Published:Updated:

தோளில் `காவடி'... வாயில் `அலகு'... திருச்செந்தூருக்கு படை எடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்

இ.கார்த்திகேயன்
தோளில் `காவடி'... வாயில் `அலகு'... திருச்செந்தூருக்கு படை எடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்
தோளில் `காவடி'... வாயில் `அலகு'... திருச்செந்தூருக்கு படை எடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்

தைபூசத் திருவிழாவை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் காவடி சுமந்தும்,  அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.

முருகப் பெருமானுக்கு உகந்த விசேஷ திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று. முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள அறுபடை வீடுகளுக்கு முருக பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பாதயாத்திரையாகச் சென்று வழிபடுவது வழக்கம். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் படையெடுத்துள்ளனர்.

வாகனங்களில் சப்பரம் போல அலங்காரப்படுத்தி முருகக் கடவுளினின் திருவுருவப் படத்தை வைத்து அதன் முன், மாலை அணிந்த பக்தர்கள் கையில் காவடியுடனும், வாயில் அலகு குத்தியும், உடல் முழுவதும் விபூதி பூசியும்  முருகப் பெருமானின் பாடல்களைப் பாடிய படியும், அரோகரா கோஷம் எழுப்பியபடியும் கைகளைத் தட்டியும், ஆடிக் கொண்டும் திருச்செந்தூரை நோக்கி பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மட்டும் இல்லாமல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.

பக்தர்களின் வருகையால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை , நெல்லை – திருச்செந்தூர் சாலை மற்றும் கன்னியாகுமரி – திருச்செந்தூர் சாலை ஆகிய சாலைகளில் முருக பக்தர்களின் தலைகளாகக் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே தனியார் அமைப்பு, சமூக அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு முருக பக்தர்களுக்கு மோர், சுக்குகாபி, தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.