வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (28/01/2018)

கடைசி தொடர்பு:17:38 (28/01/2018)

மும்பை கடற்கரையில் இருந்து 12,000 டன் குப்பைகளை அகற்றிய மாமனிதர்!

மும்பையின் வெர்சோவா கடற்கரை (Versova Beach). அதன் ஓரங்களில், சிறிய வீடுகள் கொண்ட குப்பம். வெள்ளைச் சட்டை அணிந்திருக்கும் அந்த நபர், அங்கிருக்கும் ஒரு வீட்டின் முன் நிற்கிறார். அவரை அந்தக் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி பார்த்து பழகியதால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அவரைக் குறித்த அறிமுகம் எதுவும் தேவையிருக்கவில்லை. அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஆவல்தான் மேலிட்டது.

அஃப்ரோஸ் ஷா மக்களுடன்...

Photo Courtesy: twitter.com/afrozshah1

“உங்க வீட்ல இருக்கற குப்பைத் தொட்டிய காமிங்க!”

அந்த வீட்டின் பெண்மணி கொண்டு வந்து காட்டுகிறார். அதிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை சோதனையிடுகிறார். அடுத்து அருகிலிருக்கும் கழிமுகம் ஒன்றிற்கு செல்கிறார்.

“இந்த கழிமுகத்துல ஓடற தண்ணிதான் மொதல்ல கடல்ல கலக்குது. இங்கதான் முதல்ல சுத்தம் செய்யணும்” என்று கூறுகிறார்.

சொல்வதோடு நிற்கவில்லை. அவர் அணியுடன் சேர்ந்து இறங்கி வேலை செய்கிறார். அவர் பெயர் அஃப்ரோஸ் ஷா (Afroz Shah). கடந்த மூன்று வருடமாக, அதாவது 2015ம் ஆண்டு முதல் இந்த வெர்சோவா பீச்சிற்கு அவர் வராத வாரமே இல்லை எனலாம். இப்போது அந்தக் கடற்கரை சுத்தமாக இருக்க ஒரே காரணம், இவர் எடுத்த முயற்சியும், இவருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்த ஆயிரக்கணக்கான ஆர்வலர்களும்தான். இந்த ஆர்வலர்களில் பள்ளி சிறுவர், சிறுமியர்களும் அடக்கம்.

குப்பைகள் அகற்றும் பள்ளி மாணவ மாணவிகள்

Photo Courtesy: twitter.com/afrozshah1

“நான் அடிப்படையில் ஒரு வக்கீல். கடல்களின் காதலன் என்று கூறுவதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மும்பையின் இந்த வெர்சோவா கடற்கரை என் மனதிற்கு மிக நெருக்கமானது. சிறுவயதில் இங்கே நான் செலவிட்ட நேரங்கள் இன்னமும் என் நினைவில் உள்ளன. இதன் மேற்கு பகுதி முழுவதும் குப்பைகள் கொட்டும் இடமாகிப் போனது. அதில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பொருட்கள்தான். இது கடலில் சென்று கலப்பதால் கடற்கரையின் சுகாதாரம் பெருமளவில் பாதிப்படைகிறது. இதை மாற்ற வேண்டும் என்று எண்ணினேன். 2015ம் ஆண்டு இந்தச் சுத்தம் செய்யும் பணியை நான் தொடங்கிய போது, இது நிச்சயம் ஒருவர் செய்யக்கூடிய காரியம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் இங்கே வந்து சுத்தம் செய்யத் தொடங்கினேன். இப்போது ஓர் அணியாக என்னுடன் ஆயிரம் பேர் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் 100 பேருக்குக் குறையாமல் வருகிறார்கள். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை கடற்கரையில் சுத்தம் செய்து விட்டோம். இதுவரை 12,000 டன் குப்பை கழிவுகளை அகற்றியுள்ளோம்” என்கிறார் அஃப்ரோஸ்.

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுகின்றன

Photo Courtesy: twitter.com/afrozshah1

இவரின் இந்தச் சீரிய முயற்சிக்கு பல்வேறு உதவிக் கரங்கள் தற்போதும் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன. பாலிவுட் பிரபலங்கள் உட்படப் பலர், குப்பை லாரிகள், டிராக்டர்கள் உட்பட சில வாகனங்களை வாங்க உதவி செய்துள்ளனர். இவர் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்து 119 வாரங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வாரமும் தவறாமல் கடற்கரைக்கு வந்து விடுகிறார். இந்தச் சுத்தப்படுத்துதல் தவிர, சுற்றி இருக்கும் குப்பங்களில் எப்படியெல்லாம் குப்பைகளை குவித்து வைக்கக் கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் குறித்து விழிப்புஉணர்வு வகுப்புகள் எடுக்கிறார். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வந்து மறு சுழற்சிக்கு கொடுத்தால் ஆறு ரூபாய் தருகிறேன் என்று இவர் அறிவிக்கக் குப்பங்களில் இருந்து இதுவரை சுமார் 20,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சிக்கு சென்றுள்ளன.

இவரும் இவர் அணியும் சேர்ந்து நடத்தும் இந்தக் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணியை பார்த்த ஐ.நா (UN), இவர்கள் செய்யும் சேவையைப் பாராட்டி “உலகின் மிகப் பெரிய ‘கடற்கரை தூய்மைப்படுத்தும்’ திட்டம் இதுதான்” எனக் கௌரவித்துள்ளது. இவரின் புண்ணியத்தால், கால் மூட்டு வரைக் குப்பைகள் நிரம்பியிருந்த இடத்தில் தற்போது காதலர்கள் உலவுகிறார்கள்; சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

குப்பைகள் அகற்றும் அஃப்ரோஸ் ஷா மற்றும் குழு

Photo Courtesy: twitter.com/afrozshah1

“மணல்கள் நிரம்பிய பீச்சும் மீன்பிடி வலை போலத்தான். மீன் சேர்ந்தவுடன் வலையில் இருந்து அதை எடுப்பதை போல, இங்கே ஒருமுறை பிளாஸ்டிக் சேர்ந்தவுடன் அதை எடுத்து விட வேண்டும். காத்திருந்தால், அடுத்து வரும் அலை அந்த பிளாஸ்டிகை கடலுக்குக் கொண்டு போய் விடும். அதன் பிறகு, நீங்கள் அதைப் பார்க்கவே முடியாது. அந்த பிளாஸ்டிக் உள்ளேயிருக்கும் கடல் உயிரினங்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. எல்லோரும் என்னிடம், இன்னும் எவ்வளவு நாள்களுக்கு குப்பைகளை சுத்தம் செய்வதாக உத்தேசம் என்று கேட்கின்றனர். இது ஒன்றும் ஒரு வேலை கிடையாது. செய்து முடித்து விட. இது கடமை. இது தொடர வேண்டும். அப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்” என்று நெகிழச் செய்கிறார் அஃப்ரோஸ் ஷா. வாழ்த்துக்கள் தோழர்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்