Published:Updated:

“எல்லோரும் வாழ வேண்டும்!”- லாபத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்த திருச்சி மாநகராட்சி

சி.ய.ஆனந்தகுமார்
“எல்லோரும் வாழ வேண்டும்!”- லாபத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்த திருச்சி மாநகராட்சி
“எல்லோரும் வாழ வேண்டும்!”- லாபத்தை தொழிலாளர்களுக்குக் கொடுத்த திருச்சி மாநகராட்சி

திருச்சி மாநகராட்சி மற்றும் யுகா பெண்கள் அமைப்பு இணைந்து திருச்சியை தூய்மை நகராக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தில்லைநகர் மக்கள் மன்றத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் யுகா பெண்கள் அமைப்பு  அல்லிராணி பாலாஜி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வணிகர்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி, உதவி ஆணையர் சி.பிரபாகரன், உதவி செயற் பொறியாளர் கே.எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும்  வணிகர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கியப்பின் பேசிய கலெக்டர் ராசாமணி,

“50மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை வரும் 26-ம் தேதிக்குப் பிறகு பயன்படுத்தக் கூடாது. மீறிப் பயன்படுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சிகள் கழிப்பறை பயன்பாட்டில் முழுமை அடைந்துள்ளன. திடக்கழிவு மேலாண்மையும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

திருச்சி மாநகராட்சி, தூய்மை மாநகரமாக இந்திய அளவில் கடந்த வருடம் 6-வது இடத்தைப் பிடித்தது. 20 நுண்உரம் செயலாக்கமையங்கள் அமைத்து 140 வாகனங்களில் வீடுதோறும்  மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்  மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பெறப்படுகிறது.  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் மாநகராட்சியின் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், அன்றாடம் சேரக்கூடிய மக்காத குப்பைகளை பொதுமக்கள் பிரித்து வழங்கியதில், இதுவரை 5000 டன் பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக சேகரிப்பட்டு, அவை 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்தப் பணம் தூய்மை பணியாளர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தூய்மையில் திருச்சி மாநகரம் இந்தாண்டு இந்திய அளவில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றார்.