Published:Updated:

தலைமறைவான தமிழக தலைமை ஸ்தபதி? - காஞ்சி ஏகாம்பரநாதர் சிலையில் தொடரும் மர்மம்!

JAYAVEL B
தலைமறைவான தமிழக தலைமை ஸ்தபதி? - காஞ்சி ஏகாம்பரநாதர் சிலையில் தொடரும் மர்மம்!
தலைமறைவான தமிழக தலைமை ஸ்தபதி? - காஞ்சி ஏகாம்பரநாதர் சிலையில் தொடரும் மர்மம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநார் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சோமாஸ் கந்தர் சிலையில் நடைபெற்றுள்ள மோசடி வழக்கு விறுவிறுப்படைந்துள்ளது. இந்த வழக்கில் கைதாவதிலிருந்து தப்பிப்பதற்காக தமிழக தலைமை ஸ்தபதி முத்தையா தலைமறைவாக இருக்கிறார். கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமீன் எடுக்கும் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இருக்கிறார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட உற்சவர் சிலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. புதிய சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலை, பழைய சோமாஸ் கந்தர் சிலை ஆகியவற்றில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இந்த நிலையில், அறநிலைத்துறை அதிகாரிகள், அறங்காவலர் உள்ளிட்டவர்களிடம் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்திவருகிறார். பழைய சிலையிலும் தங்கம் இல்லாதது காஞ்சிபுரம் பக்தர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில், பழைய சோமாஸ் கந்தர் சிலையின் உண்மை தன்மை குறித்து சிலைக்கடத்தல் தடுப்பு ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி நாகசாமி  குழுவினர் ஆய்வுசெய்தனர். அதைத் தொடர்ந்து செயல் அலுவலர், அறங்காவலர் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே தமிழகத் தலைமை ஸ்தபதி முத்தையா கடந்த ஒருமாதகாலமாகவே காணவில்லை. அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருக்கிறது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரும் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், முன்ஜாமீன் கேட்டு முத்தையா ஸ்தபதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. இந்த வழக்கின் விசாரணை நாளை (31.01.2018) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முத்தையா ஸ்தபதியை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினரும் வலைவீசி தேடி வருகின்றனர்.