Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  ஜினி-மம்மூட்டி, பிரபு-கார்த்திக், அர்ஜுன்-அர்விந்த் சாமி வரிசையில் அடுத்ததாக கார்த்தி-துல்கர் சல்மான் இரட்டை ஹீரோ படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். துல்கர் கால்ஷீட்டில் சொதப்ப, கடுப்பான மணிரத்னம் கார்த்தியை மட்டும் வைத்தே படம் இயக்குகிறார். ஆனால் நித்யா மேனன், தன்ஷிகா என இரட்டை ஹீரோயின்ஸ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ரெண்டு கண்மணிகள்!

இன்பாக்ஸ்

•  அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் 20/20 உலகக் கோப்பைக்கு, மிகத் தீவிரமாகத் தயாராகிவருகிறது ஆஸ்திரேலியா. 50 ஓவர் உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணியால், இதுவரை 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான இந்திய ஆடுகளங்களைச் சமாளிப்பதில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவ, முன்னாள் இந்திய வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரச்ர் ஸ்ரீராமை ஆலோசகராக நியமித்துள்ளது நிர்வாகம். என்னமா யோசிக்கிறாய்ங்க!

•  ஹாலிவுட் ஜாம்பவான் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்குக்கு இப்போது வயது 69. கடந்த வாரம் தனது பிறந்த நாள் அன்று ஒரு ஸ்வீட் நியூஸையும் சொல்லியிருக்கிறார் `ஜுராசிக் பார்க்’ டைரக்டர். அனில் அம்பானியின் `ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனமும் ஸ்பீல்பெர்கின் `ட்ரீம் வொர்க்ஸ்’ நிறுவனமும் இணைந்து திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் டிஜிட்டல் கன்டென்ட்கள் தயாரிக்க இருக்கிறார்கள். தயாரிப்பில் இருக்கும் சில ஹாலிவுட் படங்களும் இதில் அடக்கமாம்! முதல்ல `மருதநாயகம்’ எடுங்கஜி!

•    பாலிவுட்டிடம் இருந்து இனி எந்தப் பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றையும் காப்பாற்ற முடியாது. மேரி கோம், மில்கா சிங் ஆகியோரின் கதைகள் கல்லா கட்ட, அடுத்து திரையில் தோன்றப்போவது பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை. `என் கதை படமாக்கப்படுமா என்பது தெரியாது. ஆனால், அதில் என்னைவிட பாட்மின்டனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரவேண்டும்’ என ஏற்கெனவே சொல்லியிருந்தார் சாய்னா. `தாரே ஜமீன் பர்’ படத்தை இயக்கிய அமோலே குப்தேதான் இயக்குநர். லவ் ஆல்!

இன்பாக்ஸ்

•   கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ பொறுப்பை ஏற்ற பிறகு முதன்முறையாக இந்தியாவுக்கு வந்த சுந்தர் பிச்சைதான் கடந்த வார ட்ரெண்டிங். `நானும் எல்லா இந்தியச் சிறுவர்கள் போலவும் சிறுவயதில் கவாஸ்கர் போல கிரிக்கெட் வீரர் ஆக விரும்பினேன்' என்கிற சுந்தர், `2006-ம் ஆண்டில்தான் நான் முதல் ஸ்மார்ட்போனையே வாங்கினேன். ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனுக்கு, இந்திய உணவுப்பொருள் ஒன்றின் பெயரை வைப்பதற்கு முயற்சிக்கிறேன்’ என ஜாலி பதில்களால் ஸ்கோர் செய்திருக்கிறார். நீங்க, தளபதி ஃபேனா... தல ஃபேனா?

இன்பாக்ஸ்

•    மெஸ்ஸி, ரொனால்டோ, உசேன் போல்ட்... என எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு 32 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றிருக்கும் முதல் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். `2015-ம் ஆண்டில் பங்கேற்ற 56 போட்டிகளில் 53 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் செரீனாதான் உலகின் நம்பர் 1 வீரர். 34 வயதில் இதுபோன்ற சாதனைகள் அசாத்தியமானது' என புகழ்ந்திருக்கிறது `ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்' பத்திரிகை. பெண் சிங்கம்!

இன்பாக்ஸ்

•  1986-ம் ஆண்டு, பேன் அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளோடு நடுவானில் கடத்தப்பட்டது. அந்த விமானத்தின் பணிப்பெண் நீர்ஜா பானோட் கடத்தல்காரர்களோடு தைரியமாகப் போராடி அத்தனை பயணிகளையும் காப்பாற்றினாலும், இறுதியில் கொல்லப்பட்டார். அந்த உண்மைச் சம்பவத்தை `நீர்ஜா’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக்கியிருக்கிறார்கள். நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்திருக்கிறார். `நீர்ஜா, சாதாரணப் பெண் அல்ல; நிறையப் பேருக்குப் பாடமாக இருக்கிறாள். நீர்ஜாவாக நடித்தது என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று’ என நெகிழ்கிறார் சோனம். சல்யூட் நீர்ஜா!

இன்பாக்ஸ்

•  பாலிவுட்டின் கலெக்‌ஷன் குயின் தீபிகா படுகோன் `பாஜிராவ் மஸ்தானி' படத்துக்குப் பிறகு எந்தப் படமும் ஒப்புக் கொள்ளவில்லை.  `அடுத்தடுத்து படம் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்குக் கிடையாது. எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என, என் தேதிகளை நிரப்ப விரும்பவில்லை. கேட்கும் கதைகளில், எது என்னைச் சந்தோஷப்படுத்துகிறதோ, அதைத்தான் தேர்வுசெய்வேன். அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்கிறார் தீபிகா. கோலிவுட்டுக்கு வந்துட்டுப்போம்மா தீப்ஸ்!