வைரல் வீடியோ எடுக்க துப்பாக்கியைக் கையிலெடுத்த காதல் ஜோடி... விளைவு?! | Pregnant mum kills boyfriend in YouTube bullet prank gone wrong

வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (31/01/2018)

கடைசி தொடர்பு:15:02 (31/01/2018)

வைரல் வீடியோ எடுக்க துப்பாக்கியைக் கையிலெடுத்த காதல் ஜோடி... விளைவு?!

ஒரே நாளில் இணையத்தில் வைரலாகிவிட வேண்டுமென நினைப்பவர்களில் சிலர் சீரியஸான விஷயங்களை காமெடியாகச் செய்து கொண்டிருப்பார்கள். சிலர் காமெடியான விஷயங்களை சீரியசாகச் செய்து கொண்டிருப்பார்கள். இணையத்தில் இப்படி இரண்டு வகையான மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒன்று ஆர்வக்கோளாறு வகையறா. மற்றொன்று ஆர்வமே கோளாறு வகையறா. (இது மன்னர் வகையறா விமர்சனம் இல்லை. அது இங்கே இருக்கிறது) .வைரல் என்கிற வார்த்தையை மையமாகக் கொண்டு செயல்படுகிற முதல் வகையான மனிதர்கள் செய்கிற தவறுகள் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆர்வமே கோளாறான மனிதர்கள் செய்கிற தவறுகள் அப்படி இல்லை. அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டிவரும்.

மோனலிசா பெட்ரோ

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணம் நார்மன் கவுண்டி பகுதியில் இருபது வயது மோனலிசா பெரேஸ் என்கிற பெண் வசித்து வருகிறார். அவருடைய ஆண் நண்பர் பெட்ரோ ரோஸ். இருவரும் இணைந்து  யூ- ட்யூபில் சேனல் ஒன்றை நடத்துகிறார்கள். இருவருக்கும் இணையத்தில் மிகப் பெரிய பிரபலம் ஆக வேண்டுமென்ற ஆசை. பொது இடங்களில் சாகசம் செய்வது, மக்களிடம் பிரான்க் செய்வது என வேடிக்கையான வீடியோக்களை எடுத்துப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்களது சேனல் மிகக் குறைந்த பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. பார்வையாளர்களைக் கவர வைரலாக ஏதாவது செய்ய  வேண்டும் என யோசிக்கிறார்கள். நாள்கள் கடந்துகொண்டிருந்த வேளையில் ஒரு நாள் இருவரும் ஒரு அதி பயங்கர வீடியோ ஒன்றை எடுத்து “ஓவர் நைட்டில்" வைரல் ஆவது என முடிவெடுக்கிறார்கள்.  

தங்களுடைய வீடியோ இணையத்தில் வைரலாக வேண்டும் என நினைத்து அவர்கள் கையில் எடுத்தது துப்பாக்கியை. இருவரும் சேர்ந்து எடுக்கப்போகும் வீடியோவின் சாராம்சம் இதுதான். மோனலிசா தான் வைத்திருக்கும் 50 கேலிபர் “டெசர்ட் ஈகிள்” வகை துப்பாக்கியால் பெட்ரோவை நோக்கிச் சுடுவார். பெட்ரோ ஆங்கில மொழி என்சைக்கிளோ பீடியா புத்தகத்தை வைத்து தோட்டாவைத் தடுப்பார். இதுதான் கான்செப்ட். என்சைக்கிளோபீடியா புத்தகம் கனமான அட்டையைக் கொண்ட புத்தகம். 50 கேலிபர் “டெசர்ட் ஈகிள்” வகை துப்பாக்கியானது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அதன் தோட்டாவை அந்தப் புத்தகம் தடுத்துவிடும் என்பதுதான் ப்ளான்.

வீடியோவைப் பதிவு செய்வதற்கு முன்பு ஜூன் மாதம் 26 தேதி மாலை 5 மணிக்கு மோனலிசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  “நானும் பெட்ரோவும் ஒரு வீடியோ எடுக்கப் போகிறோம், இதுவரை எடுக்காத அபாயகரமான வீடியோவாக அது இருக்கும். இது என்னுடைய ஐடியா அல்ல, பெட்ரோவினுடைய ஐடியா” எனப் பதிவிடுகிறார்.

வைரல்

எல்லாம் தயாரான நிலையில் கேமரா ஆன் செய்யப்படுகிறது, பெட்ரோ  என்சைக்ளோபீடியா புத்தகத்தை தன்னுடைய மார்புப் பகுதியில் வைத்துக்கொண்டு நிற்கிறார். மோனலிசா, பெட்ரோவின் கையில் இருக்கும் புத்தகத்தைக் குறிபார்த்துச் சுடுகிறார். துப்பாக்கியிலிருந்து வெளியேறுகிற தோட்டா நேராகப் புத்தகத்தை துளைக்கிறது. துப்பாக்கியால் சுட்ட மோனலிசா அடுத்து நடக்கவிருப்பதை விளையாட்டாகக் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். புத்தகத்தைத் துளைக்காது என நினைத்த தோட்டா, கனமான முன் அட்டைப் பின் அட்டை என துளைத்துக் கொண்டு புத்தகத்தின் வெளியே பாய்ந்து பெட்ரோவின் மார்பைப் பதம் பார்க்கிறது. சில வினாடிகள்தாம் பெட்ரோ சரிந்து கீழே விழுகிறார். இதில் வேதனையான இன்னொரு விஷயம் இந்தச் சம்பவம் நிகழும் பொழுது மோனலிசா கர்ப்பிணியாக இருந்தார். அவருடைய மூன்று வயதுக் குழந்தை சம்பவத்தை நேரில் பார்த்துக்கொண்டிருந்தது. 
 
குண்டு பாய்ந்து விழுந்து கிடந்த பெட்ரோவின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மோனலிசா நார்மன் கவுண்டி பகுதியின் அவசர உதவி எண்ணான 911 ஐ அழைக்கிறார்.  “யூ- ட்யூபில் பதிவிட வீடியோ எடுத்தோம், தவறு நடந்து விட்டது உடனே முகவரிக்கு வாருங்கள்” எனச் சொல்லிவிட்டு வைத்து விடுகிறார். வந்தவர்கள் பெட்ரோவை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பெட்ரோவைச் சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். 

encyclopedia

மோனலிஸா காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் வருகிறார். காவல்துறை விசாரணையில் “புத்தகத்தின் அட்டை  தோட்டாவை தாங்கும் என நினைத்துத்தான் துப்பாக்கியால் சுட்டேன்” என மோனலிசா தெரிவிக்கிறார். சம்பவ இடத்திலிருந்த கேமரா மற்றும் இன்னும் சில பொருள்களைக் காவல்துறை கைப்பற்றுகிறது. வழக்கில் முக்கிய சாட்சியாக கேமராவில் பதிவான காட்சிகளையும், மூன்று வயதுக் குழந்தையையும் சேர்க்கிறார்கள். மோனலிசா கைது செய்யப்படுகிறார். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதற்குள் மோனாலிசாவுக்குக் குழந்தை பிறக்கிறது. தனது இரண்டாவது குழந்தைக்கு பெட்ரோ ரூஷ்’ என்று இறந்து போன தன்னுடைய ஆண் நண்பனின் பெயரை வைத்திருக்கிறார். 
 
இன்றைய இணைய உலகில் வைரஸ் உருவாக்குகிற பிரச்னைகளை விட வைரல் உருவாக்குகிற பிரச்னைகளே அதிகம். வைரல் என்கிற ஒரு வார்த்தை ஒருவருடைய வாழ்க்கையில் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மோனலிசாவின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக மோனலிசா ஜூன் மாதம் 26 -ம் தேதி அவருடைய  யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டிருந்த வீடியோ இதுவரை 1900000 லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 14000 அதிகமான கருத்துகளையும் பெற்றிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள இரண்டு கமென்ட்கள் கவனம் ஈர்த்தன. 

 “வைரல் ஆக வேண்டும் என்றுதான் வீடியோ எடுத்தீர்கள், இப்போது வைரலாகிவிட்டீர்கள்” 

“எந்தப் புத்தகத்தையும் அட்டையை வைத்து முடிவு செய்யாதீர்கள்”

 

 

 

 

 

.


டிரெண்டிங் @ விகடன்