நெஸ்ட் ராபர்ஸ்... கொக்கைன் கடத்தும் புறா... இது பறவைக் கடத்தலின் ரகசிய அத்தியாயம்! - அத்தியாயம் 8 | nest roppers and birds trafficking

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (27/01/2018)

கடைசி தொடர்பு:15:38 (27/01/2018)

நெஸ்ட் ராபர்ஸ்... கொக்கைன் கடத்தும் புறா... இது பறவைக் கடத்தலின் ரகசிய அத்தியாயம்! - அத்தியாயம் 8

கடத்தலின் முக்கிய விஷயம் எதைக் கடத்துகிறோம், எப்படிக் கடத்துகிறோம் என்பதுதான். 24மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கிற விமான நிலையங்களில் உயிரோடு இருக்கிற உயிரினத்தைக் கடத்துவதெல்லாம் கரணம் தப்பினால் மரணம் வகையான செயல்கள். புலிக் குட்டிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, தேவாங்குகளின் வாயைக் கட்டி, பாம்பின் பல்லை பிடுங்கி என  உயிரோடு இருக்கிற புலிகளில் இருந்து அணில் வரை  ஜஸ்ட் லைக் தட் எனக் கடத்தி விடுகிறார்கள்.  காசு பணம் துட்டு மணி என்கிற ஒன்று பல  எல்லைகளை உடைக்கும். பல எல்லைகளை உருவாக்கும். அதில் ஒன்று  பறவைகள் கடத்தல்  தொடர்பானது. 

2011   செப்டம்பர் 26ம் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ரோச்சம்பியூ விமான நிலையத்தில் வழக்கமான சோதனை நடக்கிறது. அப்போது சந்தேகப்படும்படியான ஒரு வாலிபரை விசாரிக்கிறார்கள். அவரது முன்னுக்குப் பின் முரணான தகவலில் அவரைச் சோதனை செய்ததில் அதிகாரிகளுக்கு புது விதமான  அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வாலிபர் தன்னுடைய உள்ளாடைக்குள் 12 ஹம்மிங்பேர்ட் பறவைகளை மறைத்து உயிருடன் கடத்தி வந்திருந்தார். பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உடைக்குள் அந்தப் பறவைகள் பத்திரமாக இருந்தன.  பறவைகளின் உடலை பக்காவாக துணி மூலமாகச் சுற்றி அவை அசையாதவண்ணம் இருந்ததைப் பார்த்து உறைந்து போனார்கள் அதிகாரிகள். காவல்துறை அவரை  அப்படியே அள்ளிக் கொண்டு போய் கம்பி என்ன வைத்தது.

பறவை

இந்தோனேசியா நகரான சூரபயாவில் உள்ள  தஞ்சங் பேரக் துறைமுகத்தில் 2015 ஆண்டு  மே  மாதம் 4 தேதி சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுகிறார்கள். அங்கிருக்கிற ஒவ்வொரு பொருளாக சோதனை செய்ததில் எந்தப்  பொருட்களும் சிக்கவில்லை.  இறுதிக்கட்டத்தில் அங்கிருக்கிற ஒரு பெட்டியை சோதனை செய்ததில் தண்ணீர் பாட்டில்கள் இருப்பது தெரிகிறது. அந்தப் பெட்டியை சோதனை செய்கிறவர்களுக்கு பகீரென இருந்தது. காரணம் வாட்டர் பாட்டில்களில் cockatoos  கோக்கடோஷ் வகையைச் சார்ந்த 24 பறவைகள் பாட்டிலுக்குள் அடைத்துக் கடத்த இருந்தது தெரியவந்தது. பாட்டிலின் அடிப்பாகத்தை வெட்டி அதற்குள் பறவைகளை வைத்துக் கடத்துவது சுங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இதற்கு முன்பான காலக்கட்டத்தில் இப்படியான  கடத்தல் குறித்த செய்திகள் எதையும் அவர்கள் கேட்டதுமில்லை, கண்டறிந்ததுமில்லை. 2007 ஆம் ஆண்டில் மஞ்சள் - க்ரீஸ்டெட் கோக்கடோஷ்  பறவையை அழிந்துவரும் பட்டியலில் முதலிடத்தில்  இருப்பதாகச் சர்வதேச பறவைகள் சம்மேளனம் அறிவித்திருந்தது.   கோக்கடோஷ் பறவை இனம்  மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்கிற பறவை இனம். அவை வருடத்திற்கு ஒரு முறை இரண்டு  முட்டைகள்  மட்டுமே இடுகின்றன. கைப்பற்றப்பட்ட ஒரு பறவையின் சர்வதேச விலை 400 அமெரிக்க டாலர்கள். 

கடத்தல்

                                                                                                              Photo Credit  Barcroft Media 


2017 நவம்பர் 16ம் தேதி இந்தோனேசியா காவல்துறையின் தீவிர வாகனச் சோதனையில் 125 பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எப்படி பறிமுதல் செய்தார்கள் என்கிற விஷயம் அப்போது உலகத்திற்குத் தெரிய வந்த பொழுது வினோதமாக இருந்தது. வீடுகளில் பயன்படுத்தப்படும் பைப்புகளை  துண்டு துண்டாக வெட்டி அவற்றுக்குள் பறவைகளை வைத்துக் கடத்தி வந்திருந்தார்கள். பைப்பின் இரண்டு பக்கமும் வயர்களால் பின்னப்பட்டிருந்தது.  அதில் 84 கிளிகளும் 41 கோக்கடோஷ் பறவைகளும் இருந்தன. பறவைகளை வனத்துறையிடம் கொடுத்துவிட்டுச் சம்மந்தப்பட்ட நான்கு பேரை உள்ளே தள்ளியது காவல்துறை. 

2014 மே மாதம் 21 தேதி  ஆஸ்திரேலியா  சுங்க அதிகாரிகள் சிட்னி விமான நிலையத்தில் போதை பொருள் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்து கொண்டிருந்தனர். துபாயில் இருந்து சிட்னிக்கு வந்த விமானத்தில் வந்த ஒருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்கிறார்கள். எந்தப் பொருளும் இல்லை என நினைக்கிறவர்கள் அவரது உடலில் வித்தியாசமாக எதோ இருப்பதை உணர்ந்து சட்டையை கழட்டச் சொல்கிறார்கள். பறவைகள் கடத்தலின் அடுத்த கட்ட  ட்விஸ்ட் இங்கிருந்துதான்  ஆரம்பமானது.  அவர் தன்னுடைய உடலில் மறைத்து வைத்துக் கடத்தியது பறவைகளை அல்ல, பறவைகளின் முட்டையை. சுமார் 16 அழிவின் விளிம்பில் இருந்த பெரு நாட்டின் பறவையின்  முட்டைகள் இருந்திருக்கின்றன. எல்லா முட்டைகளும் கரு முட்டைகளாக இருந்தது.  கடத்தியவருக்கு முட்டை என்று மட்டுமே தெரியும், எந்தப் பறவையின் முட்டை என்பது கடத்த சொன்னவருக்கே வெளிச்சம்.  கடத்தலுக்குக் காரண கர்த்தாவான முக்கிய புள்ளியை கோட்டை விடுகிற காவல்துறை  சிக்கிய புள்ளியை முக்கிய புள்ளியாக அறிவிக்கிறது. எந்தப் பறவையின் முட்டை எனத் தெரியாததால் அழிந்து வரும் ஒரு பறவையின் முட்டை என்கிற முடிவிற்கு வருகிற காவல்துறை  93000 அமெரிக்க டாலர்கள் அபராதமும்  பத்து வருடங்கள் சிறையும் கொடுத்து அவரை  உள்ளே தள்ளியது. 

கடத்தல்

Photo Credit: Umbrios1

கண்கட்டி வித்தைகள் மூலமாக அநேக பறவைகளை  உயிருடனும் கொல்லப்பட்டும் கடத்தி விடுகிறார்கள். சிறிய வகை பறவைகளை உள்ளாடைகளிலும், காலணிகளுக்குள்ளும்  வைத்தும் கடத்துவது  அதிகரித்திருக்கிறது. கால் இழந்தவர்கள் பொருத்தியிருக்கிற  செயற்கை கால்களுக்குள் அவ்வளவு பறவைகளை உயிருடன் கடத்தி இருக்கிறார்கள். கடத்தல்காரர்களுக்கு மிக எளிதாகப் பறவைகள் கிடைத்து விடுவதால் அவற்றின் உயிரைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால் கடத்தப்படுகிற பறவைகளில் 70 சதவீத பறவைகள் இறந்து விடுகின்றன. தட்பவெட்ப நிலை உடல் ஆரோக்கியம் போன்றவற்றால் பாதிக்கப்படுகிற பறவைகளை மலிவான விலைக்கு வாங்கவும் விற்கவும் உலகம் முழுமைக்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். 

சில நேரங்களில் கடத்தல்காரர்கள் காவல்துறையை விட அதிக கவனத்துடன் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். கையில் ஒரு கூடையுடன் காடுகளுக்குள் செல்கிறவர்கள் பறவைகளின் கூடுகளை தேடுகிறார்கள். தென்படுகிற கூடுகளில் இருக்கும் முட்டைகளை ஒன்று விடாமல் கொள்ளையடிக்கிறார்கள்.   அவர்களுக்கு “நெஸ்ட் ராபர்ஸ்” எனப் பெயர். (பறவை கூடுகளில் கொள்ளையடிப்பவர்கள்).  ஒரு வகையில் “ஒரு இனத்தின் கருவறையில் கை  வைப்பதற்கு” சமமானது. கொள்ளையடிக்கப்படுகிற  முட்டைகளை நாடு விட்டு நாடு எளிதாகக் கடத்தி விட முடியும் என்பதால் இதில் ரிஸ்க் குறைவு. இது போன்ற முட்டை கடத்தல்  குறித்து  பிரேசிலின் குற்றத்தடுப்பு காவல்துறை அதிகாரி மரியானா என்பவர் 2017 ஆம் ஆண்டு  பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில்  "புகைப்படத்தில் இருந்தவரின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. அவரது முகத்தில் இருக்கிற சிரிப்பை பாருங்கள், யாரும் தன்னை கைது செய்து விட முடியாது என்கிற நம்பிக்கை அவரது சிரிப்பில் இருக்கிறது"  முட்டை கடத்துவதில் எந்த நடைமுறை சிக்கலும் இல்லை என்பதால் எந்த பயமும் இல்லாமல் கடத்துகிறார்கள் என்கிறார்.  கடத்தலுக்குப் பிறகு முட்டைகளைச் செயற்கை முறையில்  பொறிக்க வைக்கிறார்கள். சட்டவிரோதமாக வளர்க்கப்படும் அப்பறவையை மறைமுகமாக வளர்த்து நினைக்கிற விலைக்குச் சந்தையில்  விற்று விடுகிறார்கள்.  அப்படியான பறவைகளுக்கு அவர்கள் வைப்பதுதான் விலை. அப்படி விலை போகிற பறவைகள் பெரும்பாலும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கிற பறவைகளை மட்டுமல்ல காடுகளில் இருக்கக் கூடிய பறவைகளை வீடுகளில் வளர்ப்பது குற்றம் என்பது கடுமையாக்கப்பட வேண்டும் என்கிறார்கள் பறவை நல  ஆர்வலர்கள். 

புறா போதை பொருள் கடத்தல்

Photo Credit: AL-RAI 

 

புறாக்கள் புராண காலத்தில் இருந்து தூது சொல்வதற்குப் பயன்படுத்தியிருந்தார்கள். அப்டேட் செய்யப்பட்ட 21 நூற்றாண்டின் புறாக்களை மனிதர்கள் வேறு ஒரு விசயத்திற்கு  பயன்படுத்துகிறார்கள். உலகின் பல நாடுகளில் போதை பொருள் கடத்துவதற்கும் தகவல்களைப் பரிமாறவும் புறாக்களையே  பயன்படுத்துகிறார்கள். முதன் முதலில் 2011  ஆண்டு கொலம்பியாவில் இருக்கிற சிறைச்சாலை சுவரில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒரு புறாவை காவல்துறை  கைப்பற்றிய பொழுது  “புறா சேவை” பற்றி வெளியே தெரிய வந்தது.  அதன் உடலில் 40 கிராம் கஞ்சாவும், 6 கிராம் கொக்கைன் போதைப் பொருளும் இருந்தன. சிறையில் இருக்கிற ஒருவருக்குப் போதை பொருட்களைக் கொடுக்கிற புறா, அதற்கான சன்மானத்தையும் தகவல்களையும் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட நபரிடம் திரும்புகிறது. எடை அதிகரித்ததன் காரணமாக பறக்க முடியாமல் இருந்த அந்தப் புறாவே முதலில் இப்படியான கடத்தலை உலகிற்குச் சொல்லியது.  அதனைத் தொடர்ந்து பல நாடுகளிலும் புறாவை இப்படியான கடத்தல்களுக்கு பயன்படுத்தினர். கடந்த ஆண்டு மே  மாதம் 25 தேதி ஈராக் குவைத் நாடுகளுக்கு இடையேயான எல்லையில் 178 போதை மாத்திரைகளுடன் ஒரு புறா பிடிபட்டது. கடத்திக் கொண்டு போகிற புறாக்களை கடத்தலுக்குப் பயன்படுத்துவது கடத்தல் தொழிலின் இன்னொரு பரிமாணம். 

இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகள்தான் பறவைகள் கடத்தலிலும்  விற்பனையிலும் முன்னிலையில் இருக்கின்றன. இரு நாடுகளிலும் பறவைகள் விற்பனை செய்கிற பல மார்க்கெட்டுகள் இருக்கின்றன. சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிற ஒவ்வொரு கடைகளிலும் விலை மதிக்க முடியாத ஒரு இனத்தின் கடைசிப் பறவை இருக்கிறது. தாய்லாந்தின் சொர்ணபுரி விமான நிலையமும் இந்தோனேசியாவின் ஜகார்தா, சுரபயா  விமான நிலையங்களும் உலக அளவில் அதிகம் பறவைகள் கடத்தல் நடக்கும் முக்கிய இடங்களாக  இருக்கின்றன. பறிமுதல் செய்யப்படுகிற பறவைகளில் 70 சதவிகித பறவைகள் இங்குதான் பிடிபடுகின்றன. 

nest

முந்தைய அத்தியாயங்கள்

சிட்டுக் குருவி, கிளி,  முனியாஸ் பறவை, மைனா, தூக்கணாங்குருவி, இருவாட்சி, என நம்மோடு இருந்த பல பறவை இனங்கள் இல்லாமல் போனதிற்கு கடத்தல் மட்டுமே  காரணமல்ல. கடத்தலும் ஒரு காரணம். நாளிதழ்களில் கிடைக்கிற கடத்தல் குறித்த செய்திகளில் நமக்குப் பக்கத்தில் இருக்கிற பறவைகளையே கடத்தி இருக்கிறார்கள் என்கிற உண்மை புரிகிறது. பத்தோடு பதினொன்று எனக் கடந்து வந்த பல செய்திகளில் பல நூறு பறவைகளை நம் கண்ணுக்கு முன்னால்  கடத்தி இருக்கிறார்கள். நீங்கள் கடைசியாய் பார்த்த பறவை எது என யோசித்துப் பாருங்கள். ஒட்டு மொத்த கேள்விக்கும் ஒரு பதில் கிடைக்கும். 

உலகின் வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என எல்லா நாடுகளிலும் இருக்கிற முக்கியமான பிரச்சனையாக பறவைகள் மற்றும் விலங்குகள் கடத்தல் இருக்கிறது. எவ்வளவு திட்டங்கள், பாதுகாப்புகள், தண்டனைகள் இருந்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 6 விமான நிலையங்களில் பறவைகள் கடத்தல்கள் கண்டறியப்படுகின்றன.  ஆனால் அடுத்த 6 விமான நிலையங்களில்  கடத்தல் நிகழ்ந்துக் கொண்டே இருக்கின்றது.  விலங்குகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிணைந்த நாடுகளின் கூட்டறிக்கைகள் தேவை இல்லை. கூட்டு முயற்சியே  தேவை. சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிற நம்மூர்  பறவைகளை பார்க்க நேரிட்டால் கூட சம்மந்தப்பட்ட வன  அதிகாரிகளுக்குத் தகவல் கொடுங்கள்.  ஏனெனில் கடத்தலின்  வேர்களை வீழ்த்தாமல் கிளைகளை மட்டுமே  வெட்டுவது உயிரினங்களுக்குச் செய்கிற துரோகம்..


டிரெண்டிங் @ விகடன்