (17/01/2018)

நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு உண்மையிலேயே பலன் உண்டா? - யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் கதை! #MotivationStory

unnai arinthal

‘நமது நல்ல செயல்களைவிட, நமது பாவங்கள் வெகு எளிதாக மற்றவர்களுக்கு நினைவுக்கு வந்துவிடும்’ - இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார் கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரட்டீஸ் (Democritus). வாழும் காலத்தில் மனிதர்களுக்கு நினைவுக்கே வராத பொன்மொழி இது. அதனால்தான் நல்லதைச் செய்வதை விட்டுவிட்டு நம்மில் பெரும்பாலானவர்கள் தான், தன் சுகம் என்று வேறேதோ ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். மனிதர்களுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிவதில்லை... நாம் செய்யும் நல்ல செயல்கள் ஒருபோதும் வீணாவதில்லை. `அந்தச் செயல்களால் என்ன கிடைத்துவிடப் போகிறது?’ என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவை திரும்பிவரும்... உங்கள் வாழ்க்கையிலேயே நீங்கள் எதிர்பார்த்திராத மிகச் சிறந்த வெகுமதியாக!  அதை எடுத்துச் சொல்லும் எளிமையான கதை இது!

அந்தச் சிறுவன் ஓர் அனாதை. அம்மாவும் அப்பாவும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோயிருந்தார்கள். மேல்நிலைப் பள்ளியில் படிக்கவேண்டிய வயது. ஆனால் படிக்கவைக்கவோ, உதவவோ யாருமில்லை. அவன் தன் சித்தி வீட்டில் தங்கியிருந்தான். வீட்டில் இருப்பவர்கள் ஏவும் வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பான். அந்த ஊரில் முக்கியமாக ஒரு பெரும் பிரச்னை இருந்தது... தண்ணீர் பிரச்னை. குடிக்க, சமைக்க, துணி துவைக்க, குளிக்க... உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் தண்ணீரை ஊருக்கு வெளியேயிருந்த ஓர் ஓடையிலிருந்துதான் எடுத்து வரவேண்டியிருந்தது. 

கதை

அந்தச் சிறுவன்தான் அந்த வீட்டிலிருந்த அத்தனை பேரின் தேவைக்கும் நீர் கொண்டு வருவான். பல முறை நடக்கவேண்டியிருக்கும். சலிக்காமல், அலுக்காமல் கொண்டு வருவான். ஆனால், அவனுக்கு வீட்டில் நல்ல பெயர் இருந்ததே இல்லை... `உதவாக்கரை’, `வெட்டிப்பயல்’, `ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை’ என்றெல்லாம் திட்டுவார் அவன் சித்தி. சமயத்தில் அவனுக்கு அடிகூட விழும். அதையெல்லாம் பொறுத்துக்கொள்வான் அந்தச்  சிறுவன். அவன் ஓர் இரக்க சுபாவி. யாரையும் குறை சொல்ல மாட்டான்; உதவி வேண்டுபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய ஓடுவான்.

ஊருக்கு வெளியேயுள்ள ஓடையில் தண்ணீர் எடுப்பதற்காக அவன் அதிகாலையிலும் மாலை நேரத்திலும் ஓடவேண்டியிருந்தது. அதைக்கூட அவன் பொறுத்துக்கொள்ளத் தயாராக இருந்தான். ஆனால், அவனுடன் வருவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். அவன் தனியாகத்தான் போகவேண்டியிருக்கும். ஆனால், இப்படிக் கடுமையான வேலையை இவன் செய்துகொண்டிருக்க, அந்த வீட்டிலிருந்த சித்தியின் பிள்ளைகளுக்கோ எளிமையான வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஒருநாள் அந்தச் சிறுவன் பானையில் தண்ணீர் பிடித்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தான். ஒரு மரத்தடியில் யாரோ ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்தான். அவரருகே போய், தண்ணீர்ப் பானையை இறக்கிவைத்துவிட்டு உட்கார்ந்தான். அவர், அவனையும் தண்ணீர் பானையையும் பார்த்தார்... ``தம்பி ரொம்ப தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணி கொடேன்...’’ என்று கேட்டார். சிறுவன் யோசிக்கவேயில்லை. அவன் ஒரு மண் கோப்பை வைத்திருந்தான். அதைக்கொண்டு அவருடைய தாகம் தீருமளவுக்குத் தண்ணீர் கொடுத்தான். பிறகு கிளம்பி தன் வழியே நடந்தான். வழியில் இன்னொரு பெண்மணியைப் பார்த்தான். அவரும் `தாகமா இருக்கு தம்பி’ என்றார். சிறுவன் அவருக்கும் நீர் கொடுத்தான். 

வாழ்க்கைக் கதை

அவன் வீட்டுக்கு வந்தபோது, கொண்டு வந்த தண்ணீர் பானையில் பாதி காலியாகவிருந்தது. சித்திக்கு பானையைப் பார்த்ததும் ஆத்திரமான ஆத்திரம். `தண்ணீர் ஏன் குறைந்தது?’ என விசாரித்தாள், கேட்டாள்... அவனை அடித்து துவம்சம் செய்தாள். `நாளைக்கு இதே மாதிரி தண்ணி குறைஞ்சுது... உன்னை வெட்டி பொலிபோட்டுடுவேன்’ என்று மிரட்டினாள்.

இரண்டு நாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் கழிந்தது. அன்றைக்கு அந்தச் சிறுவன் ஓடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு மரத்தடியில் ஒரு மனிதன் முனகியபடி படுத்திருப்பதைப் பார்த்தான். அந்த ஆளை நெருங்கிப் போய்ப் பார்த்தான். அவர் மேலெல்லாம் காயங்கள்... எங்கேயோ விழுந்து எழுந்திருந்து வந்திருந்தார். அவரைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

அந்த மனிதர் இரைஞ்சும் குரலில், ``கொஞ்சம் தண்ணி குடு தம்பி...’’ என்று கேட்டார். அவர் இருந்த கோலத்தையும், அவருடைய குரலையும் அவனால் புறக்கணிக்க முடியவில்லை. பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். அவர் ஆவல் தீர மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிப் பருகினார். அன்றைக்கு வீட்டில் சித்தி அவனை அடித்துத் துவைத்துவிட்டார். “கண்டவங்களுக்கெல்லாம் தண்ணி குடுப்பியா... குடுப்பியா...’’ கேள்வியைத் தொடர்ந்து அடி விழுந்தது. அந்தச் சிறுவன் மௌனமாக அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டான்.

அடுத்த நாள் காலை. அந்தச் சிறுவன் வீட்டிலிருந்தான். யாரோ கதவைத் தட்டினார்கள். சித்திதான் போய்க் கதவைத் திறந்தார். வெளியே, அந்தச் சிறுவன் முதல் நாள் பார்த்திருந்த அந்த மனிதர், உடலெங்கும் காயம்பட்டிருந்தவர், நின்றுகொண்டிருந்தார். அவர் புதிதாக அந்தப் பகுதிக்கு வந்திருந்த தபால்காரர். ``தம்பி... உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு... நேத்து அடிபட்டிருந்ததால என்னால அதை எடுத்துட்டு வந்து உனக்குக் கொடுக்க முடியலை. சாரி...’’ என்று தன் கையிலிருந்த தபாலை நீட்டினார். சிறுவன் வாங்கிக்கொண்டான்.

அது, அவன் மேல்நிலைப் பள்ளியில் படிக்க உதவித்தொகை சேங்க்‌ஷனாகியிருந்ததற்கான கடிதம். அவன் எப்போதோ அதற்காக விண்ணப்பித்து, அதை மறந்தும் போயிருந்தான். அந்தத் தபால்காரர், அந்தக் கடிதத்தோடு, அவருக்கு சரியான தருணத்தில் தண்ணீர் கொடுத்து, அவரைக் காப்பாற்றியதற்காக கணிசமான ஒரு தொகையையும் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தார். சிறுவன் அசந்துபோனான். 

கதை - தண்ணீர்

அதற்கு முதல் நாள் மட்டும் சிறுவன் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவியிருக்காவிட்டால், அந்த தபால்காரர் இறந்துபோயிருந்திருப்பார். சிறுவனுக்கான ஸ்காலர்ஷிப் கடிதம் அவனிடம் வந்து சேராமலேயே போயிருந்திருக்கும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்