தெரு இசைக்கலைஞரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட பூனை! - உண்மைக் கதை #MotivationStory

கதை

‘உண்மையான நேசம் அரிது; உண்மையான நட்பு அரிதினும் அரிது’ - 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கதாசிரியர் ஜீன் டே லா ஃபான்டெயின் (Jean de La Fontaine) இப்படி அடித்துச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். யதார்த்தத்தில் நாம் எல்லோருமே உணர்ந்திருக்கும் விஷயம்தான் இது. கையடக்க மொபைலில் உலகம் சுருங்கிவிட்ட இந்தக் காலத்திலும்கூட ஓர் உண்மையான நண்பன் கிடைப்பது அரிதாகத்தான் இருக்கிறது. சக மனிதர்களை விடுங்கள்... நம்மோடு அன்றாடம் புழங்கும் செல்லப்பிராணிகள் இன்றைக்கும் நம்மோடு கொண்டிருக்கும் நட்பு அபாரமானது. உலகமெங்கும் ஆயிரமாயிரம் நிகழ்வுகள் செல்லப்பிராணிகள் நம்மீது வைத்திருக்கும் நட்பின் உன்னதத்தை மெய்ப்பித்துக்கொண்டே இருக்கின்றன. நெகிழவைக்கும், உருகவைக்கும், ஆச்சர்யப்படுத்தும், அதிரவைக்கும், அசரவைக்கும் அப்படிப்பட்ட கதைகள் ஏராளம். ஒரு மனிதர், ஒரு பூனையுடன் கொண்ட நட்பு அவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கதை இது!

சிலருக்கு வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்; பலருக்கு இருக்காது. `என்னடா வாழ்க்கை?’ என்கிற விரக்தியிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவராகத்தான் இருந்தார் ஜேம்ஸ் போவென் (James Bowen)... ஒரு பூனையைத் தன் வாழ்க்கையில் சந்திக்கும் வரை!

குதிக்கும் பூனை

1979-ம் ஆண்டு, தென் கிழக்கு இங்கிலாந்திலிருக்கும் சர்ரேயில் (Surrey) பிறந்தார் போவென். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மண முறிவு. குழந்தையாக இருக்கும்போதே அம்மாவுடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கே அம்மா இன்னொருவரை மணந்துகொண்டார். போவெனுக்கு வாழ்க்கைக் கசப்பான பல அனுபவங்களைத் தந்தது. நாடுவிட்டு நாடு சென்ற வாழ்க்கை... புதிய இடம், புதுச்சூழல், புதிய பள்ளி. சக மாணவர்கள் அவரை ஓர் அந்நியனைப்போலவே பார்த்தார்கள். அதன் காரணமாகவே சமூகத்தின் மேல், பிற மனிதர்களின் மேல் ஒரு பிடிப்பு இல்லாமலேயே போய்விட்டது அவருக்கு. போதாக்குறைக்கு, `ஏ.டி.ஹெச்.டி’ எனப்படும் (ADHD - Attention deficit hyperactivity disorder) குறைபாடு, மன வளர்ச்சிக் குறைபாடு (Schizophrenia), மனஅழுத்தம் என என்னென்னவோ பிரச்னைகள். பரீட்சையில் ஃபெயில்... `உதவாக்கரைப் பையன்’ என்கிற பட்டம், இவற்றைச் சுமந்துகொண்டு தன் 18-ம் வயதில் இங்கிலாந்துக்குத் திரும்பினார். லண்டனிலிருந்த தன் தங்கையின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒன்றின்மீது பற்று இருக்கும். ஜேம்ஸ் போவெனுக்கும் இருந்தது. அவர் ஒரு கிதார் இசைக்கலைஞர். கிதாரின் மீது அவருக்குக் கொள்ளைப் பிரியம். அதுதான் அவருக்கு பின்னாளில் ஒருவேளை உணவுக்காவது உத்தரவாதம் கொடுத்தது. தங்கை வீடு ஒத்துவரவில்லை. தெருக்களில் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார் போவென். வீடில்லை, பரிந்து பேச ஆளில்லை, தனிமை, வெறுமை... இவற்றிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையானார். லண்டனின் குளிர் படர்ந்த வீதிகளில் அமர்ந்து கிதார் இசைப்பார். வருவோர், போவோர் போடும் சில்லறைக்காசுகள் அவருடைய போதை மருந்துக்கும் உணவுக்கும் போய்க்கொண்டிருந்தன. அவரை அன்றாடம் பார்க்கிற பல பேர் `இவனெல்லாம் எங்கே பிழைக்கப்போகிறான்’ என்றுதான் நினைத்தார்கள். விதி வேறு கணக்குப் போட்டுவைத்திருந்தது.

பூனை

ஒரு கட்டத்தில் போதைக்கு அதிகப் பணம், சாப்பாட்டுக்கு சிரமம் என்கிற நிலை அவருக்கு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையின் மீதிருந்த தைரியத்தை இழந்துகொண்டிருந்தார். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு வசிக்க ஒரு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. நம் ஊர் ஹவுசிங் போர்டு காலனி மாதிரியான இடம் அது. அது அவருக்குக் கிடைத்த சிறிய வெளிச்சம். ஆனாலும், போதைதான் தன் வாழ்க்கைக்கான அர்த்தம் என நினைத்துக்கொண்டிருந்தார் அவர்.

ஒருநாள் களைத்துபோய் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் இளைத்துப்போயிருந்த ஒரு பூனை அவர் கண்ணில்பட்டது. அதன் காலில் அடிபட்டிருந்தது. பொதுவாக இங்கிலாந்தில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு கழுத்தில் பட்டை கட்டியிருக்கும்; அதன் உரிமையாளர் இவர்தான் என அதில் எழுதியிருக்கும். அப்படி எந்த அடையாளமும் அந்தப் பூனையிடம் இல்லை. போவென், அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் அது யாருடைய பூனை என்று விசாரித்தார். யாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. `இந்தப் பூனையும் என்னைப்போலத்தானா... இதற்கும் யாருமே இல்லையா?’ என்கிற எண்ணமே அவரை வாட்டியது. அதன் மேல் ஒரு பரிவை வரவழைத்தது. `உனக்கு நான் இருக்கிறேன்’ என சொல்லத் தூண்டியது. அதை எடுத்துக்கொண்டு ஒரு மிருக வைத்தியசாலைக்குப் போனார். அந்தப் பூனைக்கு அவரே `பாப்’ என்று பெயர்வைத்தார். மருத்துவமனையில் பாப்புக்கு சிகிச்சை கொடுத்தார்கள். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இரண்டு வாரங்கள் அந்தப் பூனையைக் கண்போலப் பார்த்துக்கொண்டார் போவென்.

ஜேம்ஸ் போவென்

பாப் குணமடைந்தது. அப்போதும் அதை உரிமைகொண்டாட யாரும் வரவேயில்லை. `சரி... இந்தப் பூனைக்குத் தன் எஜமானன் வீடு தெரியாதா? விட்டால், அது பாட்டுக்குப் போய்விடப் போகிறது...’ என்று நினைத்து, அதைத் தெருவில் விட்டுவிட்டார் போவென். ஆனால் அந்தப் பூனையோ, அவர் பின்னாலேயே நாய்க்குட்டிபோல வந்துகொண்டிருந்தது. பஸ்ஸில், அவர் கிதார் இசைக்கும் தெருவில், வீட்டுக்குச் செல்லும் வழியிலெல்லாம் பின்தொடர்ந்தது. இந்தக் கணத்தில் அவருக்கு வேறு வழியிருக்கவில்லை... பாப் என்கிற அந்தப் பூனையைத் தன் நண்பனாக ஏற்றுக்கொள்வதைத் தவிர. அப்போது வேறோர் அதிசயம் நடந்தது. அவர் கிதார் இசைப்பதைக் கேட்காதவர்கள்கூட அந்தப் பூனையின் அழகில் சொக்கி நின்று கேட்க ஆரம்பித்தார்கள். கொடுக்கிற காசுகளையும், கரன்ஸிகளையும் இரு முன்னங்கால்களையும் தூக்கி வாங்க ஆரம்பித்தது பூனை. கிதார் வைக்கும் பையில் ஒய்யாரமாக நின்றுகொண்டு போகிற வருகிறவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாப்பின் அழகு அசத்தலாக இருந்தது. `ஒரு மனிதனுக்கும் பூனைக்கும் இப்படி ஒரு பிணைப்பா?’ என்கிற எண்ணமே பலரையும் அவர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது. போவெனின் வருமானம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது. பாப்புக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். அதற்காகவே உணவுகளையும், விளையாட்டுப் பொருள்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

இப்போது பாப்புக்காகவே, போவேன் வாழ்ந்தாகவேண்டிய நிர்ப்பந்தம். தன்மேல் பிரியம் காட்டும் ஒற்றை ஜீவன்... அதைப் பார்த்துக்கொள்ள வேண்டாமா? அதோடு பாப்பைப் பார்க்க தெருவில் ரசிகர்கள் இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர் நேரத்துக்கு கிதாரைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டியிருந்தது. அதனால், அவருடைய போதைப் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் ஒழிந்தே போனது. அவருக்குப் பொறுப்பு வந்தது. அவரையும் அந்த பாப் பூனையையும் குறித்த வீடியோக்கள் இணையதளத்தில் வலம் வர ஆரம்பித்தன. அந்த நட்பை பல்லாயிரக்கணக்கானவர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

அழகுப் பூனை

தனக்கும் தன் செல்லப் பூனை பாப்புக்குமான உறவை `A Street Cat named Bop' என்கிற புத்தகமாக எழுதி வெளியிட்டார் போவென். புத்தக விற்பனை சக்கைபோடு போட்டது. அதோடு, உலகம் முழுக்க `பெஸ்ட் செல்லர்’ விற்பனையிலும் சாதனை படைத்தது. அதன் பிறகும் தனக்கும் அந்தப் பூனைக்கும் உள்ள உறவை சில புத்தகங்களாக வெளியிட்டார். அத்தனைக்கும் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. அவருடைய முதல் நூலான `A Street Cat named Bop' திரைப்படமாக எடுக்கப்பட்டு 2016-ம் ஆண்டு வெளியானது. அதில் சில காட்சிகளில் பாப்பும் நடித்திருந்தது. உண்மையான நட்பு எவ்வளவு பெரிய தடைகளையும் உடைத்தெறியும் என்பதற்கு உதாரணம், பாப்-போவென் நட்பு.

இப்போது போவென் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும், வீடில்லாதவர்களுக்கும் தன்னாலான உதவியைச் செய்துகொண்டிருக்கிறார், விலங்குகள் நலவாழ்வுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்... தன் செல்ல பாப்புடன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!