வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (31/01/2018)

கடைசி தொடர்பு:19:25 (31/01/2018)

ஸ்கின் டோனுக்கு ஏற்ற நிறங்களைத் தேர்வுசெய்வது எப்படி? #skintone

நமக்குப் பிடித்த நிறங்களில் ஆடைகள் வாங்கும்போது, சில நேரத்தில் அவை பொருந்துவதில்லை. அவை நம் தோற்றப்பொலிவை மழுங்கிக்காட்டும். காரணம், நம் ஸ்கின் டோன். குளிர் டோன் (Cool Tones), வெம்மை டோன் (Warm Tones) மற்றும் நடுநிலை டோன் (Neutral Tones) என்று ஸ்கின் டோன்களை வகைப்படுத்தலாம். வெளிர் நிறம் `குளிர் டோன்', கரு நிறம் `வெம்மை டோன்' என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. எந்த டோனில் உங்கள் தோலின் நிறம் உள்ளது என்பதை சில சோதனைகளின் மூலம் கண்டறியலாம். இவற்றை அறிந்துகொண்டால், உங்களின் நிறத்துக்கு ஏற்ற உடைகளைத் தேர்வுசெய்வது மிகவும் சுலபம்.

ஸ்கின் டோன்


சோதனை 1 :
நரம்புச் சோதனை:

உங்களின் மணிக்கட்டுகளில் உள்ள நரம்பின் நிறம் பச்சை அல்லது ஆலிவ் ஷேடுகளில் இருந்தால், நீங்கள் வெம்மையான வண்ணச்சாயலைச் சேர்ந்தவர். அதுவே நீல நிறத்தில் இருந்தால், நீங்கள் குளிர் வண்ணச்சாயலைச் சேர்ந்தவர். இந்த இரண்டு நிறங்களிலும் சேராமல் வேறு நிறத்தில் உங்களின் நரம்பு தென்பட்டால், நீங்கள் நடுநிலையான வண்ணச்சாயலைக் கொண்டவர்.

Vein Test


சோதனை 2 :
வெள்ளைத் தாள் சோதனை:

இந்தச் சோதனை செய்வதற்கு ஒரு வெள்ளைத் (A4 அளவு) தாளை எடுத்து பாதி முகம் மறையும் வரை வைக்க வேண்டும். வெள்ளைத் தாளுடன் சேர்ந்து உங்களின் தோலின் நிறம் மஞ்சள், பச்சை அல்லது இளம் பழுப்பு நிறத்தில் தெரிந்தால், நீங்கள் குளிர் டோனைச் சேர்ந்தவர். பிங்க் அல்லது நீல வண்ணத்தில் தெரிந்தால், நீங்கள் வெம்மையான வண்ணச்சாயலைச் சேர்ந்தவர். கிரே வண்ணத்தில் தெரிந்தால், நீங்கள் நடுநிலை வண்ணச்சாயலைச் சேர்ந்தவர். முகத்தில் டானிங், பருக்கள் போன்றவை இருந்தால், உங்கள் நண்பரின் உதவியோடு வெள்ளைத் தாளை காதுகளின் பின்புறம் வைத்து இந்தச் சோதனையைச் செய்துபார்க்கலாம்.

Paper Test


சோதனை 3 :
டானிங் / பர்னிங் சோதனை:

உங்களின் சருமம் டான் அல்லது பர்ன் ஆகிறதா என சோதனை செய்ய வேண்டும். நம் உடல் வெயிலில் படுவதால் சருமத்தில் ஆங்காங்கே `பேட்ச்சஸ்' (Patches) ஏற்படும். அதன் நிறம் அடர்த்தியான பழுப்பு நிறமாக இருந்தால், உங்களது தோல் டானாகி (Skin Tan) உள்ளது என அர்த்தம். நீங்கள் குளிர் டோனைச் சேர்ந்தவர் ஆவர். பேட்ச்சின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்தால், உங்களின் சருமம் பர்னாகியுள்ளது எனப் பொருள். எனவே, நீங்கள் வெம்மை டோனைச் சேர்ந்தவர்.

Tanning / Bruning Test


சோதனை 4 :
நகை சோதனை:

இதற்கு, ஒரு பக்கம் தங்க நிற நகைகளையும் மறுபக்கம் சில்வர் நிற நகைகளையும் அணிந்து சோதனை செய்ய வேண்டும். காதணிகளை அணிந்துகொள்ளலாம். சில்வர் நகைகள் உங்களை ஒளிரச்செய்தால், நீங்கள் குளிர் டோனைச் சேர்ந்தவர். தங்க நகைகள் உங்களின் தோற்றத்தை மெருகேற்றினால், நீங்கள் வெம்மை டோனை உடையவர் எனப் பொருள். இரு நகைகளும் உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் நடுநிலை வண்ணச்சாயல்கொண்டவர்.

Jewel Test


சோதனை 5 :
நகச் சோதனை:

உங்கள் நகங்களின் நிறம் சிவப்பு, பிங்க் அல்லது நீல நிற டோன்களில் இருந்தால், நீங்கள் குளிர் டோனைச் சேர்ந்தவர். பீச் (Peach) அல்லது கோல்டு நிறத்தில் உங்கள் நகம் இருந்தால், நீங்கள் வெம்மை டோனைச் சேர்ந்தவர். குறிப்பிட்ட நிறங்களில் இல்லையென்றால், நீங்கள் நடுநிலை டோனைச் சேர்ந்தவர்.

Nail Test


இதில் ஏதேனும் ஒரு சோதனையைச் செய்து, உங்களின் ஸ்கின் டோனை அறிந்துகொள்ளுங்கள்.

தோல்களின் டோனுக்கு ஏற்ற நிறங்களின் தொகுப்பு...

குளிர் டோனுக்கு ஏற்ற நிறங்கள்:

நீலம், டீல் (Teal), லாவண்டர், ரோஸ், மரகதப் பச்சை, அடர்த்தியான ஊதா, ரூபி, பேல் மஞ்சள் (Pale Yellow), நேவி, பிரைட் வெள்ளை போன்ற நிறங்களில் ஆடைகளைத் தேர்வுசெய்யலாம். ஆரஞ்சு, டொமேட்டோ ரெட், அடர்த்தியான மஞ்சள் நிறங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வெம்மை டோனுக்கு ஏற்ற நிறங்கள்:

ஆரஞ்சு, கோல்டு, ஸ்கார்லெட் ரெட், கோரல், ஆம்பர், மஞ்சள், ஆலிவ், வயலெட், க்ரீம், டாப் (Taupe) உள்ளிட்ட நிறங்கள் இவர்களுக்குக் கட்சிதமாகப் பொருந்தும். நீலமாணிக்கம், செவ்வந்திக்கல் போன்ற ரத்தின நிறங்கள் மற்றும் நீல நிறங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நடுநிலை டோனுக்கு ஏற்ற நிறங்கள்:

இவர்களுக்கு பிரைட் நிறங்களைவிட மென்மையான நிறங்கள் மெருகேற்றும். டஸ்ட்டி பிங்க், ஜேட் பச்சை (Jade Green), கார்ன் மஞ்சள் (Corn Yellow), ஆஃப் ஒயிட், பிரவுன், கறுப்பு, கிரே, மேஜெந்தா போன்ற நிறங்கள் நடுநிலை டோனுக்கு எடுப்பாக இருக்கும். பிரைட் நிறங்களில் சிவப்பு, இவர்களுக்காக உருவாக்கிய நிறம்போல் தோன்றவைக்கும்.


இவைபோக, சில நிறங்கள் அனைத்து டோன்களுக்கும் பொருந்தும். வெள்ளை நிறம், அனைத்து ஸ்கின் டோன்களுக்கும் எடுப்பாக இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெள்ளை, சுத்தமான வெள்ளையாக இருக்க வேண்டும். லைட் ப்ளஷ் பிங்க், பச்சை மற்றும் நீல நிறத்தின் சரியான அளவு விகிதம்கொண்ட டீல் (Teal), கத்திரி ஊதா உள்ளிட்ட நிறங்கள், அனைத்து டோன்களுக்கும் பொருந்தும்.


டிரெண்டிங் @ விகடன்