மலேசிய விமானம் தேடும் பணி மீண்டும் தொடங்கியது... என்ன நடக்கும் இந்த முறை?

விமானம்

2014 ஆம் ஆண்டு மார்ச்  8-ம் தேதியை மலேசிய மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் அன்றைக்குத்தான் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று காணாமல் போனது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வழக்கமாக இயங்கும் அதிகாலை விமானச் சேவை அது, தனது பயணத்தைத் தொடங்குவதற்கு தயாராக இருந்தது MH370 விமானம். விமானத்தில் மொத்தம் 227 பயணிகள் இருந்தார்கள் அதில் 153 பேர் சீனர்கள். விமானத்தை இயக்குவதற்கு தலைமை பைலட்டான ஜஹாரி அஹ்மது ஷா-வும் துணை பைலட்டான ஃபரீக் அப்துல் ஹமீதும் தயாரானார்கள். விமானத்தில் ஏறிய பின்பு தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்புகொள்கிறார்கள். தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை ஆங்கிலத்தில் ATC (Air traffic control) என்று அழைப்பார்கள். வானில் விமானத்தை வழிநடத்துவதற்காக ATC தொடர்ந்து தொடர்பிலேயே இருக்கும். அன்றைக்கும் வழக்கம்போல உரையாடல் தொடங்குகிறது

மலேசிய விமானம்

"குட் மார்னிங் ATC , இது MH370" தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து பதில் வருகிறது " குட் மார்னிங் MH370, ஓடுதளம் 32R உங்களுக்கு ஒதுக்கப்பட்டிக்கிறது அங்கே செல்லலாம்" அடுத்த சில நிமிடங்களில் ஓடுதளத்திற்குச் சென்று மேலெழும்பிப் பறக்கத் தொடங்குகிறது MH370. கோலாலம்பூரிலிருந்து அதிகாலை 12:35 மணியளவில் புறப்பட்டு 6.30 மணி அளவில் பெய்ஜிங்கை அடைவதுதான் வழக்கமான நடைமுறை. விமானம் புறப்பட்டு சற்று நேரத்திலேயே தரையிலிருந்து உத்தரவு வருகிறது, "விமானம் பறக்கும் உயரத்தை 25,000 அடிக்கு உயர்த்தவும்" விமானிகள் பதிலளிக்கிறார்கள் "சரி செயல்படுத்துகிறோம்". அடுத்த சில நிமிடங்கள் கழித்து மற்றோர் உத்தரவு " MH370 நீங்கள் பறக்கும் உயரத்தை 35,000 அடியாக உயர்த்தி அதிலேயே தொடர்ந்து பறக்கவும் " "சரி செயல்படுத்துகிறோம்". சில நிமிடங்களில் விமானத்திலிருந்து பதில் வருகிறது " இது MH370 விமானம் 35,000 அடியில் பறந்துகொண்டிருக்கிறோம் ", "சரி அதிலேயே தொடரலாம்". அதுவரை விமானத்திற்கும் ATC-க்கும் இடையேயான உரையாடலில் அப்பொழுதுதான் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது ATC-யிடமிருந்து எந்தவிதக் கேள்விகளும் இல்லாதபொழுதும் விமானம் மீண்டும் தகவல் அனுப்புகிறது "இது MH370 விமானம் 35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் " ஒரே பதில் இரண்டு தடவை ATC-யிடம் தெரிவிக்கப்படுகிறது. இதுபோல நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் சந்தேகமடைந்த ATC இரண்டு முறை விமானத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்கிறது எந்தப் பதிலும் வரவில்லை. அதே நேரத்தில் விமானம் வியட்நாம் நாட்டு எல்லைக்குள் நுழைந்துவிட்டதால் ஹோ சி மின் நகரத்தின் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது கோலாலம்பூர் ATC. இப்பொழுது MH370-லிருந்து பதில் வருகிறது " ஆல் ரைட், குட் நைட்" இதுதான் MH370 அனுப்பிய கடைசித் தகவல். 

அதன் பிறகு தனது வழக்கமான பாதையிலிருந்து விலகிப் பறக்கத் தொடங்கியது MH370. மலேசியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான தென் சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென இடதுபுறமாகத் திரும்பி இந்தியப்பெருங்கடலை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. அதன் பிறகு விமானத்தை தொடர்புகொள்ள முடியவில்லை, ரேடாரிலிருந்தும் மறைந்தது. 'குட் மார்னிங்' என்று தொடங்கிய விமானத்தின் பயணம் 'குட் நைட்' என்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்துபோனது. நேரம் செல்லச் செல்ல விமானத்தின் நிலை பற்றி கேள்வி எழவே பதில் சொல்லத் திணறியது மலேசியா. விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கான பதில் யாருக்கும் தெரியவில்லை, ஒரு வேளை விபத்து நடைபெற்றிருந்தால் அந்த இடமோ, அதில் பயணம் செய்த பயணிகளின் உடல்களோ கண்டறியப்பட்டிருக்கும். ஏழு மணி நேரத்திற்கும் மேல் பறப்பதற்கான எரிபொருளை விமானம் கொண்டிருந்தது. விபத்து ஏற்பட்டிருந்தால் அதிலுள்ள எரிபொருள் நிச்சயம் ஏதாவது சிறு தடயத்தையாவது ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அதற்கான அடையாளங்களும் இதுவரை இல்லை. யாருக்கும் பதில் தெரியாத காரணத்தால் பல புரளிகள் கிளம்பின. பைலட் தற்கொலை செய்துகொள்வதற்காகத்தான் விமானத்தை பயன்படுத்திக்கொண்டார், சிஐஏ தான் விமானத்தைக் கடத்தி எங்கேயோ ஒளித்துவைத்திருக்கிறது, தீவிரவாதிகளின் சதிவேலை, என்பது தொடங்கி ஏலியன்கள் விமானத்தை கடத்தி வேற்றுகிரகத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பது வரைக்கும் பல புரளிகள் கிளம்பின.

வரைபடம்

சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகள் விமானத்தைத் தேடும் பணியில் இறங்கின. செயற்கைக்கோள்கள், ரோந்துக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் என எதை வைத்துத் தேடியும் ஒருவராலும் எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வருடத்துக்குப்  பிறகு 2015 ஜூலையில் ஒரு வழியாக இந்தியப் பெருங்கடலில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீயூனியன் என்ற தீவின் கடற்கரையில் ஒரு விமானத்தின் இறக்கைப் பகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டது அது MH370 விமானத்தின் ஒரு பாகம்தான் என்று அதன் பின்னர் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் விமானத்தைப் பற்றி சொல்லிக்கொள்ளும்படியான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. தேடுதல் பணிகள் ஒவ்வொன்றாகக் குறைக்கப்பட்டு கடந்த வருடத்தில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மர்மம் என்ற வார்த்தைக்கு நிகழ்கால சான்றாகிப் போனது MH370. 

மீண்டும் தொடங்கிய தேடல்

 

வரைபடம்

விமானம் காணாமல் போய் நான்கு ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் தேடுதலுக்கான இறுதி முயற்சியை மீண்டும் தொடங்கியிருக்கிறது மலேசியா. இதற்காக ஒசேன் இன்ஃபினிட்டி என்ற அமெரிக்க நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. 90 நாள்களுக்குள் இந்தத் தேடுதலை நடத்தி முடிக்கவும் அதில் விமானத்தின் கறுப்புப் பெட்டியோ அல்லது இதர பாகங்களோ கண்டறியப்பட்டால்  70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும் எதுவும் கண்டறியப்படவில்லை என்றால் பணம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. "எங்களுக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக மலேசிய அரசிற்கு நன்றி, எங்களால் முடிந்த அளவிற்கு தேடுதலை நடத்துவோம் எனக்கு எங்கள் தொழில்நுட்பத்தின் மேலும் எங்கள் குழுவினர் மீதும் பலத்த நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆய்வில் ஏதாவது கண்டறியப்பட்டால் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளாவது கிடைக்கும் " என்று தெரிவித்திருக்கிறார் ஒசேன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் சிஇஓ ஆலிவர் ப்ளங்கட் .

AUV கருவி

தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக கருதப்படும் இடமான ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் கடல் பகுதில் தனது ஆய்வைத் தொடங்கியிருகிறது ஒசேன் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் அதிநவீனக் கப்பல். இதில் இருக்கும் AUV எனப்படும் கருவி 6000 அடி வரை ஆழ்கடலில் ஆய்வு செய்து துல்லியமான டேட்டாக்களைத் தரும். விமானத்தில் பயணம் செய்த 239 பேர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் இனிமேல் திரும்பிப் போவதில்லை என்பது தெரியும் இருந்தாலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு வேளை விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டால் MH370 விமானத்திற்கு பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!