கவிஞர் சுகுமாரன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்! #ChennaiBookFair

“ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகை நோக்கிய ஒரு ஜன்னலைத் திறக்கிறோம்.” - தோழர் சிங்காரவேலர்.

இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் சமூகப் புரட்சிகளுக்கும், புத்தகங்களே மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதச்சமூகம் தன் வாழ்வை, தன் தொன்மையை புத்தகங்களின் வழியே அடுத்த தலைமுறைக்குக் கடத்திச்செல்கின்றன. புனைவு இலக்கியங்களான சிறுகதை, நாவல், கவிதை எனக் கற்பனை உலகில் சஞ்சரிக்கவும், அபுனைவுகளான கட்டுரைகள், ஆய்வு நூல்கள் என அறிவை விசாலப்படுத்திக்கொள்ளவும் புத்தகங்கள் உடன் இருக்கின்றன. 

பெரும் சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் எல்லோரையும் ஏதேனும் ஒரு புத்தகம் அவர்களின் இலக்கை நோக்கி உந்தித் தள்ளியிருக்கும். வாழ்வில் பெருந்தோல்வியிலிருந்து மீண்ட பலருக்கும் ஒரு புத்தகம் உடன் இருந்திருக்கும். நம் அறையில் நம்முடனே இருக்கும் நண்பன்தான் புத்தகம். நல்ல புத்தகங்களைத் தேர்வுசெய்து படிப்பது ஒரு கலை. அப்படிப்பட்ட நூல்களைப் படைக்கும் ஏராளமான எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஊறித்திளைத்திருக்கும் புத்தகங்களையும் அதன் வீரியத்தையும் வார்த்தைகளின் வழியே வழிமொழியும் வரிசையில் இன்று... கவிஞர்.சுகுமாரன்.

இவர், தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்;புத்தகங்கள்  நவீன கவிதை உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளவர்; மனித மனத்தின் ஆறாத துயர்களை, தனிமையில் கதவடைத்து அழும் எளிய மனங்களின் அழுகுறல்களை தன் கவிதைகளில் தோழமையோடு சேர்த்துக்கொண்டவர்; கவிதை மட்டுமன்றி கட்டுரைகள், நாவல், மொழிபெயர்ப்பு எனப் பல துறைகளில் கவனிக்கத்தக்க படைப்புகளைக் கொடுத்தவர். இவரது `தனிமையின் வழி' கட்டுரைத் தொகுப்பு, `வெல்லிங்டன்' நாவல், கோடைக்கால குறிப்புகள், `பூமியை வாசிக்கும் சிறுமி' போன்ற கவிதை நூல்களும் மிகவும் கவனம் பெற்றவை.

சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியையொட்டி, கவிஞர் சுகுமாரனிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், அவர் பரிந்துரைக்கும் புத்தகங்கள் குறித்தும் கேட்டோம்...

“ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்... வாசிப்பின் அவசியம் என்ன?''

“விரிவான பொருளில் சொல்வதானால் வாசிப்பில்லாமல் வாழ்க்கை இல்லை. வாசிப்பின் வழியேதான் மனிதன் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையின் மூலமே முன்னேறுகிறான். அறிவியலும், மதங்களும், கண்டுபிடிப்புகளும் வாசிப்பின் விளைவாகவே நிகழ்ந்தன; நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வாசிப்பு இல்லாமல் இவை எதுவுமே நிகழ்ந்திடாது. வாசிப்பு, ஒருவன் என்னவாக இருக்கிறான், என்னவாக ஆகிறான், எந்த வகையில் தான் வாழும் உலகத்தைப் புரிந்துகொள்கிறான், தன் சக மனிதர்களுடன் எவ்வாறு உறவுகொள்கிறான் என்பதை உயிரோட்டமாக உணர்த்தக்கூடியது. வாசிப்பு இல்லாத ஒருவன் வெளிச்சம் இல்லாத இடத்தில் முடங்கிவிடும் தாவரம். வளர்ச்சியை விரும்புகிறவனே வாசிப்பவனாகிறான்.''

“நீங்கள் பரிந்துரைக்கும்  ஐந்து புத்தகங்கள்..?''

1) பெரியார் - இன்றும் என்றும் (கட்டுரைத் திரட்டு)

விடியல் பதிப்பகம்

 

2) எழுக நீ புலவன் (பாரதி இயல் ஆய்வுகள்)

ஆ.இரா.வேங்கடாசலபதி

காலச்சுவடு பதிப்பகம்

 

3) செல்லாத பணம் (நாவல்)

இமையம்

க்ரியா வெளியீடு

 

4) எழுதித் தீராத பக்கங்கள் (அனுபவக் கட்டுரைகள்)

செல்வம் அருளானந்தம்

தமிழினி

 

5) கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் (தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்)

மைத்ரி புக்ஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!