வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (23/01/2018)

கடைசி தொடர்பு:09:15 (23/01/2018)

சமூக வலைதளத்தில் பாராட்டப்பட்டால் அந்தப் படம் ஓடாது... ஏன்? #WisdomOfTheCrowd

Wisdom of the crowd

தேர்தல் முடிவுகள் எப்போதும் சுவாரஸ்யமானதுதான். ஒரு தொகுதி என எடுத்துக்கொண்டால் சொல்லி வைத்தது போல கட்சி சாராதவர்களின் வாக்குகள் ஒருவருக்கே பெரும்பாலும் சென்று சேரும். ஒரு மாநிலத்தின் வடஎல்லை முதல் தெற்கு எல்லை வரை ஒரே மாதிரியான போக்கு நிலவும். அதை எந்தக் கருத்துக் கணிப்பும் சொல்லியிருக்காது. ஒரு திரைப்படத்துக்குச் சென்னையில் முதல் காட்சிக்குக் கிடைக்கும் வரவேற்பு கன்னியாகுமரியிலும் அப்படியே கிடைக்கிறது. எப்படி நடக்கிறது இது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதைப் பற்றி யோசிக்கும் முன் ஒரு விஷயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது, Wisdom of the crowd. 

1906ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ரான்ஸிஸ் கால்டன் என்பவர் ஒரு எருதை கண்காட்சிக்கு வந்த அனைவரிடமும் (கிட்டத்தட்ட 800 பேர்) காட்டி “இதன் எடை என்னவாக இருக்கும்?” எனக் கேட்டார். 100 கிலோவில் தொடங்கி 1000 கிலோ வரை பல விடைகள் வந்தன. பெரும்பாலான விடைகள் சரியான விடைக்கு (540கிலோ) அருகிலே இல்லை. ஆனால் முடிவில் அவர்கள் சொன்ன பதில்களைக் கூட்டி, கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையால் வகுத்து சராசரியைப் பார்த்தார். நம்பினால் நம்புங்கள், அது சரியான எடையைத் துல்லியமாகச் சொல்லியது. இதைத்தான் Wisdom of the crowd என்கிறார்கள்.

ஒரு துறையில் சிறந்து விளங்கும் நிபுணரின் கணிப்பை விட ஒரு கூட்டத்தின் சராசரி துல்லியமாக இருக்குமென்கிறது இந்தத் தியரி. இதை நிரூபிக்கும் பல சோதனைகள் நடந்திருக்கின்றன. பல நிறுவனங்கள் தங்களது எதிர்கால திட்டத்தை முடிவு செய்ய, எக்ஸ்பெர்ட்களிடம் போகாமல் இந்தத் தியரியை நம்பி களமிறங்கியதும் உண்டு. பங்குச்சந்தையிலும் பொருளாதாரத் துறையிலும் இதன் பங்கு அதிகம். 

இதைப் பற்றி முதலில் எழுதியவர் அரிஸ்டாட்டில்தான். அவர் வாழ்ந்த காலம் கி.மு 4ம் நூற்றாண்டு. அப்போதே இதைப் பற்றி அவர் எழுதியிருந்தார் என்பது ஆச்சர்யம்தான்.

இன்னொரு சுவாரஸ்யமான சோதனையும் உண்டு. ஒரு ஜாடியில் ஜெம்ஸ் மிட்டாய் போன்ற ஜெல்லி பீன்ஸ் நிறைய போட்டு வைத்தனர். வந்திருந்தவர்களிடம் அவை எத்தனை என்ற கேள்வி கேட்கப்பட்டது. சிலர் ஜாடியின் நீளம் மற்றும் அகலத்தை வைத்து கணக்கிட்டனர். சிலர் தோராயமாக சொன்னார்கள். பல உத்திகள் இதற்காக பின்பற்றபட்டன. மொத்த எண்ணிக்கை 700லிருந்து 6200 வரை இருக்கலாமென விடைகள் வந்தன. அவற்றின் சராசரி2137. உள்ளே இருந்தவை 2133.

Wisdom of crowds

இந்தத் தியரியை மறுத்துப் பேசுபவர்களும் உண்டு. IMDBல் ஷஷாங் ரிடெம்ப்ஷன் என்ற படம்தான் சிறந்த படம் என நிறைய பேர் வாக்களித்திருக்கிறார்கள். அப்படியென்றால், உண்மையிலே இதுவரை வெளிவந்த படங்களில் அதுதான் சிறந்த படமா என்ற கேள்வியை இந்தத் தியரியை மறுக்கும் ஒருவர் எழுப்பியிருக்கிறார். படம் என்பது ஒருவரது ரசனை சார்ந்தது. இந்தத் தியரியை அதற்கு ஒப்பிட்டு பார்ப்பது சரியா என்பது முக்கியமான கேள்வி. மேலும், இணையத்தில் இதற்கு வாக்களிக்கும் ‘கூட்டம்’ யார் என்பதும் முக்கியம். 
ஒரு நல்ல சமூகத்துக்கு இந்த ”பேலன்ஸ்” முக்கியம். நிறையும் குறையும் சேர்ந்ததே சமூகம். ஆனால், அதன் சராசரி சரியாக இருந்தால் அச்சமூகம் நன்றாக இருக்கும்.

Wisdom of the crowd பெரும்பாலான சோதனைகளில் வெற்றியே பெற்றிருக்கின்றன. ஆனால், அந்தக் கூட்டம் எது என்பதுதான் அதன் முக்கியமான காரணி. அந்தக் கூட்டம் தன்னிச்சையாக யோசிக்கும் இயல்பு கொண்டதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். தவறான விடையாக இருந்தாலும் அதை அவர்கள் தன்னிச்சையாக சொல்ல வேண்டும். பக்கத்திலிருப்பவரைப் பார்த்து காப்பியடித்தால் இது வேலைக்காகாமல் போகலாம்.

பெரும்பாலான சமயங்களில் சமூக வலைதளங்களில் போற்றப்படும் ஒரு விஷயம் அல்லது ஒரு படம், நிஜத்தில் எதிர்மறையான வரவேற்பைப் பெற்றிருக்கும். காரணம், சமூக வலைதளத்தில் இயங்குபவர்கள் தன்னிச்சையாக இயங்குவதில்லை. அவர்கள் யாரோ ஒருவரால் அல்லது ஒரு கூட்டத்தால் இயக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் உண்மையாகவும் இருப்பதில்லை. இதனால்தான் சமூக வலைதளத்தில் இருக்கும் போக்கை நிஜமெனக் கொள்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. Wisdom of the crowd சோதனை ஒன்றை ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ நடத்தினால் விடைகள் தவறாகதான் வரும். அதில் சந்தேகமேயில்லை. ஏனென்றால், அச்சமூகம் சமநிலையற்ற சமூகம். சொந்தமாக யோசிக்காத சமூகம். இயல்பாக இயங்க மறுக்கும் சமூகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்