வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (19/01/2018)

கடைசி தொடர்பு:16:15 (19/01/2018)

“5 பேர்...15 நாள்கள்... ஒரு நொடி தூக்கமில்லை..!” - ரஷ்யாவின் ரகசிய ஆராய்ச்சி?

இரண்டாம் உலகப் போர் சமயம். ரஷ்யாவில் பொதுவாக ஜுன் மாதத்தில் பனிப் பொழிவும், குளிரும் இருக்காது. ஆனால், ஏனோ இந்த 1945ம் ஆண்டில் குளிர் அதிகமாகவே இருந்தது. ஆச்சர்யமாக அந்த இரவு பனிப் பொழிவும் இருந்தது. மாஸ்கோ நகரை விட்டு சற்று தள்ளியிருந்த அந்தக் கிராமத்தினுள் நுழைந்தது அந்தச் சிகப்பு நிற "மாஸ்க்விச் - 420" (Moskvich - 420) கார்.  இது இன்னும் பொது விற்பனைக்கு வராத கார். அடுத்த வருடம் தான் இதை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், முன்னாள் கேஜிபி (KGB - ரஷ்ய உளவு அமைப்பு) அதிகாரிக்கு இது மிகவும் பிடித்திருந்ததால், அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று இந்தக் காரை அவர் வாங்கி வைத்திருந்தார். ஆனால், இதை அவர் பொதுமக்கள் பார்வைப்படும்படியான நேரங்களில் வெளியே எடுக்க மாட்டார். இப்பொழுது அவசரமாக இவர் வர வேண்டியிருந்ததாலும், பனிப்பொழிவின் காரணமாக மக்கள் பெரியளவில் வெளியில் நடமாட்டார்கள் என்பதாலும்  இதை எடுத்து வந்திருந்தார்.

அந்த மண் சாலையில் இறங்கி ஓடிய அந்தக் கார், சில இடங்களில் பனியின் வழுவழுப்பின் காரணமாக சற்று நெளிந்து ஓடியது. அந்த ஓட்டுநர் ஸ்டியரிங்கை மிகவும் உறுதியாகப் பிடித்தபடியே ஓட்டினார். சற்றே பாழடைந்துப் போன மாதிரி தெரிந்த அந்தக் கட்டத்தின் முன் மிகச் சரியாக நிறுத்த முயன்றும், அந்த பிரேக் சரியாக பிடிகாததால், சற்று தள்ளிப்போய் தான் நின்றது அந்த சிகப்பு நிற மாஸ்க்விச்-420. நிறுத்திய நொடி கதவைத் திறந்து இறங்கி, படு வேகமாக கட்டடத்தினுள் நுழைந்தார் அந்த அதிகாரி. 

ரஷ்யாவின் ஆராய்ச்சி உண்மையா? தூக்கமின்மை சாத்தியமா?

அந்தக் க்ரிஸ்டல் கோப்பையில், சூடான காஃபி குடித்துக் கொண்டிருந்த வெள்ளைக் கோட் போட்டிருந்த அந்த டாக்டர் காலடிச் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். அந்த அதிகாரியைக் கண்டு மெலிதாகப் புன்னகைத்தார்.

"அனுமதி கிடைத்துவிட்டது. உடனடியாக தொடங்குங்கள். எங்கே அவர்கள்?"

"உள்ளே தான் இருக்கிறார்கள். நாளை காலை ஆரம்பிக்கிறேன்."

"இல்லை...இல்லை. இப்போதே தொடங்குங்கள்." சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பி நடந்தார். வெளியே அந்த மாஸ்க்விச் - 420 திருப்பி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாரி வரும் வேகத்தைப் பார்த்து சட்டென இறங்கி காரின் கதவினை திறந்துவிட்டார் டிரைவர். நொடியில் வேகமெடுத்து பறந்தது அந்தக் கார்.

சூடான அந்தக் காபியைக் குடித்துமுடித்துவிட்டு, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடியே சேரிலிருந்து எழுந்தார் டாக்டர். கம்பிகள் பூட்டப்பட்டிருந்த அந்த அறையைத் திறந்து, தூங்கிக் கொண்டிருந்த அந்த5 பேரையும் எழுப்பினார். அவருக்குத் துணையாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் தூக்கம் கலைந்து எழுந்தனர். இனி அவர்கள் தூங்கவே போவதில்லை!

அந்த 5 பேரின் முகங்களும் சலனமற்று இருந்தன. அமைதியாக நடந்தார்கள். அவர்களை அங்கிருந்த அந்த அறைக்குள் கொண்டு விட்டனர் காவலர்கள். சற்றே பெரிய அறை. ஒரு ஓரத்தில் "ஸ்டீல் வாஷ் பேசின்" இருந்தது. இன்னொரு மூலையில் சின்னக் கழிவறை இருந்தது. ஆனால், அதற்கு கதவில்லை. நான்கு அடுக்குகள் கொண்ட ஒரு ஷெல்ஃப் இருந்தது. அதில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் டின்களில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. மூன்று பக்கச் சுவர்களைத் தாண்டி நான்காவது பக்கச் சுவற்றில் பாதி கண்ணாடியாக இருந்தது. அதாவது, அதன் மறுபக்கம் தெரியும் வகையில் இருந்தது. அந்தக் கண்ணாடி வழி பார்த்தபோது டாக்டர் அங்கு நிற்பது தெரிந்தது. மேலும் அந்த அறையில் 5 மைக்குகள் இருந்தன. ஐந்து பேருக்கும் ஒன்று என்ற வீதம். சுவற்றின் ஓர் ஓரத்தில் ஏசி பெட்டி போல் ஒன்றிருந்தது. 
தன் அறையிலிருந்த மைக்கிலிருந்து டாக்டர் பேசினார்...

தூக்கமின்மை சாத்தியமா?

"உங்களோடு கைது செய்யப்பட்ட அத்தனைக் கைதிகளும் இந்நேரம் பரலோகம் சென்றடைந்திருப்பார்கள். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களுக்கான சுதந்திரம் காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். 30 நாட்கள் தூங்காமல் இருக்க வேண்டும். அதற்கும் நீங்கள் பெரிய கஷ்டங்களெல்லாம் பட வேண்டியதில்லை. இந்த அறைக்குள் நான் ஒரு வாயுவை (GAS) இன்னும் சற்று நேரத்தில் விடத் தொடங்குவேன். அது உங்களைத் தூங்காமல் இருக்க வைக்கும். அவ்வளவு தான். 30 நாட்கள். உங்களுக்கு சாப்பிட உணவுகள் இருக்கின்றன, படிக்க புத்தகங்கள் இருக்கின்றன. என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தூங்க மட்டும் கூடாது...தூக்கமும் உங்களுக்கு வராது."

டாக்டர் ஒவ்வொரு நாளும் அந்தக் கைதிகளிடம் நடக்கும் மாற்றங்களைப் பதிவு செய்யத் தொடங்கினார். 

நாள் 1:

சாதாரணமாக கழிந்தது.

நாள் 2:

கைதிகளில் மூன்று பேர் தங்களுக்குள் பேசத் தொடங்கினார்கள்.

நாள் 3:

சாதாரணமாக கழிந்தது.

நாள் 4: 

மூன்று பேரைத் தவிர மற்ற இரண்டு பேர் இன்னும் பேசவில்லை. 

நாள் 5: 

ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டிருந்த அந்த மூன்று பேரும், இப்போது மைக்கில் டாக்டருடன் பேசத் தொடங்கினர். பெரும்பாலும், தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தவறுகளைக் குறிப்பிட்டு பாவ மன்னிப்பு கேட்பது போல் இருந்தது.

நாள் 6 & 7:

சாதாரணமாக கழிந்தது.

நாள் 8:

பேசாமல் இருந்த அந்த இரண்டு பேரும் சில வார்த்தைகளைப் பேசினர்.

நாள் 9:

பேசாமல் இருந்த அந்த இரண்டு பேரில் ஒருவர் திடீரென பெரும் குரலெடுத்து கத்த தொடங்கினான். விடாமல் மூன்று மணி நேரம் வரைக் கத்தினான். இடையே கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் மூன்று மணி நேரம் கத்தினான். பிறகு, ஒரு மணி நேரம். இப்படியாக மொத்தம் 7 மணி நேரம் கத்தினான். அதன் பிறகும் முயன்றான் ஆனால், குரல் வரவில்லை. அவனின் குரல்வளை (Vocal Cords) முற்றிலுமாக கிழிந்துவிட்டிருக்கக் கூடும். மிகவும் ஆச்சர்யமான விஷயம், அவன் இப்படியாக 7 மணி நேரம் கத்தினாலும் கூட, உடனிருந்தவர்கள் எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தனர். "இது அதிர்ச்சி அளிக்கிறது" என்று எழுதினார் டாக்டர்.

நாள் 10:

சாதாரணமாக கழிந்தது.

நாள் 11:

அதிலிருந்த ஃபீலிக்ஸ் என்பவன் 7 மணி நேரம் கத்தினானே... அவனோடு சண்டையிட்டான். இருவருக்கும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. பின்னர், அங்கிருந்த புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து அந்தக் கண்ணாடியில் ஒட்டி, அதன் வழி யாரும் பார்க்காத வகையில் அடைத்து வைத்தான். டாக்டர் எத்தனை முறைகள் சொல்லியும் அவன் அதை எடுக்கவில்லை.

நாள் 12,13 & 14:

பெரிதாக எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. சத்தம் எதுவும் வரவில்லை. ஆனால், அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்கள் என்பது, அவர்கள் எடுத்துக் கொண்ட வாயுவின் அளவிலிருந்து தெரிந்தது.

நாள் 15:

டாக்டர் தன் உயரதிகாரியைத் தொடர்புக் கொண்டார். அவர் சில மணி நேரங்களில் அங்கு வந்து சேர்ந்தார். இந்த முறை அந்த சிகப்பு நிற மாஸ்க்விச்-420யில் வரவில்லை. மாறாக ஒரு கருப்பு நிற காரில் வந்திறங்கினார். 

ரஷ்ய ஆராய்ச்சி உண்மையா?

"என்ன செய்யலாம் டாக்டர்?"

"திறந்திடலாம் சார்..."

"ம்ம்ம்...சரி ஓகே"

டாக்டர் தன் மைக்கின் அருகே சென்று பேசினார்.

"நாங்கள் இப்போது கதவைத் திறக்கப் போகிறோம். எல்லோரும் ஒதுங்கி ஓரமாக நில்லுங்கள். எந்தப் பிரச்னையும் செய்யக் கூடாது. அமைதியாக இருந்தீர்கள் என்றால், உங்களில் ஒருவரை இன்று விடுதலை செய்வோம். மாறாக ஏதாவது செய்தீர்கள் என்றால் சுட்டுவிடுவோம்."

அமைதி. பெரும் அமைதி நிலவியது. பின்னர், மிகவும் மெலிதாக ஈனஸ்வரத்தில் அந்தக் குரல் கேட்டது.

"தேவையில்லை. எங்களில் யாருக்கும் எந்த விடுதலையும் தேவையில்லை."

இதே வாசகத்தை மொத்தம் மூன்று குரல்கள் சொல்லின. 

பெரும் பாதுகாப்போடு அறைக் கதவை திறந்தார்கள். பெரும் அதிர்ச்சி.

ரஷ்ய ஆராய்ச்சி உண்மையா?

காட்சிகள் மிகக் கோரமாக இருந்தன. ஐந்து பேரில் ஒருவன் இறந்து கிடந்தான். அவனின் தொடைப் பகுதி மற்றும் மார்பு பகுதியின் சதைகள் கிழித்து எடுக்கப்பட்டிருந்தன. அனைவரின் கை மற்றும் மார்பு பகுதிகளில் சதைகள் கிழிந்திருந்தன. அதை அவர்களே சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது. அந்த இறந்துக் கிடந்தவனின் சதைத் துண்டுகள் நீர்ப்புகும் வழியை அடைத்துவிட்டதால், மூடப்படாமல் கிடந்த பைப்பிலிருந்து ஒழுகிய தண்ணீர் 4 இன்ச் அளவிற்கு அறையை நிரப்பியிருந்தது. அதில் பெரும் பகுதி ரத்தம் கலந்திருந்தது. இன்னும், இன்னும் எழுதவே முடியாத அளவிற்கான அகோர காட்சிகள் அங்கு இருந்தன. 

அந்த அறையிலிருந்து வெளிவர யாருமே தயாராக இல்லை. 

"எங்களுக்கு விடுதலை வேண்டாம். இங்கேயே விட்டுவிடுங்கள். அந்த வாயுவை நிரப்புங்கள். எங்களுக்குத் தூக்கம் வேண்டாம். விடுங்கள் எங்களை..." என்று பிதற்றினார்கள். கத்தினார்கள். 

போர்க்களங்களைக் கண்ட பல ராணுவ வீரர்களும் கூட அந்த அறைக்குள் சென்று அவர்களை எடுத்து வர மறுத்துவிட்டனர். அந்தளவிற்கு கோரக் காட்சிகள். ஒரு வழியாக பிழைத்திருந்த நால்வரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அதில் போகும் வழியிலேயே ஒருவன் இறந்து விட்டான். மிச்சமிருந்த மூன்று பேருக்கும் வயிற்றின் அடிப்பகுதியில் பெரும் காயங்கள். அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. உயிர் பிழைத்தார்கள். 

"இவர்களை இனி என்ன செய்வது?"

"நமக்கு நம்முடைய மிஷன் முக்கியம். மீண்டும் இவர்களை அந்த அறையினுள் அடைத்து வையுங்கள்."

"சார்..."

"சொல்வதை செய்யுங்கள்"

டாக்டர் அதைச் செய்தார். இரண்டே மணி நேரம் தான். தன்னுடன் இருந்த இரண்டு பேரையும் கடித்துக் குதறி கொன்றுவிட்டான் அவன். அவசர அவசரமாக பாதுகாவலர்களோடு அறைக்குள் நுழைந்தார் டாக்டர். அவன் கொடூரமாக சிரித்துக் கொண்டிருந்தான்...
"ஏன்...ஏன் இப்படிச் செய்தாய்? நீ என்ன மிருகமாக மாறிவிட்டாயா?" என்று டாக்டர் கேட்டார்.

ரஷ்யா செய்த தூக்கமின்மை ஆராய்ச்சி உண்மையா?

"ஆமாம்...நான் மிருகம் தான். நீங்களும் தான். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் மிருகம் தான் நான். " என்று சொன்னபடியே டாக்டர் மீது பாய வருகிறான் அவன்.

நெற்றிப் பொட்டில் சுடுகிறார்கள் பாதுகாவலர்கள். ரத்த வெள்ளத்தில் செத்து விழுகிறான்.

"Mission Failed" என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார் அந்த அதிகாரி. 

இதற்கு "The Russian Sleep Experiment" என்று பெயர். அந்தக் காலத்தில் தன் போர் வீரர்கள் தூங்காமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று ரஷ்யா இதை முயன்றதாகவும், ஆனால், அந்த ஆராய்ச்சி தோல்வியில் முடிந்ததாகவும் சொல்கிறது இந்தக் கதை. இன்றைய தேதியில் இது போன்ற கதைகள் இணையத்தில் மிகவும் பிரபலம். மிகவும் நம்பும்படியான இந்தக் கதையை இன்றும் உண்மை தான் என்று நம்பி வாதாடும் ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. ஆனால், இதற்கான ஆதாரங்களாக எதுவும் அவர்களிடம் இல்லை. 

தூக்கமின்மை குறித்த ரஷ்யாவின் ஆராய்ச்சி உண்மையா?

இதுகுறித்து இணைய ஆராய்ச்சியாளரான சாரா மெக்கியூர் (Sara McGuire) சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதில் இந்தக் கதையானது 2010யில் ஒரு வலைதளத்தில் தான் முதன்முதலாக பதிவிடப்பட்டிருக்கிறது. அது இது போன்ற மர்மமான கதைகளைக் கொடுக்கும் ஒரு தளம். அவர்கள் தான் இதை உருவாக்கியிருக்கிறார்கள். மக்களுக்கு இதைப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கவே, அவர்கள் இதைப் பெருமளவு பரப்பிவிட்டார்கள். இன்றைய காலத்தில் இணையவாசிகளுக்கு இது போன்ற மர்மக் கதைகளைப் படிப்பதில் பெரும் விருப்பம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பணம் பண்ணும் ஒரு பெருங்கூட்டம் இது போன்ற பொய்க் கதைகளை சில வரலாற்று சம்பவங்களோடு இணைத்து, பணம் பண்ணுகிறார்கள். இது மிகவும் கேடான விஷயம் என்று சொல்லியிருக்கிறார் சாரா. மேலும், இது போன்ற பல கதைகளை ஆராய்ந்து எது எப்படி உருவாக்கப்படுகிறது, அந்தப் படங்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை எல்லாம் மிகத் தெளிவான ஆய்வாக செய்திருக்கிறார்.

தகவல்கள் ஒரு தட்டில் கிடைக்கும் இன்றைய இணைய காலத்தில் பகுத்தறிந்து பார்க்கும் பார்வை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்