வெளியிடப்பட்ட நேரம்: 09:29 (31/01/2018)

கடைசி தொடர்பு:10:37 (31/01/2018)

சோலார் வீடு... மறுசுழற்சி நீரில் ஏரி... மின்சார வாகனங்கள்... பூமியைப் பாதிக்காமல் ஒரு நகரம்!

சோலார் நகரம்

ஸ்மார்ட் சிட்டி என ஒரு திட்டத்தை இந்திய அரசு முன்னெடுத்து வருகிறது. எது நிஜமான ‘ஸ்மார்ட்’ என்பதே தெரியவில்லை. கணினிமயமானால் அது ஸ்மார்ட் என்பதே பொதுவான புரிதல் ஆக இருக்கிறது. இந்த வகை ஸ்மார்ட் இல்லையென்றாலும், நிஜமாகவே ஒரு ‘ஸ்மார்ட்’ ஆன சோலார் நகரம் புதிதாக உருவாகி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸில். அடுத்த ஆண்டே முழுமையாக தயாராகிவிடும் என சொல்லப்படும் இந்த நகரின் பட்ஜெட் என்ன தெரியுமா? 354 மில்லியன் டாலர். இந்திய ரூபாயில் 2250 கோடி.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் உற்பத்தியில் முக்கியமான நாடு. அதனாலே சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும், கார்பன் ஃபுட் பிரின்ட் அதிகமாக இருக்கும் பகுதி. 2050-க்குள் தங்களுக்குத் தேவையான சக்தியில் 75 சதவிகிதத்தை மரபுசாரா எரிசக்தி முறையில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக லோக்கல் ரியல் எஸ்டேட் நிறுவனமான டைமண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் துபாயிலிருந்து 18 கி.மீ தூரத்தில் 'தி சஸ்டைனபிள் சிட்டி' என்ற நகரை உருவாக்கி வருகிறது. இந்நகரின் முக்கிய நோக்கம் இங்கு உற்பத்தி செய்யப்படும் சக்தியைவிட குறைவான சக்தியே பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இந்த நகரைப் பற்றிய சில ஹைலைட்ஸ்:

- 2013-ம் ஆண்டு துவக்கப்பட்ட இதன் கட்டுமானம் 2019-ல் முடிவடையும்.

- இதன் மொத்த அளவு 113 ஏக்கர். முடிந்த அளவு குறைவான co2 வாயுவை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்நகரின் முக்கிய நோக்கம்.
இந்நகரின் குடிமக்கள் பொது போக்குவரத்து வசதிகளையே பயன்படுத்த வேண்டும். ஆனால், அதற்குக் கட்டணம் கிடையாது. கார்கள் வாங்கினால் மின்சார கார்களை மட்டுமே வாங்க முடியும். அதுவும் ஓட்டுநரில்லா ஸ்மார்ட் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். குதிரை வண்டிகளும் அதிகம் இருக்கும்.

தி சஸ்டைனபிள் சிட்டி

- இங்கே பெட்ரோல் பங்குகளோ கேஸ் ஸ்டேஷன்களோ இருக்காது. சார்ஜின்ஸ் ஸ்டேஷன்கள் மட்டும்தான். மின்சார வாகனங்களை இங்கே இலவசமாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

- நகரிலிருக்கும் எல்லா வீடுகளின் கூரைகளிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். 

- 2500 மரங்கள் கொண்ட 100 அடி சாலையுடன் கூடியா பூங்கா உண்டு. 

- இந்நகரை இரண்டு பகுதிகளாக (Phase) கட்டி வருகிறது டையமண்ட் டெவலப்பர்ஸ். முதல் பகுதி 2015-ம் ஆண்டே திறக்கப்பட்டது. அப்போது 500 வில்லாக்கள், 89 அப்பார்ட்மென்ட்கள், 11 பசுமை வீடுகள் 11 லட்ச சதுர அடிகள் கொண்ட அலுவலக கட்டடங்கள் ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன.

- அவை மட்டுமின்றி உடற்பயிற்சிக் கூடங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவையும் உண்டு.

- மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்பட்ட நீரைக் கொண்டு இரண்டு செயற்கை ஏரிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். புதிய பகுதியில் வரவிருக்கும் ஹோட்டல்கள் கூட சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காதபடியே செயல்படும்.

தி சஸ்டைனபிள் சிட்டி

சஸ்டைனபிள் சிட்டி சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய மூன்று விஷயங்களில் தன்னிறைவு பெற நினைக்கிறது. 
அன்றாட வாழ்வுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் சரியாக கொடுப்பதன் மூலம் சமூகமானது தன்னிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என நினைக்கிறார்கள் டையமண்ட் டெவலப்பர்ஸ்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் சக்திகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு செய்யாத சோலார் மூலமே செய்யப்படும். அவை பயன்படுத்தப்படும் விதங்களிலும் கூடுதல் கவனம் எடுப்பதன் மூலம் அந்த விஷயத்திலும் தன்னிறைவு அடைந்துவிடுவார்கள்.

மிச்சமாகும் சக்தியை மற்ற ஊர்களுக்குக் கொடுப்பதன் மூலம் வரும் வருமானத்தை நகரவாசிகளுக்கே கொடுத்துவிடுவார்கள். அதனால் பொருளாதாரத்திலும் நல்ல நிலையை அடைய திட்டமிட்டிருக்கிறார்கள்.

தி சஸ்டைனபிள் சிட்டி

படங்கள் உதவி : https://www.thesustainablecity.ae/

இந்த கான்செப்ட் 2019-ம் ஆண்டு வந்து ஹிட் அடித்தால், வருங்காலத்தில் இதுபோன்ற நகரங்கள் உலகமெங்கும் கட்டப்படும் என எதிர்பார்க்கலாம்.

நீங்கள் இந்த நகரில் வேறு என்ன மாதிரியான விஷயங்களைச் சேர்க்கலாம் என நினைக்கறீர்கள்? கமென்ட் பாக்ஸில் அதைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்