வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (28/01/2018)

கடைசி தொடர்பு:09:16 (28/01/2018)

மானியம் வருதே... என்ன ஸ்கூட்டர் வாங்கலாம்?!

தமிழக அரசு, அம்மா ஸ்கூட்டர் திட்டம் எனும் திட்டத்தின்கீழ் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்காக 50 சதவிகித மானியம் (அதிகபட்சம் 25,000 ரூபாய்) அளிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.  மானியமெல்லாம் ஓகே... ஆனால், எந்த ஸ்கூட்டர் வாங்குவது?

தோழி ஒருவரிடம் `நீ ஸ்கூட்டர் வாங்குனா என்ன ஸ்கூட்டர் வாங்குவ?' என்று கேட்டபோது, `ஒண்ணு... ஸ்கூட்டி பெப், இல்லைன்னா ஆக்டிவா' என்றார். இதில் ஆச்சர்யம் இல்லை. பொதுவாகவே `என்ன ஸ்கூட்டர் வாங்கப்போறீங்க?' என்ற கேள்விக்கு, பெண்களின் பதில் இதுவாகத்தான் இருக்கிறது. எந்த ஸ்கூட்டர் விற்பனையில் டாப்பில் உள்ளது, எந்த ஸ்கூட்டரில் நமக்கு ஏற்ற வசதிகள் உள்ளன, ஸ்கூட்டரின் பவர் என்ன, ஓட்டுவதற்கு வசதியாக உள்ளதா, எந்த ஸ்கூட்டர் மைலேஜ் அதிகம் தரும் போன்ற கேள்விகளை, பெரும்பாலும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை பெண்கள். 

ஸ்கூட்டர்

 

மக்கள் மத்தியில் தற்போது பரவலாக வாங்கப்படும் 100 மற்றும் 125 சிசி ஸ்கூட்டர்களும், சென்னையில் அதன் ஆன்ரோடு விலையும், இந்த ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்களையும், யார் எந்த ஸ்கூட்டரை வாங்கினால் பொருத்தமாக இருக்கும் என்பதையும் பார்ப்போம்.

 

சுஸூகி ஆக்ஸஸ் 125 

விலை - ரூ.70,194

ப்ளஸ்:  நீளமான சீட், பவர், டிஸ்க் பிரேக்

மைனஸ்: டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்

நீங்கள் ஒரு தடவை ஆக்ஸஸை ஓட்டிவிட்டால், வேறு ஸ்கூட்டரை ஓட்டப் பிடிக்காது. இதன் இன்ஜின் ஸ்மூத்னெஸ் அத்தனை மென்மை. சென்னையில் 70,194 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த பைக்கில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டிஸ்க் பிரேக், சீட்டுக்கு அடியில் 20 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் என சொகுசுக்கும் வசதிக்கும் பஞ்சமில்லை. பெரிய சீட்டும், நீளமான ஃப்ளோரும் உள்ளதால் எடை மிகுதியானவர்களுக்கும் உயரம் அதிகமானவர்களுக்கும் ஆக்ஸஸ் ஒரு நல்ல தேர்வு. 

சுஸூகி ஆக்ஸஸின் எடை 102 கிலோ என்பதால், ஹேண்ட்லிங்கும் எளிதாக இருக்கும். 5.4 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட ஆக்ஸஸ், 45 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாகச் சொல்கிறார்கள். மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரி, டியூப்லெஸ் டயர், LED லைட் போன்ற விலை உயர்ந்த வசதிகள் இந்த ஸ்கூட்டரில் உண்டு. பாடியின் கலருக்கு எதிர்மாறான நிறத்தில் சீட்டு இருப்பதால் ஸ்கூட்டர் பார்க்கவும் நச்சென இருக்கிறது. சுஸூகியிடம் இருக்கும் பிரச்னை, அதன் டீலர்களும் சர்வீஸ் சென்டரும்தான். டி.வி.எஸ் மற்றும் ஹோண்டாவை ஒப்பிடும்போது மிகச் சொற்பமான அளவு சர்வீஸ் சென்டர் மட்டுமே சுஸூகியிடம் இருக்கிறது.

Access

ஹோண்டா ஆக்டிவா 125

விலை - ரூ.72,394

ப்ளஸ்: தரம், டீலர் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்

மைனஸ்: அதிக விலை, டிஸ்க்-அலாய் வீல் இல்லை

ஹோண்டாவை `மக்களின் நாயகன்' என்று சொல்வார்கள். இன்றுவரை இந்திய ஸ்கூட்டர்கள் மத்தியில் அதிக விற்பனையைக் காட்டுவது ஆக்டிவாதான். பல போட்டியாளர்கள் வந்தாலும் ஆக்டிவாவுக்கு மக்களிடம் கொஞ்சம் மவுசு அதிகமே. இதற்குக் காரணம் ஆக்டிவாவின் தரம், இன்ஜின், சர்வீஸ் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன. 8.52 bhp பவர் மற்றும் 1.05 Nm டார்க்கும் இதன் இன்ஜினில் இருந்து கிடைக்கின்றன. 50 கி.மீ வரை மைலேஜும் தருகிறது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது ஆக்டிவா.

இந்த ஸ்கூட்டரில் மொபைல் சார்ஜர், LED லைட், Front pocket, லக்கேஜ் பாக்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் இல்லை. ஃப்ளோர் போர்டும் சிறியதாக இருக்கும். மேலும் இதன் எடை 110 கிலோ. மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது ஆக்டிவா கொஞ்சம் கூடுதல் எடைதான். மேலும் சஸ்பென்ஷனும் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஒல்லியானவர்கள் ஓட்டினால் அவ்வளவு எடுப்பாக இருக்காது. மாடர்ன் லேடீஸ் போல கலர்ஃபுல்லாகவும் அதிக ஸ்டைலாகவும் இல்லாமல் கோட்டு போட்ட மேனஜர் போல பார்க்க டீசன்டாக இருப்பதால், இது அனைத்து பெண்களுக்கும் சூட்டாகும்.

ஆக்டிவாவின் பெரிய ப்ளஸ், ஹோண்டாவின் சர்வீஸ் நெட்வொர்க்தான். சென்னையில் உள்ள அனைத்து ஏரியாக்களிலும் ஹோண்டா கடை விரித்துள்ளது. வாங்கவும் சர்வீஸ் செய்யவும் சிரமம் இல்லை. ஆக்டிவா 125-ன் விலை சென்னையில் 72,394 ரூபாய். 

honda activa

 

 

 

டி.வி.எஸ் ஜூபிட்டர்

விலை - ரூ. 65,336

 ப்ளஸ்: சிறப்பம்சங்கள், மைலேஜ், டிசைன்

மைனஸ்: பெர்ஃபாமென்ஸ்

100 CC செக்மன்ட்டில் அதிக வசதிகளைக்கொண்ட ஸ்கூட்டர் டி.வி.எஸ் ஜூபிட்டர். அலாய் வீல், டியூப்லெஸ் டயர், LED லைட், டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், சீட்டுக்கு அடியில் அதிக பூட் ஸ்பேஸ் போன்ற சிறப்பம்சங்கள்தான் ஜூபிட்டரில் ப்ளஸ். 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. பெட்ரோல் போடுவதற்கு சீட்டை ஓபன் செய்ய அவசியமில்லை, பெட்ரோல் கேப் வெளியே கொடுக்கப்பட்டுள்ளது. 7bhp பவரும் 0.8kgm டார்க்கும் தரும் டிவிஎஸ் இன்ஜின், 60 கி.மீ-க்கு மேல் போனால் கொஞ்சம் வைப்ரேட் ஆகும்.

இந்த பைக்கில் அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் போகலாம். அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் அதிக ஃப்ளோர் போர்ட் ஸ்பேஸ் உள்ளதால், இதில் கூடுதல் பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும். ஸ்கூட்டி பெப் போல கலர்கலராக இல்லாமல், ஆக்டிவா போன்ற ஃபார்மலான டிசைன் உள்ளதால், அதை மேட்ச் செய்ய குறிப்பிட்ட சில நிறங்களிலேயே வருகிறது. ஆனால், பார்க்க மிக ஸ்டைலாக உள்ளது. டிவிஎஸ் சர்வீஸ் சென்டர்களும் தமிழ்நாட்டில் அதிகமாகவே உள்ளன. இந்த பைக்கின் எடை 108 கிலோ. மைலேஜ் 50 முதல் 55 கிலோமீட்டர் வரை கிடைக்கும். ஜூபிட்டரின் விலை 65,336 ரூபாய். இதில் டிஸ்க் பிரேக்கும் ஆப்ஷனலாகக் கிடைக்கிறது. விலை குறைவான, பார்க்க ஸ்டைலான ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களுக்கு நல்ல தேர்வு இந்த ஜூபிட்டர். 

tvs jupiter

 

 

யமஹா ஃபஸினோ

விலை - ரூ. 66,971

 ப்ளஸ்: கவர்ச்சியான ஸ்டைல், மைலேஜ், தரம்

மைனஸ்: வசதிகள் குறைவு, டிஸ்க் இல்லை, குறைவான பவர்

யமஹாவின் ஸ்கூட்டர்களில் அதிக விற்பனையைத் தருவது ஃபஸினோ. ஸ்டைலான ஸ்கூட்டர்தான் வேண்டும் என விரும்பினால் அதற்கு ஃபஸினோதான் முதல் பரிந்துரை. ஸ்டைல் மட்டும் அல்ல, நல்ல மைலேஜும் தரும். 113 சிசி கொண்ட இதன் இன்ஜின், 7bhp பவரும் 0.81 kgm டார்க்கும் தரக்கூடியது. சீட்டுக்கு அடியில் 21 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கொண்டது ஃபஸினோ. 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. இதன் எடையும் 103 கிலோதான். மேலும் ஃபஸினோவில் முன்பக்கம் மொபைல் போன் வைப்பதற்கு இடமும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 45 முதல் 50 கி.மீ மைலேஜ் தரக்கூடியது. டிஸ்க் பிரேக் இல்லாததும், இன்ஜின் பவர் குறைவாக இருப்பதும் இந்த ஸ்கூட்டரின் பெரும் குறைகளாக இருக்கின்றன.

கல்லூரி இளசுகளுக்கு இந்த ஸ்கூட்டர் நிச்சயம் பிடிக்கும். ஃபேஷன் மீது அதிக ஈடுபாடுள்ளவர்கள் இந்த ஸ்கூட்டரை வாங்கலாம். நீங்கள் உடுத்தும் உடையை இந்த பைக்கின் நிறமும் இதன் ஸ்டைலும் மேட்ச் செய்துவிடும். சுமாரான உடை உடுத்தியிருந்தால்கூட ஃபஸினோவில் ஸ்டைலாகத் தெரிவீர்கள். பைக்கின் ஸ்டைல் அப்படி!


 

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் zx:

விலை - ரூ.63,905

 ப்ளஸ்: அதிக ஸ்டோரேஜ், டிசைன், விலை

மைனஸ்: பிக்-அப்

ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் ஸ்கூட்டர் ஃபுட்பால் ஆடுவார்களே... அந்த ஸ்கூட்டர்தான் ஹீரோ மேஸ்ட்ரோ. இதை `ஆண்கள் ஸ்கூட்டர்' என விளம்பரப்படுத்தினாலும், பெண்களும் இந்த ஸ்கூட்டரை அதிகம் விரும்புகின்றனர். 110.9 சிசி இன்ஜின்கொண்ட இந்த ஸ்கூட்டர், 8bhp பவரும் 0.87kgm டார்க்கும் தரக்கூடியது. 5.5 லிட்டர் பெட்ரோல் டேங்க், சீட்டுக்குக் கீழே 22 லிட்டர் ஸ்டோரேஜ், டிஜிட்டல் மற்றும் அனலாக் மீட்டர், போலி சாவி போட்டால் ஸ்கூட்டர் ஆன் ஆகாமல் தடுக்கும் இன்ஜின் இம்மொபிலைஸர் போன்ற வசதிகள் உள்ளன. 45 முதல் 50 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடிய இந்த பைக், 60 கிலோமீட்டர் வேகத்தை நெருங்கும்போதே பைக்கில் அதிர்வுகள் தொடங்கிவிடும். 60 கி.மீ-க்கு மேல் அதிர்வுகள் அதிகம். அலாய் வீல், டியூப்லெஸ் டயருடன் ஒன்பது நிறங்களில் வரும் ஹீரோ மேஸ்ட்ரோ, 63.905 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஒல்லியாகவும், பாய் கட் போன்று முடி வைத்திருக்கும் பெண்களும் ஓட்டினால், செம மேட்சாக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் மெயின்டனன்ஸ் விலை குறைவுதான். 

 

 

வெஸ்பா 125 LX :

விலை - ரூ.84,208

ப்ளஸ்: க்ளாசிக் ஸ்டைல், பவர்

மைனஸ்:  விலை, சர்வீஸ், ஸ்டோரேஜ்

`ஸ்கூட்டர் எல்லாம் பொறுமையா போகும். பைக்தான் எப்பவுமே பெஸ்ட்' என்று யாராவது சொன்னால், வெஸ்பா வைத்திருக்கும் பெண்கள் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் காமிக்கலாம். பைக்குக்கு நிகராக 9.76bhp பவரும் 1.06kgm டார்க்கும் தரக்கூடியது வெஸ்பா. அதிக வேகத்திலும் வைப்ரேஷன் குறைவாகவும் இருக்கும் இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்தில் போகக்கூடியது. வேக விரும்பிகளுக்கு இதுதான் சரியான தேர்வு. சீட் உயரம் குறைவாக இருந்தாலும், இதன் எடை 114 கிலோ. வெஸ்பா வாங்குபவர்கள் மைலேஜ் எதிர்பார்ப்பை விட்டுக்கொடுத்துவிடுங்கள். அதிகபட்சம் 40 கி.மீ மைலேஜ் மட்டுமே வெஸ்பா தரும். முன்பக்கத்தில் க்ளோவ் பாக்ஸ் வரும். சீட்டுக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜ் ஒரு சிறிய ஹெல்மெட் வைக்க மட்டுமே போதுமானதாக இருக்கும். மைலேஜ் குறைவாக இருந்தாலும் ஒன்பது லிட்டர் பெட்ரோல் டேங்க் இதில் உள்ளது. இந்த ஸ்கூட்டர் அனைவருக்கும் பொருந்தும் ஸ்டைல்கொண்டது. ஆனால், மாடர்ன் உடை அணிபவர்களுக்கும் கூடுதல் அழகைச் சேர்க்கும். இதன் விலை 84,208 ரூபாய். வெஸ்பா வைத்திருந்தால் கெளரவம் என்று நம்பும் சிலரும் ஊருக்குள் உள்ளனர்.

ஸ்கூட்டர்

 

 

டிவிஎஸ் ஜெஸ்ட் 

விலை - ரூ. 57,998

ப்ளஸ்: எடை, விலை, டிசைன்

மைனஸ்: இன்ஜின் அதிர்வுகள், குறைவான பவர்

மக்கள் அதிகம் விரும்பும் ஸ்கூட்டர்களில் டிவிஎஸ்-க்கு எப்போதும் ஒரு கை உள்ளது. ஜெஸ்ட்டின் சிறப்பு இதன் லேசான எடை. 98 கிலோதான் என்பதால், ஒல்லியான பெண்கள் கூட 'ஜஸ்ட் லைக் தட்’ ஜெஸ்ட்டைக் கையாளலாம். வளைவு - நெளிவுகள், சந்து பொந்துகள், டிராஃபிக் என்று புகுந்து புறப்பட ஜாலியாக இருக்கும் ஜெஸ்ட். தண்ணீர் பாட்டில், போன் மற்றும் சின்னச் சின்னப் பொருட்களை வைத்துக்கொள்ள Front cover இதில் உண்டு. ஹேண்ட் பேக் மாட்ட, மடித்துக்கொள்ளக்கூடிய ஹூக் உண்டு. சீட்டுக்குக் கீழே 19 லிட்டர் இடவசதி கொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ் இருக்கிறது.  ஜூபிட்டரில் இருக்கும் 109.7சிசி இன்ஜின்தான் இதிலும். ஆனால் 7.9bhp பவரும், 0.89 kgm டார்க்கும், குறைவான எடையுள்ள பாடியில் சேர்வதால் ஜூபிட்டரை விட சீறுகிறது ஜெஸ்ட். முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன், ஆனால் பின் பக்கம் - பைக்குகளைப்போல ஹைட்ராலிக் மோனோஷாக் சஸ்பென்ஷன் இருப்பதால் மேடு-பள்ளங்களில் ஏறி இறங்கும்போது  ஸாஃப்ட்டாக இருக்கிறது. ஸ்கூட்டி ஜெஸ்ட் லிட்டருக்கு 40 முதல் 45 கி.மீ வரை மைலேஜ் தரும். சென்னையில் ஜெஸ்ட்டின் விலை 57,998 ரூபாய்.

 

 

 

ஹோண்டா டியோ

விலை - ரூ. 59,113

ப்ளஸ்: கவர்ச்சி, சர்வீஸ், ஸ்மூத்தான இன்ஜின்

மைனஸ்: சஸ்பென்ஷன், சீட், வசதிகள்

'எல்லா ஸ்கூட்டரும் ஒரே மாதிரி 'மொழுக்' டிசைனோடு வருகிறது; எனக்கு ஷார்ப்பான டிசைன் தான் பிடிக்கும்' என்று சொல்பவர்களுக்கு ஹோண்டா டியோ சரியான ஆப்ஷனாக இருக்கும். மேலும் ஹோண்டாவின் சர்வீஸ் நெட்வொர்க்கும் தரமும் இணைவதால் இந்த ஸ்கூட்டர் மக்கள் மனதில் உள்ளது. இதன் சஸ்பென்ஷன் ஸ்மூத்தாக இருக்காது. வசதிகளும் அதிகம் கிடையாது. ஆனால், ஸ்மூத்தான இன்ஜின், போதுமான பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், நல்ல இடவசதி, ரீ-சேல் வேல்யூ போன்றவை உள்ளன. 59,113 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர் 8bhp பவரும் 0.89 Kgm டார்க்கும் தரும். 18 லிட்டர் ஸ்டோரேஜ் உள்ளது. டியோவில் ப்ளோர் போர்டு குறைவான அகலத்தில் உள்ளது. இதனால் உயரமாக  உள்ளவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். பளிச்சென்ற நிறங்களில், ஷார்ப்பான டிசைனோடு வருவதால் இந்த ஸ்கூட்டர் கல்லூரி போகும் பெண்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். ஹோண்டாவின் தரம் மற்றும் சர்வீஸ் நெட்வர்க் டியோவுக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.

ஸ்கூட்டர்
 

என்னதான் தமிழக அரசு 50 சதவிகித மானியம் தருவதாகச் சொன்னாலும், எந்த ஸ்கூட்டருமே 50,000 ரூபாய்க்குக் குறைவாக இல்லை. அதனால் அனைவருக்குமே மானிய விலை 25,000 ரூபாய் கிடைக்கலாம். மின்சார ஸ்கூட்டருக்கு மத்திய அரசு மானியம் தருவதால், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஹீரோவின் மின்சார ஸ்கூட்டர்களின் மேலும் ஒரு பார்வை இருக்கட்டும் மக்களே! மானிய விலைபோக இந்த மின்சார ஸ்கூட்டர்கள் 29,000 முதல் 39,000 வரை கிடைக்கிறது. ஆனால், தற்போது சென்னை மற்றும் கோவையில் மட்டுமே இவை விற்கப்படுகின்றன. எந்த ஸ்கூட்டராக இருந்தாலும் வாங்குவதற்கு முன் ஒருமுறை ஸ்கூட்டரை ஓட்டிப்பார்த்து வாங்குங்கள் பெண்களே!


டிரெண்டிங் @ விகடன்