Election bannerElection banner
Published:Updated:

சிறு கிராமங்களிலும் வந்துவிட்ட ரத்ததான முகாம்! - விழிப்படைந்த மக்கள்

சிறு கிராமங்களிலும் வந்துவிட்ட ரத்ததான முகாம்! - விழிப்படைந்த மக்கள்
சிறு கிராமங்களிலும் வந்துவிட்ட ரத்ததான முகாம்! - விழிப்படைந்த மக்கள்

சிறு கிராமங்களிலும் வந்துவிட்ட ரத்ததான முகாம்! - விழிப்படைந்த மக்கள்


இப்போதெல்லாம் சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ரத்ததான முகாம் சர்வசாதாரணமாக நடைபெறத் தொடங்கிவிட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசியல் சார்புள்ள அமைப்புகளும் இதுபோன்ற ரத்ததான முகாம்களை தங்கள் பகுதிகளிலேயே நடத்தத் தொடங்கிவிட்டன. அப்படியொரு முகாம் புதுக்கோட்டையில் நேற்று (29-01-2018) நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது முக்கண்ணாமலைப்பட்டி கிராமம். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அந்த ஊரைச் சேர்ந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனையும் இணைந்து நேற்று  ரத்ததான முகாம் நடத்தியது. காலை 8.30  மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை நடந்த இந்த முகாமில் முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் ரத்தம் வழங்கினர்.

இந்த முகாமுக்கு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத் தலைவர் பீர் முகமது தலைமை வகித்து ரத்ததானம் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் அதனால் விளைகிற நன்மைகளையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இதுவரை நடத்தியிருக்கிற ரத்ததான முகாம்கள் பற்றியும் விவரித்துப் பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி பேசும்போது, ``சாலை விபத்துகள் இப்போதெல்லாம் அதிகமாக நடக்கிறது. அதில் காயம் ஏற்பட்டு ரத்தத்தை இழப்பவர்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது ரத்தம்தான். அதை நிறைவேற்றும் பணியை இதுபோன்ற ரத்ததான முகாம்கள் நிறைவேற்றி விடுகின்றன. சிறு கிராமங்களிலும்கூட இதுபோன்ற முகாம்கள் நடப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதைவிட முக்கியம், இளைஞர்களும் பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து தங்களுடைய ரத்தத்தைக் கொடுப்பதுதான். நகர மக்களைக்காட்டிலும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இதுபோன்ற செயல்களில் தங்களுடைய பங்களிப்புகள் இருக்கவேண்டும் என்று ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரியது" என்றார்.

முக்கண்ணாமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆசீக் ஹசன் முகமது முகாமைத் துவக்கி வைத்துப் பேசும்போது, "ரத்தம் தானமாகக் கொடுப்பதற்கு உடல்ரீதியாக தகுதியுள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக தங்களுடைய ரத்தத்தைத் தானமாகக் கொடுக்கலாம். 'இறைக்கிற கிணறுதான் சுரக்கும்' என்பதுபோல், நாம் தானமாக ரத்தத்தைக் கொடுக்கக் கொடுக்க புது ரத்தம் உடலில் சுரக்கும். ஒருதடவை நீங்கள் கொடுக்கும் ரத்தம் அடுத்த மூன்று மாதங்களில் உங்கள் உடலில் சுரந்து விடும்" என்றார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரகதீஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இலவசமாக ரத்த வகை கண்டறிதல் மற்றும் ரத்த சேமிப்புப் பணிகளைச் செய்தனர். ரத்தம் தானம் கொடுத்தவர்கள் அத்தனை நபர்களையும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு