வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory | We Should Respect Our Well-Wishers To Live A Happy Life

வெளியிடப்பட்ட நேரம்: 06:55 (18/01/2018)

கடைசி தொடர்பு:06:55 (18/01/2018)

வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory

உன்னை அறிந்தால்

வாழ்க்கை மிகக் குறுகியது. அதன் ஒவ்வொரு கணத்துக்கும் நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓரான் பாமுக் (Orhan Pamuk). இந்த அண்டப் பெருவெளியில், ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஒரு கிரகத்தில், அதில் ஒரு கண்டத்தில், அதில் ஒரு நாட்டில், அதில் ஒரு பகுதியில், அதில் ஓர் ஊரில் மிகச் சில வருடங்கள் மட்டுமே வாழ்கிற நாம் வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மை நேசிக்கிறவர்களுக்காக நம்மால் எவ்வளவு நேரத்தைச் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரத்தைச் செலவிடுவதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். அதிலும் நம் பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம், எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறோமா? அதன் அவசியத்தை உணர்த்தும் கதை இது. 

வாழ்க்கை

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம். ஊரின் புறநகர்ப் பகுதியில் அவர் இருந்தார். அவர் ஒரு பிஸினஸ்மேன். சதா பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், இன்னும் அதில் மோட்டார் பொருத்தவில்லையே எனக் கோருகிற அவசர வாழ்க்கை. அன்றைக்கு அவருடைய அம்மாவுக்குப் பிறந்தநாள்... அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அது ஒரு காலை நேரம். தன் காரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரத்திலிருந்த பூக்கடைக்குப் போனார். கடையில் அம்மாவுக்குப் பிடித்த பூக்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றைக் கொத்தாக, அழகாக பேக் செய்து தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லி, முகவரியை எழுதிக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவருடைய அம்மா அந்த ஊரிலிருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார்.

பூங்கொத்து


`ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவோடு கடையிலிருந்து வெளியே வந்தார். வாசல் நடைபாதையில் ஓர் இளம்பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவளருகே போனார். 

``என்னம்மா ஆச்சு... ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டார். 

``ஒண்ணுமில்லை சார். என் அம்மாவுக்குக் குடுக்குறதுக்காக எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ வேணும். ஒரு ரோஜாவின் விலை ரெண்டு டாலராம். என்கிட்ட இருக்குறது ஒரு டாலர். அதான் எப்பிடி வாங்குறதுனு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்.’’ 

``அவ்வளவுதானே... வா என்கூட...’’ அந்த பிஸினஸ்மேன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பக் கடைக்குள் போனார். தன் பணத்திலேயே அவள் கேட்ட ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியில் முகமே பிரகாசமாக மாறியிருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். அவர் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். அலுவலகத்துக்குச் செல்ல அவருக்கு இன்னும் நேரமிருந்தது. 

ரோஜாப்பூ

``சொல்லும்மா... உன் அம்மாவைப் பார்க்க நீ எங்கே போகணும்? நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்...’’ 

``ரொம்ப தூரம் இல்லை சார். பக்கத்துலதான்...’’ 

``அப்பிடின்னா கார்ல ஏறு.’’ அவர் கார் கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பெண் பின்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் வழிகாட்ட, அவர் காரை ஓட்டிக்கொண்டு போனார். சற்று நேரத்தில் அந்தப் பெண் இறங்கவேண்டிய இடம் வந்தது. அது ஒரு கல்லறைத் தோட்டம். அந்தப் பெண் இறங்குப்போது சொன்னாள்... ``ரொம்ப நன்றி சார். இன்னிக்கி என் அம்மாவோட நினைவு நாள். அவங்களுக்கு ரோஜான்னா உசுரு. அவங்களுக்குப் பிடிச்ச ரோஜாவை இன்னிக்காவது அவங்க கல்லறையில வைக்கணுமில்லையா? அதுதானே நியாயம்...’’ 

அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது. காரைத் திருப்பிக்கொண்டு, பூக்கடைக்குப் போனார். அவர் ஆர்டர் செய்திருந்த பூக்களை வாங்கிக்கொண்டார். முந்நூறு மைல் தொலைவில் அவருடைய அம்மா இருக்கும் ஊரை நோக்கிக் காரை விரைவாக ஓட்ட ஆரம்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்