வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (23/01/2018)

கடைசி தொடர்பு:16:26 (23/01/2018)

“எனக்கு யாரும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை!’’ சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

‘‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள்; நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’என்று இளைஞர்களிடம் வீரமுழக்கமிட்டவர் சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய பிறந்த தினம் இன்று. 

நாட்டின் முதன்மைப் பணிகளில் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ். தேர்வில், இந்திய அளவில் நான்காம் இடம்பெற்றுத் தேர்ச்சியடைகிறார் சுபாஷ் சந்திரபோஸ். மிகப்பெரிய பதவி, அரசாங்க வேலை என்பதையெல்லாம் தாண்டி, நாட்டின் விடுதலைக்காக அந்தப் பதவியையே தூக்கியெறிகிறார் போஸ். அதற்கான ராஜினாமா கடிதத்தை அந்தத் துறை உயர் அதிகாரியிடம் கொடுக்கிறார். வாங்கிப் பார்த்த அந்த அதிகாரி சுபாஷிடம், “உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று கேட்கிறார். அதற்கு சுபாஷ், “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும்; ஆனால், என் தாய்நாட்டின் வருத்தம் அதைவிடப் பெரியது” என்று சொல்லி அந்த அதிகாரிக்கே அதிர்ச்சியளித்தார். 

சுபாஷுக்கு நாட்டின் மீதிருந்த தீவிரப் பற்று காரணமாகச் சுதந்திரப் போராட்டத்தைக் கையிலெடுத்தார்; அதற்காக ஆண்கள் மற்றும் பெண்களை ஒன்றுதிரட்டினார்; அதன்மூலம் ஒரு வலிமைமிக்க ராணுவத்தை உருவாக்கினார். இந்தப் படையைக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சியாளரான போஸ், ஒருமுறை வீட்டுச் சிறையில் பயங்கரக் கண்காணிப்பில் இருந்தபோது ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தரைவழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். ஒன்பது நாடுகளின் ஆதரவுடன் ஒரு பெரும்படையை உருவாக்கி வலம்வந்த சுபாஷ், “இந்தத் தற்காலிகத் தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள்; இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்தச் சக்திக்கும் இல்லை” என்று வானொலி மூலம் குரல்கொடுத்தார். 

ஜெர்மனியில் சுபாஷ் தங்கியிருந்தபோது ஹிட்லரிடம், “இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு உதவி செய்யவேண்டும்” என வேண்டுகோள் வைக்கிறார். என்னதான் சுபாஷ் ஹிட்லரிடம் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், அவருடைய தேசப்பற்று அவரைக் கோபமடையச் செய்தது. இந்தியர்களை, ‘காட்டுமிராண்டிகள்’ என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட அதை எதிர்த்துக் குரல்கொடுக்கிறார் போஸ். அத்துடன் நில்லாமல், அந்த வாக்கியத்தைத் திரும்பப் பெறவும் வற்புறுத்துகிறார். இதனால் கோபமடைந்த ஹிட்லர், “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று சொல்ல... அதற்கு சுபாஷ், “எனக்கு எவரும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்” என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டுக் கோபமாக வெளியேறினார். அன்று உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லரிடமே, சுபாஷ் அப்படிப் பேசியதை நினைத்து வியந்தனர் ஹிட்லரின் உதவியாளர்கள்.  

அவர் உருவாக்கிய ஐ.என்.ஏ. வீரர்களின் அணிவகுப்பினைப் பார்வையிட்டு... அவர்களிடம், “நான் உங்களைச் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்வேன்” என்று உறுதியளித்தார். அத்துடன் கிழக்கு ஆசியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஐ.என்.ஏ-வுக்கு நிதி திரட்டினார்; படைக்கு ஆள் சேர்த்தார்; தன் படை வீரர்களிடம் உரை நிகழ்த்தி எழுச்சியை உண்டாக்கினார். இவருடைய பேச்சைக் கண்ட பலரும் வியந்தனர்; விவாதித்தனர். இப்படி சுபாஷாக வலம்வந்த போஸ், பின்னாளில் ‘நேதாஜி’ என்று அழைக்கப்பட்டு, பலராலும் சபாஷ் போடவைக்கப்பட்டார்.  

குறிப்பாகப் பர்மிய நாட்டுத் தலைவர் பாமோவ், “போஸ் ஆழமாகப் பேசத் தொடங்கினால், இன்னொரு சக மனிதரிடம் பேசுவதுபோல் நீங்கள் உணரமாட்டீர்கள்; மாறாக, நம்மைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட  ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ, அப்படி உணர்வீர்கள்” என்று புகழ்ந்துள்ளார். 
வரலாற்று ஆய்வாளர் பீட்டர் ஃபே, “போஸ் போகுமிடமெல்லாம் அவர் பேச்சைக் கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்குச் சமர்ப்பித்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இளைஞர்களின் மனதில் உந்துசக்தியை விதைத்து நாட்டின் சுதந்திரத்துக்காக இறுதிவரை போராடிய புரட்சியாளர் சுபாஷ் சந்திரபோஸின் மரணம், இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்