வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (01/02/2018)

கடைசி தொடர்பு:07:39 (01/02/2018)

ஒரு ஷிபாஸாகுரா மலர்த் தோட்டம்... காதலின் அழுத்தமான அடையாளமாக மலர்ந்த கதை! #FeelGoodStory

கதை

ண்மையான காதல் கதைகள் ஒருபோதும் முற்றுப்பெறுவதில்லை’ என்று சொல்லியிருக்கிறார் பல `பெஸ்ட் செல்லர்’ எழுதிய அமெரிக்க எழுத்தாளர் ரிச்சர்டு பாக் (Richard Bach). பூமியில் வாழவே வகையில்லாமல், மனிதன் வேற்று கிரகத்துக்குக் குடிபோகிற சூழ்நிலை வந்தாலுமேகூட காதல் இருக்கும்; காதல் கதைகள் இருக்கும். அந்த நேசம், அளவிட முடியாத பெரும் கருணை... எந்தப் பலனையும் எதிர்பாராமல் தன்னையே தன் காதல் இணைக்காக அர்ப்பணிக்கத் துணிகிற தியாகம். தாஜ்மகால் தொடங்கி உலகெங்கும் எத்தனையோ காதல் சின்னங்கள் இருக்கின்றன. ஜப்பானில் தன் பிரிய மனைவிக்காக ஒருவர் உருவாக்கிய சின்னம் கொஞ்சம் வித்தியாசமானது. அன்பின் மகத்துவத்தைச் சொல்வது. அந்தக் கதை என்ன... பார்க்கலாமா?

அது ஜப்பானிலிருக்கும் ஷின்டோமி (Shintomi) என்கிற சிறு நகரம். அந்த நகரத்தில் வசித்துவந்தார் குரோகி (Kuroki). தன் மனைவியின் மேல் அவருக்கு அப்படி ஒரு காதல். ஒரு சிறு பண்ணை. தினமும் அதைப் பராமரிப்பதும், அக்கம்பக்கத்து வீட்டார்களுடையதையும் சேர்த்து 60 பசுக்களை வளர்ப்பதும் குரோகி மற்றும் அவர் மனைவியின் வேலை. இரு குழந்தைகள்... மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கை. குரோகிக்குத் திருமணம் முடிந்து 30 வருடங்கள் ஆனபோது அவர் ஒரு முடிவெடுத்தார்... `இது போதும். இனியும் வேலை வேலை என்று ஓட வேண்டாம். ஓய்வெடுக்கலாம்.’

குரோகி தன் மனைவியுடன்

(PC : Youtube)

இந்த முடிவைச் சொன்னதும் அவர் மனைவிக்கு அப்படி ஒரு சந்தோஷம். ``ஓய்வெடுக்குறதுனு முடிவு செஞ்சாச்சு... இத்தனை வருஷம் இங்கேயே அடைஞ்சு கிடந்துட்டோம். இனியும் வேணாமே... நீங்களும் நானும் மட்டும் எங்கேயாவது டூர் போலாமே...’’ யோசனை சொன்னார் மனைவி. குரோகியும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார். ஒருநாள் இருவரும் தங்கள் பண்ணையிலிருந்து கிளம்பினார்கள். ஜப்பானில் சில இடங்களைப் பார்த்தேதீருவது என்று சில இடங்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்துவைத்திருந்தார்கள். உற்சாகமாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

நாம் ஒரு கணக்குப் போட்டால், இயற்கை வேறொரு கணக்குப் போட்டுவைத்திருக்கும். அது, குரோகி விஷயத்திலும் நடந்தது. ஒரே ஒரு வாரம்தான் பயணம் செய்திருப்பார்கள். அவர் மனைவிக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்தது. அதன் தீவிரம் அதிகமாகி பார்வையை பாதித்தது. ``ஐயோ கண் தெரியலையே’’ என்று அலறினார் குரோகியின் மனைவி. அருகிலிருந்த பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பயனில்லை. திடீரென்று நன்றாகத் தெரிந்துகொண்டிருந்த காட்சிகள் தெரியாமல் போனால் எப்படியிருக்கும்? மனமொடிந்துபோனார் திருமதி குரோகி. மனைவியின் வேதனை குரோகிக்கு சகிக்க முடியாததாக இருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை இருவருமே உணர்ந்தார்கள். வீடு திரும்பினார்கள்.

வீட்டுக்கு வந்ததும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் குரோகியின் மனைவி. தன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்கிற மாதிரி மாறிப்போனார். பிள்ளைகளிடம் பேசுவதே இல்லை; கணவர் ஏதாவது கேட்டால் ஒற்றை வார்த்தையில் பதில். எப்போதும் கலகலவென்றிருக்கும் மனைவி இப்படி ஒரு தனித்தீவுபோல ஆகிப்போனது குரோகிக்குத் தாங்க முடியாததாக இருந்தது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். தன் மனைவியின் முகத்தில் ஒரே ஒரு புன்னகை மலர்ந்தால்கூடப் போதும் என்று நினைத்தார். அதற்காகவே என்னென்னவோ செய்து பார்த்தார். தினமும் யாரையாவது வீட்டுக்கு அழைத்தார். ஒவ்வொருநாளும் குறைந்தது இரண்டு பேராவது வந்து தன் மனைவியிடம் பேசினால், அவர் மனநிலையில் மாற்றம் வரும் என்று நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. வீடு தேடி வருபவர்களிடம் பேசுவதையே தவிர்த்தார் அவர் மனைவி.

காதல்

ஜப்பானில் பூக்கும் பிரத்யேகமான ஒரு பூ உண்டு. அதற்கு `ஷிபாஸாகுரா’ (shibazakura) என்று பெயர். ஒரு சீஸனில் மட்டுமே மலரும் பூ. அந்தப் பூவை தன் தோட்டத்தில் வளர்த்தால் என்ன என்று குரோகிக்குத் தோன்றியது. அது பார்வைக்கு மட்டும் அழகாகத் தெரிவதில்லை; அதன் மணம் ஊரையே கூட்டிவிடும். அந்தப் பூக்களை வளர்த்தால், அவற்றின் மணம் தன் மனைவியை நிச்சயம் மயக்கும்; ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தும், திரும்ப அவரிடம் சிரிப்பு மலரும் என்று நம்பினார் குரோகி.

ஷிபாஸாகுரா மலர்களை வளர்க்கத் தன் தோட்டத்தைத் தயார் செய்தார். தேவையற்ற மரங்களை, செடி, கொடிகளை அகற்றினார். மண்ணை பூக்கள் மலர்வதற்குத் தோதாகப் பதப்படுத்தினார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் உழைத்து ஒரு பெரும் பூந்தோட்டத்தையே உருவாக்கினார். பிங்க் நிறத்தில் ஒரு பிரமாண்டமான போர்வையை விரித்ததுபோல மலர்ந்தன பூக்கள். பிங்க் நிறக் கடலாகக் காட்சியளித்தது தோட்டம். பூக்களின் வாசம் அக்கம்பக்கத்துப் பண்ணைகள் வரை அடித்தது.

குரோகியின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் மனைவிக்கு, அந்தப் பூக்களின் மணம் ஏதோ ஒரு பரவசத்தைக் கொடுத்தது. தன் கணவர் தனக்காகத்தான், தனக்குப் பிடித்த ஷிபாஸாகுரா பூக்களை வளர்த்திருக்கிறார் என்பதும் புரிந்தது. தன் கணவருக்குத் தன் மீதிருந்த காதல், தனக்குத் தானே அவர் போட்டுக்கொண்ட சிறையை உடைத்தெறிந்தது. ஒரு நாள் கணவரின் கையைப் பிடித்துக்கொண்டு தேம்பினார்... ``எனக்காகவா இந்தப் பூக்களையெல்லாம் வளர்த்தீங்க?’’

``ஆமா டார்லிங்...’’

ஷிபாஸாகுரா

அதுதான் குரோகியின் மனைவி அழுத கடைசி அழுகை. அதற்குப் பிறகு வாழ்நாளெல்லாம் அவர் முகத்தில் மலர்ந்திருந்தது சிரிப்புதான். சீஸன் முழுக்க, கணவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, பழைய இனிய நாள்களை, மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்தபடி பூந்தோட்டம் முழுக்க நாளெல்லாம் அலைவதுதான் அவரின் முக்கிய வேலையாக இருந்தது. இப்போது குரோகியின் தோட்டம் ஒரு சுற்றுலாதலம். ஷிபாஸாகுரா பூக்கள் பூக்கும் சீஸனில் அந்தத் தோட்டத்துக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 7,000 பேர் பார்வையிட வருகிறார்கள். அங்கே அவர்கள் பார்ப்பது வெறும் பிங்க் நிறப் பூக்களை அல்ல... குரோகிக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருந்த காதலின் அடையாளத்தை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்