மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை வீட்டிலிருந்தபடியே இணைக்கலாம்! #StepByStepProcedure | How link aadhaar to mobile number Using IVR

வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (29/01/2018)

கடைசி தொடர்பு:10:23 (30/01/2018)

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை வீட்டிலிருந்தபடியே இணைக்கலாம்! #StepByStepProcedure

மொபைல்

ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது கட்டாயம் அல்ல என்று பலமுறை சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம். ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விடுவதாய் இல்லை. மொபைல் நம்பரை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதிதான் கடைசித் தேதி என குறுஞ்செய்திகள் மூலமாகவும், அழைப்புகள் மூலமாகவும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முன்பு டிசம்பர் 31,2017-ம் தேதியை கடைசி தேதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தொடர்ச்சியாக அளிக்கும் தொல்லையால் அதை இணைத்துதான் விடுவோமே என்று பலரும் யோசிக்கத்தொடங்கிவிட்டார்கள். இணைப்பது என்று முடிவு செய்துவிட்டோம். சரி எங்கு சென்று ஆதாரை இணைப்பது?.மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு அருகில் உள்ள கடைக்கோ அல்லது மொபைல் ஷோரூமுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மொபைலில் இருந்தே இணைப்பதற்கான வசதி ஐவிஆர் IVR என்ற தானியங்கி குரல் பதிவுச் சேவை மூலமாக கிடைக்கிறது. இணையதளம் மூலமாகவும் எளிதாக இணைக்கலாம். இந்த வசதிகளை எப்படிப் பயன்படுத்துவது?

ஆதார்

தேவையற்ற கால விரயத்தை தவிர்ப்பதற்காக கால் செய்வதற்கு முன்னால் ஆதார் எண்ணை கையில் வைத்திருப்பது நல்லது.

மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணை அழைக்கவும். இதற்கு சேவைக்கட்டணம் கிடையாது இலவச சேவைதான். 

அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இந்த எண்ணையே பயன்படுத்தலாம். OTP அனுப்பப்படும் என்பதால் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் அவசியம் தேவைப்படும். 

அழைப்பு இணைக்கப்பட்டவுடன் தேவைப்படும் மொழியை தேர்வு செய்யலாம். அதன் பின்னர் இந்தியக் குடிமகனா அல்லது வெளிநாட்டு குடிமகனா என்று தேர்வு செய்யச்சொல்லி குரல் பதிவு கேட்கும். இந்தியக் குடிமகன் என்றால் எண் ஒன்றையும்  வெளிநாட்டு குடிமகன் என்றால் எண் இரண்டையும் அழுத்தவும்.

இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால் ஆதாரத்தைச் சரிபார்க்க முடியாது. அருகில் இருக்கும் மொபைல் நிறுவனத்தின் அலுவலகத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு சென்று பாஸ்போர்ட் மூலமாகவோ அல்லது வேறு தகுதியான அடையாள அட்டை மூலமாகவோ சரிபார்க்கலாம்.

இந்தியக் குடிமகன் என்பதைத் தேர்ந்தெடுத்தால் அடுத்ததாக உங்கள் ஆதார் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள உங்களின் அனுமதி கேட்கப்படும். அதற்கு சரி என்பதை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யச் சொல்லும். அதன் பின்னர் இணைக்கப்பட வேண்டிய மொபைல் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பின்னர் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதையும் பதிவு செய்து ஒன்றை அழுத்தினால், வேலை முடிந்தது. ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும். 

 ஆதார் விவரங்கள் மூலமாக உங்களது மொபைல் எண் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கப்பட்டு விடும்.

இணைக்கப்பட்ட விவரத்தை சரிபார்ப்பதற்கு

UIDAI

UIDAI -வின் இணையதளத்திற்கு செல்லவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.

 https://resident.uidai.gov.in/verify-email-mobile

ஆதார் எண் கேட்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யவும். அடுத்ததாக இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.  அதை அருகில் இருக்கும் OTP பதிவு செய்யப்பட வேண்டிய இடத்தில் உள்ளிட்டு Verify என்பதை கிளிக் செய்தால் போதும். ஆதார் சரிபார்க்கப்பட்டதற்கான தகவல் திரையில் காட்டப்படும்.

ஆதார் இணையதளம்

ஆதார் இணையதளம் தவிர பல்வேறு மொபைல் நிறுவனங்களும் அவர்களுடைய இணையதளத்திலும் இந்த வசதியைத் தருகிறார்கள்.  


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close