காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு! | This 14 year old girl from Rourkela invented air cycle

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (31/01/2018)

கடைசி தொடர்பு:19:22 (31/01/2018)

காற்றை எரிபொருளாகக் கொண்டு ஓடும் சைக்கிள்... 14 வயது மாணவியின் கண்டுபிடிப்பு!

        
தனக்கென ஒரு கனவு பைக் வாங்குவதே பெரும்பாலானோரின் லட்சியம். பைக் நமது என ஆகும்போதுதான் உண்மையான பிரச்னை தெரியும். யானையை வாங்கிவிடலாம். ஆனா அதுக்குத் தீனி போடறதுதான் கஷ்டம் என்பது போல பைக்கை வாங்கிட்டாலும் அதுக்கு பெட்ரோல் போடுவதுதான் மிகப் பெரிய கஷ்டம். இந்தப் பிரச்னைக்காகத் தீர்வு ஒன்றை யோசித்திருக்கிறார் பிரியதர்ஷினி.
ஒடிசாவைச் சேர்ந்த தேஜஸ்வானி பிரியதர்ஷினி, 14 வயது மாணவி. சமீபத்திய இவரின் புதுமையான கண்டுபிடிப்பு அனைத்து அறிவியலாளர்களையும் இவரின் பக்கம்  திருப்பியுள்ளது. காற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இரு சக்கர வண்டிதான் பிரியதர்ஷினியின் கண்டுபிடிப்பு.

ஆப்பிள் பூமியில் விழுந்ததைப் பார்த்து நியூட்டன் புவிஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது போல, பிரியதர்ஷினி Air - gun உபயோகிக்கும் முறையைப் பார்த்த போது இக்கண்டுபிடிப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒருநாள், சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் ஒரு சாதாரண Air - gun வைத்து சைக்கிள்களில் உள்ள முடிச்சுகளை அகற்ற எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறார். அப்படி என்றால் ஒரு Air - gun - னால், மிதிவண்டியை ஓட வைக்க முடியும் என்ற எண்ணம் மனதில் எழ தன் கருத்தை தந்தையிடம் கூறியிருக்கிறார் பிரியதர்ஷினி. இவரின் தந்தை நட்வர் கோசாயத் (Natwar Gocchayat) மகளின் எண்ணம் ஈடேறுவதற்காகவும் ,  ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உறுதுணையாகவும்  இருந்துள்ளார். இருவரும் மிதிவண்டியை வைத்து பல ஆராய்ச்சிகளை வீட்டிலேயே  மேற்கொண்டுள்ளனர். முதலில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சி இவர்களுக்கு வெற்றியைத் தந்தது. 

சைக்கிள்

காற்று மிதிவண்டியின் அமைப்பு மற்றும் செயல்படும் முறை :

காற்றை நிரப்புவதற்கு ஏற்றவாறு சிலிண்டர் (Air tank) ஒன்று மிதிவண்டியின் பின்புறம் சைக்கிள் கேரியரில் அமைந்துள்ளது. இந்த சிலிண்டரில் ஒரு துவக்க குமிழ், அளவிடும் டயல் மற்றும் ஒரு பாதுகாப்பு வால்வும் உள்ளது. பாதுகாப்பு வால்வு அதிகப்படியான காற்றை சிலிண்டரிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கிறது. 

துவக்கக் குமிழி  திறக்கப்பட்ட உடன் சிலிண்டரில் இருக்கும் காற்றானது பெடலுக்குப் பக்கத்தில் உள்ள Air - gun க்குத் திருப்பிவிடப்படுகிறது. கியரானது இப்போது ஆறு வித்தியாசமான Blade களின் உதவியுடன் சுழல்கிறது. இந்தச் சுழற்சி வண்டியை இயக்கி நகர்த்துகிறது.
10 Kg  காற்றைக்கொண்டு மட்டுமே 60 கி.மீ தூரத்தை இந்த சைக்கிளால் கடக்க முடியும். இதே தொழில்நுட்ப உத்தியை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களிலும்  பயன்படுத்தலாம்.  

மோட்டார்  சைக்கிள்கள் மற்றும் கார்களில் இந்தக் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுமானால், இனி வாகனம் ஓட்டுவதற்கு பெட்ரோல் மற்றும்  டீசலின்  தேவை இருக்காது. அதிகப்படியான  பணத்தை பெட்ரோலுக்காக செலவு செய்ய வேண்டிய தேவையும் இருக்காது. 
"என்னுடைய முதன்மையான நோக்கம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை உருவாக்குவதுதான்" என்று பிரியதர்ஷினி கூறியுள்ளார்.   

பிரியதர்ஷினியின் தந்தை இதுபற்றி கூறுகையில் ”பிரியதர்ஷினி பல விருதுகளை இந்தக் கண்டுபிடிப்பிற்காக வல்லுநர்களிடமிருந்து வென்றிருக்கிறாள். இந்த மிதிவண்டி மாற்றுத்திறனாளிகளும் உபயோகிக்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதிகப்படியான புதைப்படிவ எரிப்பொருள்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க நினைக்கும் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த வண்டியை உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார். 
               


டிரெண்டிங் @ விகடன்