வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (25/01/2018)

கடைசி தொடர்பு:12:29 (02/03/2018)

ஒரு சிறந்த நிர்வாகியாக என்னென்ன தகுதிகள் வேண்டும்? - எடுத்துச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை! #MotivationStory

கதை

`ங்கே அன்பு இருக்கிறதோ, அங்கேதான் வாழ்க்கை இருக்கிறது’ - தெளிவாகச் சொல்லியிருக்கிறார் மகாத்மா காந்தி. பல ஆண்டுகளை பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பாகக் கழித்து சுக வாழ்க்கை வாழும் நம்மில் பலர் அந்த நேசத்தின் அருமையை உணர்வதில்லை. பெற்றோர், நம் குடும்ப உறுப்பினர், நம் மீது பிரியமுள்ள யாரோ ஒருவரால்தான் இந்த வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. நாம் எல்லோருமே யாரோ ஒருவர் நம் மேல் காட்டும் அன்பின் பொருட்டுத்தான் வளர்கிறோம், வாழ்கிறோம், அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கிறோம். இந்த அருமையை, அன்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் மேலே மேலே உயர்கிறார்கள். மற்றவர்களையும் அரவணைத்துச் சென்று உயரவைப்பார்கள். ஒரு சிறந்த நிர்வாகியாக மிளிர வேண்டும் என்கிற லட்சியம் உள்ளவர்கள் அவசியம் புரிந்துவைத்திருக்கவேண்டிய உண்மை இது. அதை உணர்த்தும் கதை ஒன்று உண்டு.

நேர்முகத்தேர்வு

நியூயார்க்கில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில், மேலாளர் பணி காலியாக இருந்தது. அதை அறிந்து இளைஞன் ஒருவன் விண்ணப்பித்திருந்தான். அவனுடைய கல்வித் தகுதி பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பட்ட மேற்படிப்பு வரை அவன் வாங்கிய மதிப்பெண்களே அவன் யார் என்று எடுத்துச் சொல்லப் போதுமானதாக இருந்தது. அவன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான். நேரடியாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடன் ஒரு நேர்காணல் இருந்தது. அதில் தேறிவிட்டால் அவனுக்கு வேலை உத்தரவாதம். அந்த நாளும் வந்தது. 

நிர்வாக இயக்குநர், அவனுடைய சான்றிதழ்களையெல்லாம் பார்த்தார். அவருக்கு முழு திருப்தி. மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். ``படிக்கும்போது உனக்கு ஸ்காலர்ஷிப் ஏதாவது கிடைச்சுதா?’’ 

நேர்முக தேர்வு

``இல்லை சார்’’ என்றான் இளைஞன். 

``உன்னோட அப்பாதான் கஷ்டப்பட்டு உன்னைப் படிக்கவெச்சாரா?’’ 

``இல்லை சார். எனக்கு ஒரு வயசு நடக்கும்போதே அப்பா இறந்து போயிட்டார். அம்மாதான் என்னைப் படிக்கவெச்சாங்க.’’ 

``உங்க அம்மா எங்கே வேலை பார்க்கறாங்க?’’ 

``அவங்க ஒரு சலவைத் தொழிலாளி சார். துணிகளை வாங்கிட்டு வந்து வீட்டுலேயே துவைச்சுக் குடுப்பாங்க.’’ 

இதைக் கேட்டு அவர் ஆச்சர்யப்பட்டார். ``சரி... உன் கைகளை நீட்டு’’ என்றார். இளைஞன் புரியாமல் தன் இரு கைகளையும் நீட்டினான். அவனுடைய கைகள் வழுவழுவென்று, பளபளப்பாக, எந்த மாசு, மருவும் இல்லாமல் சுத்தமாக இருந்தன. 

இப்போது அடுத்த கேள்வி. ``உன் அம்மா துணி துவைக்கும்போது நீ எப்போவாவது அவங்களுக்கு உதவி செஞ்சிருக்கியா?’’ 

``எங்கம்மா அதுக்கு விடவே மாட்டாங்க. `உனக்கு எதுக்கு இந்த வேலை... போய் படிக்கிற வேலையைப் பாரு. பாடத்தையெல்லாம் படிச்சி முடிச்சிட்டீன்னா, வேற புத்தகங்களை எடுத்துப் படி’னு சொல்லிடுவாங்க. அதோட, என்னைவிட என் அம்மா ரொம்ப ஸ்பீடா துணி துவைப்பாங்க சார்.’’ 

துணி துவைத்தல்

``சரி... எனக்காக ஒரு உதவி செய்வியா?’’ 

``சொல்லுங்க சார்.’’ 

``இன்னிக்கி வீட்டுக்குப் போ. போனதும் உன்னோட அம்மாவோட கைகளை உன் கைகளால் கழுவி விடு. நாளைக்கு வந்து அந்த அனுபவம் எப்படி இருக்குனு எனக்குச் சொல்லு.... சரியா?’’ 

அவர் எதற்கு இப்படிச் சொல்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனாலும், ``சரி’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். அந்த நிறுவன வேலை என்பது ஓர் அரிய வாய்ப்பு. அவனைப் போன்ற இளைஞர்கள் மேலே மேலே உயர இந்த வேலை ஒரு வலுவான களம். இந்த யோசனையோடு வீட்டுக்கு வந்தான். அம்மாவிடம், ``அம்மா... இங்கே வாயேன்... ஒரு விஷயம்...’’ என்று அழைத்தவன், அம்மாவின் கைகளைக் கழுவ வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொன்னான். 

அம்மாவுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம். ஆனாலும், மகிழ்ச்சியோடு அதற்கு ஒப்புக்கொண்டார். குளியலறைக்கு அம்மாவை அழைத்துப் போய், அவருடைய கைகளை சோப்புப் போட்டுக் கழுவ ஆரம்பித்தான் இளைஞன். அடுத்த கணம் அவன் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்தக் கைகளில் விழுந்தது. சுருங்கிப்போன, ஆங்காங்கே சிராய்ப்புகளுடனிருந்த, கரடு முரடான அம்மாவின் கையை அப்போதுதான் அவன் பார்க்கிறான். சில சிராய்ப்புகளில் சோப் படும்போது, ``மெதுவாப்பா... எரியுது’’ என்றார் அம்மா. 

கைகள்

`இந்தக் கைகள்தான் தினமும் ஊரார் துணியைத் துவைத்துப் போட்டு, சம்பாதித்து, என் ஸ்கூல் ஃபீஸைக் கட்ட உதவியது. இதிலுள்ள சிராய்ப்புகளும் காயங்களும் என் பட்டப்படிப்புக்கும், எதிர்காலத்துக்கும் அம்மா உழைத்ததற்காகக் கிடைத்தப் பரிசுகள்...’ இப்படியெல்லாம் அவன் யோசனை நீண்டது. துவைத்து முடித்தான். அன்றைக்கு அம்மாவை அவன் வேலை செய்யவிடவில்லை. அம்மா தடுத்தும் கேட்காமல், வீட்டிலிருந்த துணிகளையெல்லாம் அவனே துவைத்துப் போட்டான். அன்றைக்கு இரவு அம்மாவும் அவனும் சாப்பிட்டுவிட்டு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அடுத்த நாள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவனை விசாரித்தார். அவன் நடந்ததைச் சொன்னான்... ``சார்... என் அம்மா இல்லாம நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாதுங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன். எங்கம்மாவுக்கு துவைக்க உதவி செஞ்சபோதுதான் அது எவ்வளவு கஷ்டமான வேலைனு புரிஞ்சுது. இப்போ எனக்கு குடும்பம்னா என்ன அதன் மதிப்பு என்ன, உறவுகளின் மதிப்பு எல்லாம் புரியுது...’’ 

``என் மேனேஜருக்கு இதெல்லாம்தான் இருக்கணும்னு நான் எதிர்பார்த்தேன். மத்தவங்களோட கஷ்டம் புரிஞ்ச, மத்தவங்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் உள்ள, பணம் சம்பாதிக்கறது மட்டுமே லட்சியம்னு இல்லாத ஓர் ஆள்தான் என் மேனேஜரா இருக்கணும். நீ எப்போ வேணாலும் வேலையில சேர்ந்துக்கலாம்ப்பா...’’ 

***  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்