வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (01/02/2018)

கடைசி தொடர்பு:12:10 (01/02/2018)

ஓமந்தூராரின் முடிவுக்குக் கட்டுப்பட்ட நேரு! பிறந்த தினச் சிறப்புப் பகிர்வு!

ஓமந்தூரார்

“ ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி’ என்றவர் ஆபிரகாம் லிங்கன். ஆனால், அவருடைய கூற்றுப்படி நம் நாட்டில் இன்றைய ஆட்சிமுறை இருக்கிறதா என்றால், அதுதான் இல்லை” என்கின்றனர் பொதுமக்களும், அரசியல்வாதிகளும். அவர்கள் சொல்வது ஒருவிதத்தில் உண்மைதான் என்றாலும், ஒருகாலத்தில் வெறும் ஒன்றரை ஆண்டுகாலம் மட்டுமே முதல்வராய் இருந்த ஓமந்தூர் ராமசாமியார், உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மகத்தான சாதனைகளைச் செய்தார். அப்படிப்பட்டச் சாதனைகளுக்குச் சொந்தக்காரராய் விளங்கும் ஓமந்தூராரின் பிறந்த தினம் இன்று. 

மூதறிஞர் ராஜாஜியால், ‘புனிதமான ஆத்மா’ என்றும்; பண்டித ஜவஹர்லால் நேருவால், ‘பட்டை தீட்டப்படாத வைரக்கல்’ என்றும் புகழப்பட்ட ஓமந்தூர் ராமசாமியார், சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக இருந்தவர். `சத்தியமேவ ஜெயதே’ என்ற இந்திய அரசின் இலச்சினையில் இருந்த சொற்களை ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் பொருத்தி, அதைத் தமிழக அரசின் சின்னமாக்கியவர்; உணவு உற்பத்தியைப் பெருக்கியவர்; எண்ணற்ற கிணறுகள் வெட்டியவர்; பள்ளிகளில் காய்கறித் தோட்டம் போட விதைகளை வழங்கியவர்; ஏரி, குளங்களைத் தூர் வாருவதில் கவனம் செலுத்தியவர்; ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தவர்; ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தவர்; பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவர் எனப் பல சாதனைகளைப் படைத்து அன்றே சரித்திரத்தில் இடம்பெற்றவர் ஓமந்தூரார். அவரைப்போலவே கடந்த ஒருவருட காலமாக இன்றும், தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள், தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல்... 

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் நாகபூஷணம் சோமசுந்தரம் என்பவர் முதன்முறையாக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மூதறிஞர் ராஜாஜியோ, அந்த இடத்துக்கு வேறு ஒருவரைக் கொண்டு வரவேண்டும் என அழுத்தம் கொடுத்தார். அதற்கு, அப்போதைய பிரதமர் நேருவும் உடன்பட்டு, முதல்வராக இருந்த ஓமந்தூராரிடம் வற்புறுத்தியபோது, “இந்தாருங்கள் என் ராஜினாமா” என்று சொல்லவே... வேறு வழியின்றி பிரதமர் நேருவும், ஓமந்தூராரின் முடிவுக்குக் கட்டுப்பட நேர்ந்தது. இங்கே... இப்போது சொல்லவே வேண்டாம். அப்படியே தலைகீழ் மாற்றங்களைத்தான் நம் தமிழகம் தினந்தோறும் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

1948-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு எனத் தனியாக ஒரு விமானத்தை வாங்கி, அதற்கு ‘ஹனுமான்’ என்று பெயர்சூட்டினார் ஓமந்தூரார். பிறகு, இங்கிருந்து டெல்லிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்குச் செல்வதாக இருந்தால், தான் மட்டும் தனியாகச் செல்லாமல் சுற்றியிருந்த மாகாண முதல்வர்களையும் அதில் அழைத்துக்கொண்டு போனார். இப்போதும் நம் மக்கள் பிரதிநிதிகள் டெல்லிக்குச் செல்கிறார்கள், தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய அல்ல... தன் தேவைகளைப் பூர்த்திசெய்ய.

ஓமந்தூரார், ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி செய்ததுபோலவே, பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த புதுச்சேரியை இணைக்கவும் முயற்சி செய்தார். இதுதொடர்பாகப்  புதுச்சேரி கவர்னர், ஓமந்தூராரை நேரிடையாகச் சென்று சந்தித்தார். அப்போது ஓமந்தூரார் புதுவை கவர்னரிடம், “இமயம்முதல் குமரிவரை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்களே வெளியேறிவிட்ட பிறகு, கை அகலத்துக்கு ஓர் ஊரை வைத்துக்கொண்டு தர மறுக்கிறீர்கள்” எனச் சீற... அங்கிருந்து வெளியேறிய புதுவை கவர்னர்,  “சென்னை மாகாண முதலமைச்சருக்கு என்ன பேசுவது என்றே தெரியாதா” என்று பிரதமர் நேருவிடம் புகார் சொல்ல... ஓமந்தூராருக்காக நேரு மன்னிப்பு கேட்ட கதையும் அவருடைய ஆட்சியில் உண்டு. 

முதல்வராக இருந்தசமயத்தில் ஓமந்தூரார், ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, “மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ... அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ, கவனிப்போ கூடாது; வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது” என்று மருத்துவர்களிடம் நிபந்தனைகள் விதித்தவர் அவர்.

இப்படி, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களுக்காக... மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் அவர். அதனால்தான் இன்றும் மக்கள் மனங்களில் நிலைகொண்டு இருக்கிறார்.

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்