``என் கணவருக்கு டஃப் கொடுக்கதான் சமைக்க ஆரம்பிச்சேன்!” - ‘மெட்ராஸ் சமையல்’ ஸ்டெபி | Exclusive interview with 'madras samayal' steffi

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (19/01/2018)

கடைசி தொடர்பு:11:08 (19/01/2018)

``என் கணவருக்கு டஃப் கொடுக்கதான் சமைக்க ஆரம்பிச்சேன்!” - ‘மெட்ராஸ் சமையல்’ ஸ்டெபி

சமைப்பது அனைத்துப் பெண்களுக்கும் பிடித்த விஷயம். ‘பார்த்துப் பார்த்து ருசியா சமைச்சாலும் வீட்டுல ஏதாச்சும் குறை சொல்றாங்க. எப்படித்தான் திருப்திப்படுத்தறதுனே தெரியலை' என்கிற புலம்பலும் இங்கே அதிகம். அவங்க எல்லாம் விசிட் பண்ணவேண்டிய யூடியூப் சேனல், 'மெட்ராஸ் சமையல்'. ஒவ்வொரு சமையலையும் அழகுத் தமிழில் கத்துக்கொடுக்கிறார், ஸ்டெபி. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் மணம் மாறாமல் பேசும் ஸ்டெபியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். 

'madras samayal' steffi

“என் சொந்த ஊர் நாகர்கோவில். படிச்சது ஹாஸ்டலில். சனி, ஞாயிறு விடுமுறையில்தான் வீட்டுக்குப் போவேன். அப்போ அம்மாவோடு சேர்ந்து சமைப்பேன். அதுக்கு மேலே சமையலில் ஆர்வம் இருந்ததில்லே. படிப்பு முடிஞ்சு மூணு வருஷம் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. கல்யாணத்துக்கு அப்புறம் கணவருடன் அமெரிக்கா வந்துட்டேன். இங்கே தனிமையால் ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சது. கணவருக்காக விதவிதமா சமைக்க ஆரம்பிச்சேன். அவரைச் சாப்பாட்டு விஷயத்தில் அடிச்சுக்க முடியாது. டேஸ்ட்டில் சின்னக் குறையையும் சரியா கண்டுபிடிச்சுடுவார். அப்படி அவர் எந்தக் குறையும் கண்டுபிடிக்கக்கூடாதுனு சவாலா செய்ய ஆரம்பிச்சேன்.

'மெட்ராஸ் சமையல்' ஸ்டெபி

ஒருநாள் 'நீ நல்லா சமைக்கிறே. உன் சமையலை மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்கலாமே'னு சொன்னார். எனக்கும் சும்மாவே இருக்கிறதுக்கு உருப்படியா ஏதாவது பண்ணலாமேனு தோணுச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். தமிழ்நாட்டின் எல்லா ஊரைச் சேர்ந்தவங்களும் சென்னையில் இருப்பாங்க. அதேமாதிரி எல்லாச் சமையலும் இருக்கும்னு 'மெட்ராஸ் சமையல்' எனப் பெயர் வெச்சோம்'' என நீளமான இன்ட்ரோ கொடுத்துவிட்டு தொடர்கிறார் ஸ்டெபி. 

மெட்ராஸ் சமையல் ஸ்டெபி

“ஆரம்பத்துல வியூஸ் பெருசா இல்லே. போகப்போக நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு வியூஸ் கிடைச்சது. இப்போ எங்க சேனலை இரண்டரை லட்சம் பேர் பார்க்கிறாங்க. அந்த அளவுக்கு மக்களுக்கு என் சமையல் பிடிச்சிருக்குனு நினைக்கிறப்போ மனசு றெக்கை கட்டி பறக்குது. சமையலில் மட்டும் அக்கறை காட்டாமல் என்னுடைய சமையல் அறை மீதும் அதிக அக்கறை காட்டுவேன். சமைக்குற இடத்தை அழகா வைக்குறதுக்காக நிறைய கஷ்டப்படுவேன். விதவிதமா பார்த்துப்பார்த்து ஒவ்வொரு சாமான்களையும் வாங்குவேன். என்னுடைய ஒவ்வொரு சமையல் வீடியோவிலும் என் சமையல் அறை வித்தியாசமா இருக்குற மாதிரி பார்த்துப்பேன். ஒரு சமையலை ஒருமுறைக்கு ரெண்டு முறை ரிகர்சல் செய்து பார்ப்பேன். எனக்கு திருப்தியானதுக்கு அப்புறம்தான் மறுபடியும் ஆரம்பிச்சு வீடியோவாக எடுப்பேன். ஒரு வாரத்தில் ரெண்டு நாள் வீடியோ. அடுத்த ரெண்டு நாள் எடிட். அப்புறமா அப்ளோடு பண்ணுவேன். 

மெட்ராஸ் சமையல் ஸ்டெபி

சமைக்கிறதை போஸ்ட் பண்றதோடு நிறுத்திடாமல், வியூவர்ஸ் கேட்கும் ரெசிப்பிகளையும் சொல்லித்தரேன். என் அம்மா, மாமியார், ஃப்ரண்ட்ஸ் மூலமும் தெரியாத பல மெனுவைக் கத்துக்கிறேன். வீடியோ எடுக்கிறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை செய்து பார்க்கிறதால் நிறையப் பொருள்கள் வாங்கவேண்டியிருக்கும். என் கணவர் 'அதைப் பற்றியெல்லாம் யோசிக்காதே. உன் பேஜ் பலருக்கும் பயன் கொடுக்குது. நல்ல நல்ல சமையலை சொல்லிக்கொடுத்துட்டே இரு'னு உற்சாகப்படுத்துவார். இந்த பேஜ் மூலம் வரும் வருமானம் சமையல் பொருள்கள் வாங்கவே சரியா இருக்கும். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதை நாலு பேருக்குச் சொல்லிக்கொடுக்கும் சந்தோஷம், மனசுக்கு நிறைவு கொடுக்குது. இதுக்குக் காரணமான என் கணவருக்கும் குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் நன்றி'' என்று நெகிழ்கிறார் ஸ்டெபி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்