‘‘வைரமுத்துவை ஆதரித்தால் மிரட்டல் வரும் என மறைமுகமாக எச்சரிக்கிறார்கள்!’’ - எழுத்தாளர் சு.வெங்கடசேன் | Writer S.Venkatesan got life Threatening phone calls for his statement supporting Vairamuthu

வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (25/01/2018)

கடைசி தொடர்பு:16:15 (25/01/2018)

‘‘வைரமுத்துவை ஆதரித்தால் மிரட்டல் வரும் என மறைமுகமாக எச்சரிக்கிறார்கள்!’’ - எழுத்தாளர் சு.வெங்கடசேன்

சில வாரங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் `தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் உரை நிகழ்த்தியிருந்தார் கவிஞர் வைரமுத்து. அப்போது ஆண்டாளை, வைரமுத்து இழிவுப்படுத்திவிட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. ஆண்டாள் குறித்த தனது கட்டுரையில், `வெளிநாட்டவர் ஒருவர் கூறிய மேற்கோளைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்' எனத் தெளிவான விளக்கம் ஒன்றையும் பதித்திருந்தார் வைரமுத்து. அந்த உரையையும் வைரமுத்துவையும் பொது மேடையில் கடுமையாக விமர்சித்தார் ஹெச்.ராஜா. சில அமைப்பினர், சமூக வலைதளங்களில் `வைரமுத்து, ஆண்டாள் கோயிலில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தொடர்ந்து வீடியோ பதிவேற்றம் செய்துவருகின்றனர். சென்னைப் புத்தகக் காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எழுத்தாளர்கள் 18 பேர் இணைந்து, வைரமுத்துவின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாகக் கூறி வைரமுத்துவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். அவர்களில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் ஒருவர்.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன், `காவல் கோட்டம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்; கீழடியில் நடைபெற்றுவந்த அகழ்வாராய்ச்சி குறித்து தொடர்ந்து  எழுதியும் இயங்கியும் வருபவர். தமிழகத்தின் தொன்மம் சார்ந்த பல ஆய்வுகளிலும் ஈடுபடுபவர். கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்றபோது அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருப்பவர்.

சு.வெங்கடேசன்

இவர் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. எழுத்தாளர்களுக்கு, இதுபோன்ற கொலை மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் சமீபகாலமாக தொடர்ந்து வருவது அதிகரித்துள்ளது. ஒரு விஷயம் குறித்து தங்கள் கருத்தை ஒருவர் பதிவுசெய்யும்போது, அதுகுறித்த கருத்து விவாதங்கள் நடைபெறாமல் மிரட்டல் போக்குகள் நடப்பது கண்டிக்கத்தக்க ஒன்று. கொலை மிரட்டல் குறித்து எழுத்தாளர் சு.வெங்கடேசனிடம் பேசினேன்.

``சில வாரங்களுக்கு முன்னர் வைரமுத்துவுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் 18 பேர் இணைந்து கூட்டு நிலைப்பாடு ஒன்றை எடுத்தோம். அவர்களை எல்லாம் நான்தான் ஒருங்கிணைத்து இந்த நிலைப்பாட்டை எடுக்கச் சொன்னதாகக் கூறி என்னைத் திட்டுகின்றனர். இது மக்களை அச்சுறுத்தும் ஒரு போக்குதான். இனி வேறு யாராவது வைரமுத்துவுக்கு ஆதரவாகவோ, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவோ நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவர்களுக்கும்  மிரட்டல்கள் வரும் என எச்சரிக்கை விடுக்க நினைக்கிறார்கள். ஆனால், நான் அந்த எழுத்தாளர்களை ஒன்றிணைத்து நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லவில்லை. அவர்களாகவே முன்வந்து அந்த நிலைப்பாட்டை எடுத்தனர். வந்த அழைப்புகள் அனைத்தும் `இன்டர்நெட்' அழைப்புகளாக இருந்தன. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போராட்டங்களை, நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்'' என்றார். 

சு.வெங்கடேசனுக்கு மிரட்டல் வந்ததையொட்டி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், கௌரவத் தலைவர் அருணன் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் `சு.வெங்கடேசனை மிரட்டும் சாதிய, மதவாத சக்திகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களைத் தனிமைப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். ஆத்திரமூட்டல்களுக்கு இரையாகாமல் நமது மதச்சார்பற்ற, சாதிய மறுப்புப் பண்பாட்டு அரசியலை முன்னெடுப்போம்' எனக் குறிப்பிட்டிருந்தனர். 

எழுத்தாளர்களுக்கு இதுபோன்ற கொலை மிரட்டல் தொடர்ந்து வருவதும், அச்சுறுத்தல்கள் வருவதும் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகின்றன. முற்போக்கான கருத்துகளைத் தெரிவிக்கும் எழுத்தாளர்களை அச்சுறுத்துவது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என, எழுத்தாளர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்