வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (17/01/2018)

கடைசி தொடர்பு:18:03 (17/01/2018)

குடலை உருவிய காட்டெருமை... தப்பிப் பிழைத்த வனமகன் காட்டுயிர் புகைப்படக்காரரான கதை!

சிறுவயதிலிருந்தே காடுகள் மீதும் பறவைகள் மீதும் பேரார்வம் கொண்டவன் சேகர். நீலகிரி வனப் பாதுகாப்பு கழகத்தில் உறுப்பினராக இருக்கிறான். 12:01:2009 மாலை ஆறு மணி தன்னுடைய நான்கு நண்பர்களுடன் எப்போதும் செல்வதுபோல வனத்தைப் பார்வையிட கோத்தகிரி அருகில் இருக்கிற பெரிய சோலை என்கிற காட்டுப் பகுதிக்குள் செல்கிறான். நண்பர்களுக்குக் காடுகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் சொல்லிக்கொண்டிருக்கிறான். அப்போதெல்லாம் காட்டு விலங்குகள் அவ்வளவாக இல்லாத நேரம். முயல். நரி, முள்ளம்பன்றி, காட்டுப் பன்றி என மூர்க்கத்தனம் இல்லாத விலங்குகள் மட்டுமே தென்படுகிற காலகட்டம்.

வனப்பகுதியின் எல்லையில் இருக்கிற ஆபத்தை உணராமல் நண்பர்களோடு உள்ளே செல்ல முயல்கிறான் சேகர். ஐந்நூறு மீட்டர்கள் உள் நுழைந்ததும் எதிரில் காட்டெருமை இருப்பதைப் பார்க்கிறான். உடனே நண்பர்களை உஷார்ப்படுத்துகிறான். எல்லோரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுகிறார்கள். காட்டெருமை திடீரென சேகரை நோக்கி ஓடி வருகிறது. சேகர் பக்கத்தில் இருக்கிற சிறிய மரத்தில் ஏறி விடுகிறான். அவனிருக்கிற மரத்தின் அடியில் வந்து நிற்கிற காட்டெருமை தன்னுடைய கொம்புகளால் தரையில் குத்தி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுகிறது.

காட்டெருமை

காட்டெருமை போய்விடும் என நினைக்கிற சேகர் அது போகும்வரை மரத்தில் இருப்போம் என நினைத்து ஒரு கிளையில் அமர்ந்திருக்கிறான். மரத்துக்கு அடியில் வந்து நிற்கிற காட்டெருமை  திடீரென அந்த மரத்தை மூர்க்கத்தனமாகத் தாக்க ஆரம்பிக்கிறது. காட்டெருமையின் வேகத்தில் மரம் வேரோடு சாய்கிறது. மரத்திலிருக்கிற சேகர் கீழே விழுகிறான். இரண்டொரு நொடிகள்தாம், சேகர் சுதாரிப்பதற்குள் எருமை தன்னுடைய கொம்புகளால் கீழே விழுந்த சேகரை வயிற்றில் குத்தி தூக்கி வீசுகிறது. வயிறு கிழிந்து சேகரின் குடல் வெளியே வந்து விழுகிறது. என்ன நடந்தது எனத் தீர்மானிப்பதற்குள் சேகரைப் புரட்டிப் போட்டு விட்டு எருமை காட்டுக்குள் ஓடிவிடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் சுயநினைவை இழக்கிற சேகர் தன்னுடைய கைகளால் குடலை எடுத்து வயிற்றுக்குள் திணித்து விட்டு மெள்ள ஊர்ந்து காட்டை விட்டு  வெளியே வருகிறான். உதவிக்கு யாரையும் அழைக்க முடியாதபடிக்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் பலவீனமடைகிறான்.

அதற்குள் உடன் வந்த நண்பர்கள் சேகரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அடுத்த ஐந்து நிமிடங்களில் நண்பர்கள் சேகர் இருக்கிற இடத்துக்கு வருகிறார்கள். அதுவரை நடந்தது மட்டுமே சேகருக்கு நினைவில் இருக்கிறது. நண்பர்கள் சேகரை பக்கத்திலிருந்த ஹோலி ஃபேம்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். தகவல் ஊர் முழுக்கப் பரவுகிறது. நிலைமையை அறிந்த பலரும் சேகர் அவ்வளவுதான் பிழைக்க மாட்டான் என ஆருடம் சொல்கிறார்கள். மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேகருக்குச் சிகிச்சை நடைபெறுகிறது. பெற்றோர் மற்றும் நண்பர்களின் பிரார்த்தனையும் கண்ணீரும் மருத்துவமனை முழுதும் நிரம்பியிருக்கிறது. இதற்கு முன்பு இப்படியான சூழ்நிலையை மருத்துவமனை எதிர்கொண்டிருக்கவில்லை. குடல் முழுதும் கிழிந்து வெளியே வந்துவிட்டதால் குடலுக்கான மாற்று வழியை மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். சேகர் நினைவு திரும்பாமலே இருக்கிறான். கடைசியில் மருத்துவர்கள் பைப்புகளைக் குடலாக மாற்றி வயிற்றுக்கு வெளியே ஒரு பையை வைத்து இணைக்கிறார்கள். தொடர்ந்து மூன்று நாள்கள் தீவிர சிகிச்சையில் இருக்கிற சேகருக்குச் சம்பவம் நிகழ்ந்த மூன்றாவது நாள் நினைவு திரும்புகிறது. கண் விழித்துப் பார்க்கிறவனுக்குத் தெரிகிற காட்சிகள் எல்லாம் புரியாமல் இருக்கின்றன.. அன்றைய நாள் மதியம் அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஈரோட்டில் இருக்கிற தனியார் மருத்துவமனைக்குச் சேகரை மாற்றுகிறார்கள். சேகர் உயிர் பிழைத்தால் போதும் என்கிற ஒரே முடிவில் வீட்டில் இருக்கிற அம்மா தங்கையின் நகைகள் எல்லாம் விற்கப்படுகின்றன. அரசு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறது.

காட்டெருமை

அடுத்த ஆறு மாதங்கள் மருத்துவமனையிலேயே சேகரின் காலம் கழிய ஆரம்பிக்கிறது. ஆறு மாதங்களும் வயிற்றில் பைப்பையும் பையையும் சுமந்தவாறு படுத்திருக்கிறான். சேகரைப் பொறுத்த வரை அவை வலியை மட்டுமே உணர்ந்திருந்த நாள்கள். உடலின் கழிவுகள் பைப்பின் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆறு மாதங்களில் ஐந்து அறுவை சிகிச்சைகள். ஏழு லட்சங்கள் செலவு செய்து சேகரை அவரின் பெற்றோர் காப்பாற்றி விடுகிறார்கள். உடலுக்கு வெளியே இருந்த பைப்புகள் அகற்றப்படுகின்றன. மொத்தக் குடல் பகுதியில் ஐம்பது சதவிகித குடல் அகற்றப்படுகிறது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிற சேகர் அடுத்த ஆறு மாதங்களில் ஓரளவிற்கு குணமடைகிறான்.

பாதி குடல் அகற்றப்பட்டதால் முன்பைப் போல முழு உணவையும் சேகரால் உண்ணமுடியாது. எல்லாமே அளவோடு என்கிற நிலைக்கு சேகரின் உடல் வருகிறது. நாள்கள் செல்லச் செல்ல பறவைகள், காடுகள் குறித்த அவனது புரிதல் மீண்டும் அவனைக் காட்டை நோக்கியே செலுத்துகிறது. வனத்தையொட்டிய பகுதிகளில் அவன் வசித்ததும் ஒரு முக்கியக் காரணம். வீட்டிற்குத் தெரியாமல் மீண்டும் வனம் செல்ல ஆரம்பிக்கிறவன் காடுகள், உயிரினங்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படிக்க ஆரம்பிக்கிறான். புத்தகங்கள் அவனுக்குள் வேறு ஒரு ரசனையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புத்தகங்கள், விலங்குகள், பறவைகள் எனக் காட்டுயிர் தொடர்பான அனைத்தையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கிறது. வீட்டுப் பக்கத்தில் இருக்கிற தேயிலைத் தொழிற்சாலையில் பணிக்குச் சேருகிறான். வேலை நேரம் போக மீதி நேரங்களில் வீட்டுக்குத் தெரியாமல் பறவைகள், விலங்குகள் எனத் தேட ஆரம்பிக்கிறான். சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து சேமித்த பணத்தில் ஒரு கேமரா வாங்குகிறான்.

வனம்

மீண்டும் விலங்குகள் மற்றும் காடு சார்ந்து இயங்கப் போகிறான் என்கிற சேகரின் எண்ணத்தைக்  கண்டறிகிற குடும்பத்தார். "விலங்குகள் சார்ந்த எந்த வேலையும் வேண்டாம்” என சேகரிடம் மன்றாடுகிறார்கள், கண்டிக்கிறார்கள். ஏனெனில் இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் காடுகளில் ஆக்ரோஷமான விலங்குகளாலான சிறுத்தை, கரடி, யானை, புலி என விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. “இருக்குறது ஒரே புள்ள உனக்கு இனி ஏதாவது ஆச்சு நான் உயிரோட இருக்க மாட்டேன்” எனச் சொல்லி சேகரின் அம்மா சேகரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்கிறார். ஆனால் எல்லோரையும் சமாளித்து, மீண்டும் காடு சார்ந்து இயங்கக் கிளம்புகிறான். அன்றிலிருந்து இன்று வரை காடுகள் சார்ந்து பல விசயங்களில் சேகர் பங்கு கொண்டிருக்கிறான். விலங்குகள் கணக்கெடுப்பு, பறவைகள் கண்டறிவது என நீலகிரி வனக் காப்பு கழகத்தில் பல பணிகளைச் செய்து வருகிறார்.

30  வயதாகும் சேகரின் முழுப்பெயர் சந்திரசேகர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பக்கத்தில் இருக்கிற அன்னை இந்திரா நகரில் வசிக்கிறார். தேயிலைத் தொழிற்சாலையில் இப்போது பணி புரிகிற சேகருக்குப் பிடித்தது, விரும்புவது, காதலிப்பது எல்லாமே காடும் காடு சார்ந்த விஷயங்கள் மட்டுமே. அவரிடம் பேசியதிலிருந்து...

"பிழைக்கவே மாட்டான்" என்கிற நிலையில் அந்த விபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய அனைவருக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு நிகழ்ந்த அந்த விபத்துக்குப் பிறகு காடு குறித்த பயம் இல்லாமல் போய் விட்டது. நான் நேசிக்கிற காடு இனி அப்படியான ஒரு நிகழ்வை எனக்குத் தராது என நான் நம்புகிறேன். கேமராவோடு மீண்டும் நான் காட்டிற்குள் செல்லும் போது நான் அதிகமாக உணர்சிவசபட்டிருந்தேன். முதன் முதலாக என்னுடைய கேமராவில் சிறுத்தையை நேருக்கு நேர் புகைப்படம் எடுத்ததை என்னால் மறக்கவே முடியாது. அப்போது நான் வைத்திருந்த கேமரா லென்ஸ் 70*200 ஓரளவிற்குப் பக்கத்தில் சென்றால் மட்டுமே புகைப்படங்களை நேர்த்தியாக எடுக்க முடியும். சிறுத்தையை முந்நூறு அடி தூரத்திலிருந்து புகைப்படம் எடுக்கும் பொழுது உடல் சிலிர்த்ததை இப்போதும் நான் உணர்கிறேன்.

காட்டெருமை

 

அப்போதிலிருந்து இதுவரை வனத்தையொட்டி இருக்கிற பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் சிறுத்தை, புலி, யானை, கீரி, கரடி என எவ்வளவோ மிருகங்களையும் பறவைகளையும் எடுத்திருக்கிறேன். என்னுடைய மிகப் பெரிய ஆசை நீலகிரி மார்டின் என்கிற உயிரினத்தைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான். நீலகிரி மார்டின் அறிய வகை விலங்கு. அவ்வளவு எளிதில் அதைக் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்துவிட இயலாது. அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஒரு நாள் நீலகிரி மார்டின் என்னுடைய பார்வையில்படும். அந்தத் தருணத்திற்காக காத்திருக்கிறேன்” என்கிறார். நம்மிடம் சொல்ல சேகருக்கு இன்னொரு முக்கியமான விஷயம் இருந்தது,

முன்பைப் போல வனப்பகுதிக்குள் யாரும்  சென்றுவிட முடியாது. இப்போது வனம் சார்ந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. முறையாக அனுமதி வாங்கிய பிறகே உள் நுழைய முடியும். நீலகிரிக்குச் சுற்றுலா வருகிறவர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதையும் விலங்குகளுக்கு உணவளிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்.  ”உணவிற்காகச் சாலைக்கு வருகிற விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறப்பது அதிகரித்து வருகிறது. நான் எருமையால் தாக்கப்பட்டதுக்குச் சற்றும் குறைவில்லாதது விலங்குகள் வாகனங்களில் அடிபடுவது” என விலங்குகள் குறித்த வலியை வேதனையோடு தெரிவிக்கிறார். சேகர் எடுக்கிற புகைப்படங்களைப் பார்த்த அவரின் பெற்றோர் இருட்டுவதற்குள் வீடு வந்து சேர வேண்டும் என்கிற ஓர் உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு காடு சார்ந்து இயங்க அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.   

 என்ன நடந்தாலும் என்ன ஆனாலும் நேசிக்கிற ஒன்றை விடாமல் இருப்பது கூட அர்ப்பணிப்புதான் சேகர்.

 வாழ்த்துகள். தொடர்ந்து செல்லுங்கள்..!


டிரெண்டிங் @ விகடன்