உங்கள் தவறை யாராவது சுட்டிக்காட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - தன்னம்பிக்கைக் கதை! #MotivationStory | What Should You Do When Someone Points Out Your Mistakes #MotivationStory

வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (23/01/2018)

கடைசி தொடர்பு:08:42 (23/01/2018)

உங்கள் தவறை யாராவது சுட்டிக்காட்டினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? - தன்னம்பிக்கைக் கதை! #MotivationStory

உன்னை அறிந்தால்

‘ஒரு மனிதனின் விரல் யாரோ ஒருவரை நோக்கி நீளும்போது அவரின் மற்ற நான்கு விரல்களும் அவரை நோக்கியே திரும்பியிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞர் லூயிஸ் நைஸர் (Louis Nizer). ஒருவரைக் குறை சொல்வதோ, ஒருவர் செய்த வேலையில் குற்றம் கண்டுபிடிப்பதோ எளிது. ஆனால், அதைச் சரிசெய்வது எல்லோராலும் முடியாத காரியம். `குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்!’ என்கிற நாகேஷின் பிரபல `திருவிளையாடல்’ திரைப்பட வசனம் மறக்க முடியாதது. பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களில் சிலர் வேண்டுமென்றே அந்த வேலையைச் செய்பவராக இருக்கலாம்; உண்மையிலேயே தொடர்புடையவர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் சொல்பவராகவும் இருக்கலாம். வெற்றி என்கிற வரம் கிடைப்பதற்கு முதலில் மற்றவர்கள் தன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பக்குவம் ஒருவருக்கு வேண்டும். தன் பிழைகளைத் திருத்திக்கொள்ளும் தன்மை வேண்டும். உங்கள் தவறுகளைப் பிறர் சுட்டிக்காட்டும்போது அதை எதிர்கொள்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் கதை!

அது ஃபிரான்ஸிலிருந்த ஒரு கலைகளுக்கான கல்லூரி. எல்லா கலைகளும் அங்கே கற்றுத்தரப்பட்டன. விதவிதமான கலைகளைக் கற்றுக்கொள்ள வெகு தூரத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் அந்தக் கல்லூரிக்கு வந்தார்கள். சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மேல் உயிரைவைத்திருந்த ஒரு மாணவன் அந்தக் கல்லூரிக்குப் படிக்க வந்திருந்தான். அந்தி வானம் தொடங்கி, அழகான கடற்கரை மணல்வெளி வரை ஏற்கெனவே அவன் பல ஓவியங்களை வரைந்த அனுபவமுள்ளவன். வகுப்பில் பாடம் நடத்துவதைவிட, செயல்முறைப் பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் அந்தக் கல்லூரியின் வழக்கம். எனவே, மாணவர்கள் அவரவர் துறையில் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த மெனக்கெடுவார்கள். அந்த மாணவனும் செயல்முறைப் பயிற்சியில் தீவிரமாக இருந்தான்.

கதை

ஒருநாள் அவன் ஓவியம் ஒன்றை வரைந்தான். அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். `நிச்சயமாக இது வரை நான் வரைந்தவற்றிலேயே மிக உன்னதமானது இதுதான்’ என்று பெருமைபொங்கத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த நாள் காலை அந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு கல்லூரிக்குப் போனான். கல்லூரி வரவேற்பறையில் பொருத்தமான ஓரிடத்தில் அதை மற்றவர்களின் காட்சிக்குவைத்தான். கூடவே அந்த ஓவியத்துக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பையும் எழுதிவைத்தான்... `இந்த ஓவியத்தில் நீங்கள் ஏதாவது குறையைக் கண்டுபிடித்தால், அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் வட்டமிடவும்’ என்றது அந்தக் குறிப்பு.

அன்று மதியத்துக்கு மேல் ஆவலோடு, காட்சிக்குவைத்திருந்த அந்த ஓவியத்தைப் பார்க்கப் போனான். அதிர்ந்துபோனான். அவனுடைய ஓவியம் முழுக்க கறுப்பு நிற வட்டங்கள் இருந்தன. தவறுகளைச் சுட்டிக்காட்டியது இருக்கட்டும்... அவனுடைய அற்புதமான அந்த ஓவியமே பாழாகிப்போய் நின்றுகொண்டிருந்தது. அவன் சோர்ந்து போனான். அந்த ஓவியத்தை எடுத்துத் தன் பையில் வைத்துக்கொண்டான். சற்று தூரத்திலிருந்த கடற்கரைக்குப் போனான்... உட்கார்ந்துகொண்டான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடலையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஓவியம்

கொஞ்ச நேரம் ஆனது. யாரோ அவனுடைய தோளைத் தொட்டார்கள். திரும்பிப் பார்த்தவன் பதறியவனாக எழுந்தான். அவனுக்கு முன்னால், அவனுடைய பேராசிரியர் நின்றுகொண்டிருந்தார். ``என்னப்பா... இங்கே வந்து தனியா உட்கார்ந்து என்ன பண்றே?’’ என்று கேட்டார். அந்த மாணவன் கண்கலங்கியவனாக நடந்ததைச் சொன்னான்.

“இதுக்கா இவ்வளவு கவலைப்படுறே... இதெல்லாம் விஷயமே இல்லை. நான் சொல்றபடி செய்றியா?’’

மாணவன் தயக்கத்தோடு ``சரி’’ என்றான். பேராசிரியர் அந்த யோசனையைச் சொன்னார்.

ஓவியம்

அவன் அன்று இரவே தன் வீட்டுக்குப் போய் ஓர் அழகான ஓவியத்தை வரைந்தான். அதை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலை கல்லூரி வரவேற்பறைக்குப் போனான். அதைக் காட்சிக்குவைத்தான். இந்த முறையும் ஒரு குறிப்பை எழுதிவைத்தான். ஆனால் அந்தப் பேராசிரியர் சொன்னபடி... `இந்த ஓவியத்தில் நீங்கள் பிழைகள் எதையாவது கண்டுபிடித்தால் அதைச் சரிசெய்யவும்’ என்று எழுதியிருந்தான்.

அன்று மதியத்துக்கு மேல் அந்த ஓவியம் இருந்த இடத்துக்குப் போனான். அவன் ஓவியத்தில் ஒரு திருத்தமும் இல்லை. அவன் எப்படிவைத்துவிட்டுப் போயிருந்தானோ, அப்படியே அது இருந்தது. அந்த ஆச்சர்யத்தைத் தாங்க முடியாமல், நேரே அந்தப் பேராசிரியர் இருந்த அறைக்குப் போனான். ``சார்... நீங்க சொன்னபடியே செஞ்சேன். இந்த முறை யாரும் எந்தத் திருத்தமும் செய்யலை’’ என்று விஷயத்தைச் சொன்னான்.

“அது ஒண்ணுமில்லைப்பா. ஒருத்தர் செய்யற வேலையில மத்தவங்களால ஈஸியா குற்றம் கண்டுபிடிச்சிட முடியும். ஆனா, அதைச் சரிசெய்யணும்னா ஒருத்தர்கூட வர மாட்டாங்க’’ என்றார் பேராசிரியர்.

ஒருவர் செய்த தவறைச் சுட்டிக்காட்டும்போது, அது அவரைக் காயப்படுத்தக் கூடாது; அந்தத் தவறை அவர் திரும்பவும் செய்யாமலிருக்க உதவ வேண்டும். அதேபோல தவறுகளைக் களைவது என்பது வெற்றியை நோக்கிய பயணத்தின் முக்கிய கட்டம் என்பதை சம்பந்தப்பட்டவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close