வெளியிடப்பட்ட நேரம்: 18:18 (28/01/2018)

கடைசி தொடர்பு:18:18 (28/01/2018)

முதலீடு இரண்டு மடங்காக மாறுவது எப்போது...? விதி எண் 72 சொல்லும் உண்மை!

வங்கி, அஞ்சல் நிலையம் போன்றவற்றில் டெபாசிட் செய்தால் ஆறு ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகும் என்பது பழைய கதை. தற்போது வங்கியின் வட்டிவிகிதம் குறைந்திருக்கிறது. இதனால் டெபாசிட் செய்த பணம் இரண்டு மடங்காக மாற பத்து ஆண்டுகளுக்குமேல் காத்திருக்க வேண்டும். முதலீடு செய்யும் பணம் எப்போது இரண்டு மடங்காகும் என்பதை தெரிந்துகொள்ள, `விதி எண் 72' பெரிய அளவில் உதவுகிறது. 

முதலீடு

நிதி ஆலோசகர்கள், ``முதலீடு செய்த தொகைக்கு 12 சதவிகித வட்டி விகிதம் கிடைக்கும்'' எனச் சொல்வார்கள். சிலர் ``ஏழு ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரண்டு மடங்காக மாறும்'' என்பார்கள். வட்டிவிகிதத்தைச் சொல்லும்போது எவ்வளவு காலத்தில் முதலீட்டுத்தொகை இரட்டிப்பு ஆகும் என்பதையும், இவ்வளவு ஆண்டில் பணம் இரண்டு மடங்காகும் எனச் சொல்லும்போது, முதலீட்டுக்கு எவ்வளவு வட்டிவிகிதம் கிடைக்கும் என்பதையும் `72' என்ற எண்ணை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும். 

முதலீட்டுக்கான வட்டிவிகித்தைச் சொல்லும்போது, 72-ஐ வட்டிவிகித எண்ணால் வகுத்துப்பாருங்கள். விடை எண், உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள ஆகும் கால அளவு. தற்போது, வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு 6.5 சதவிகித வட்டி வழங்குகின்றன. இந்த வட்டிவிகிதத்தில் முதலீடு செய்தால், பணம் இரண்டு மடங்காக உயர 11 வருடங்கள் காத்திருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்டில் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு குறைந்தது 12 சதவிகித வருமானம் கிடைக்கும் என்பார்கள். அதாவது, ஆறு வருடங்களில் முதலீடு செய்த பணம், இரண்டு மடங்காக மாறும். இன்ஷூரன்ஸ் முகவர்கள், பாலிசி எடுக்கும்போது ``15 வருடங்களில் இரண்டு மடங்கு தொகை கிடைக்கும்'' என்பார்கள். 

எண் 72-ஐ இரண்டு மடங்காக எடுத்துக்கொள்ளும் கால அளவால் வகுத்தால், முதலீட்டுக்கு எவ்வளவு வட்டிவிகிதம் வழங்குகிறார்கள் என்ற விவரத்தை அறிந்துகொள்ள முடியும்.  `நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GDP) 6.7 சதவிகிதம் என இருக்கிறது. இது விரைவில் இரண்டு மடங்காக உயரும்’ எனச் சொல்வார்கள் பொருளாதார வல்லுநர்கள். இரண்டு மடங்காக உயர எவ்வளவு காலமாகும் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் இரண்டு மடங்காக அதிகரிக்க (72/6.7) பத்து ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதை எளிதாகச் சொல்லிவிட முடியும். 

இதைபோலவே, கிரெட்டிட் கார்டுக்கு 15 சதவிகிதம் வட்டி செலுத்தினால், நீங்கள் வாங்கிய கடனுக்கு (72/15) 4.5 வருடத்தில் இரண்டு மடங்கு தொகை செலுத்தியிருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாம். தற்போது, தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்ந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 5 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆண்டுக்கு ஐந்து சதவிகிதம் உயர்த்தினால் அடுத்த 14.4 ஆண்டில் கட்டணம் இரண்டு மடங்காக உயரும். ஒரே நேரத்தில் கட்டணத்தை உயர்த்திருப்பதால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறோம். 

முதலீடுவிதி 72 குறித்து ஃபார்சூன் ப்ளானிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைவரும், நிதி ஆலோசகருமான பத்மாநாபனிடம் பேசினோம். ``இப்போதே முதலீடு செய்யுங்கள், இன்னும் ஐந்து வருடங்களில் உங்கள் பணம் இரண்டு மடங்காக உயரும் என்று சொல்வார்கள். இவ்வாறு சொல்லும்போதே எவ்வளவு வட்டிவிகிதத்தில் பணம் பெருகும் என்பதை நாம் கணக்குபோட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஐந்து வருடங்களில் முதலீடு இரண்டு மடங்காக உயர வேண்டும் என்றால், 14.4 சதவிகித வருமானத்தைத் தர வேண்டும். சிலர் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டி வருமானம் கிடைக்கும் என்று சொல்வார்கள். இப்படி சொல்லும்போது எவ்வளவு வருடத்தில் நம்முடைய பணம் இரண்டு மடங்காக உயரும் என்பதையும் மனக்கணக்கால் யோசித்து ஆறு வருடத்தில் பணம் இரண்டு மடங்கு ஆகும் எனச் சொல்லி விட முடியும். இதைப்போலவே, மூன்று மடங்காக உயரும் என்று சொல்லும் போது 114 என்ற எண்ணை நினைவில் கொண்டு வட்டி விகிதத்தை அல்லது ஆண்டை வகுத்துச் சரியான விடை சொல்ல முடியும்.நான்கு மடங்காக உயரும் என்று சொல்லும் போது 144 என்ற எண்ணை நினைவில் கொள்ளலாம்" என்றார். 

முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டிய எண்கள் 72, 114, 144.


டிரெண்டிங் @ விகடன்