Published:Updated:

பழங்குடி மக்களைப் புறக்கணித்துவிட்டு விழா நடத்திய கோவை மாவட்ட நிர்வாகம்!

குருபிரசாத்
பழங்குடி மக்களைப் புறக்கணித்துவிட்டு விழா  நடத்திய கோவை மாவட்ட நிர்வாகம்!
பழங்குடி மக்களைப் புறக்கணித்துவிட்டு விழா நடத்திய கோவை மாவட்ட நிர்வாகம்!

பழங்குடி மக்களைப் புறக்கணித்துவிட்டு, கோவை மாவட்ட நிர்வாகம் மனித நேய வார விழாவைக் கொண்டாடியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித நேய வார விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாகக் கண்காட்சி நடைபெற்றது. மலைவாழ் மக்களின், பாரம்பர்ய நடனத்தோடு நடைபெற்ற இந்தக் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகம் முழுவதும் மனிதநேய வார விழா, ஜனவரி மாதத்தின் கடைசி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 1998-ம் ஆண்டு முதல், மனித நேய வார விழா தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. சாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து இந்த மனித நேய வார விழா கொண்டாடி வருகின்றனர். ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தியின் நினைவு நாளில் மனித நேய வார விழா நிறைவடைகிறது. மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் உண்மையான பயனாளிகளை எடுத்துவிட்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் உறவினர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இது குறித்து மலைவாழ் மக்களுக்காகப் பணிபுரிந்து வரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், "பெயரளவுக்கு மட்டுமே மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது. இது குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. நண்பர் ஒருவரின் மூலம்தான், எனக்கு தகவல் தெரிய வந்தது. மலைவாழ் மக்களுக்கு அடிப்படை சலுகைகள் வழங்கப்படாமல், பெரும் சிரமத்துக்குள்ளாக்கும் துறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாறியுள்ளது. அதிகாரிகள் மக்களின் குறைகளைப் போக்கி, அரசின் நலத்திட்டங்களை வழங்க முன் வர வேண்டும். இந்திய அளவில் மலைவாழ் மக்களுக்காக நடைபெற்ற கண்காட்சியில், கோவை மலைவாழ் மக்கள் இரண்டாம் இடம் பெற்றதைக்கூட பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தெரியாமல் இருக்கின்றனர்" என்றார்.