க.சீ.சிவகுமாருக்கு கெளரவம்... நினைவுநாளில் மகள் எழுதிய நாவல் வெளியீடு! | Writer Ka.Si. Sivakumar's first Death Anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (01/02/2018)

கடைசி தொடர்பு:10:57 (02/02/2018)

க.சீ.சிவகுமாருக்கு கெளரவம்... நினைவுநாளில் மகள் எழுதிய நாவல் வெளியீடு!

எழுத்தாளர் க.சீ.சிவகுமார், சென்ற ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவைப் போற்றும்வகையில் அவரது நண்பர்கள் இணைந்து நினைவஞ்சலிக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்தக் கூட்டத்தில் க.சீ.சிவகுமாரின் 15 வயது மகள்  ஸ்வேதா சிவசெல்வி, ஆங்கிலத்தில் எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடுகின்றனர். அந்த நாவலை ஆங்கிலத்தில் எழுதியபோது ஸ்வேதா சிவசெல்விக்கு 14 வயது.

க.சீ.சிவகுமார்

க.சீ.சிவகுமார், தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்; திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்தவர். நகைச்சுவை உணர்வுடன் எழுதிய அவர், ஊர் சார்ந்த கதைகளின் வழியே பலராலும் அறியப்படுபவர். அவரது முதலாம் ஆண்டு  நினைவையொட்டி, பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5:30 மணி முதல் 8:30 மணி வரை சென்னை கவிக்கோ மன்றத்தில் அவருக்கான நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஏற்பாட்டை, அவரது நண்பரும் எழுத்தாளருமான பாஸ்கர் சக்தி, பதிப்பாளர் வேடியப்பன், எழுத்தாளர் ரமேஷ் வைத்யா மற்றும் சிவகுமாரின் நெருங்கிய நண்பர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

இந்த நிகழ்வில், க.சீ.சிவகுமார் கடைசியாக எழுதிய குறுநாவலும் சிறுகதைகளும் வெளியிடப்படுகின்றன. அதுமட்டுமன்றி, அவரது மகள் ஆங்கிலத்தில் எழுதிய `Festival Of Fears' என்ற ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான `பயத்தின் திருவிழா' என்கிற சிறார் நாவலும் வெளியிடப்படுகிறது. மேலும் 2017-ம் ஆண்டில் தனது முதல் சிறுகதைத் தொகுதியை வெளியிட்ட எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும்விதமாக குறிப்பிடத்தகுந்த மூன்று சிறுகதைத் தொகுதிகளுக்குத் தலா 10,000 ரூபாய்  ஊக்கத்தொகை வழங்கவுள்ளனர்.

க.சீ.சிவகுமாரின் நண்பரும் எழுத்தாளருமான பாஸ்கர் சக்தியிடம் இந்த நிகழ்வு குறித்தும் பேசியதிலிருந்து...

க.சீ.சிவகுமார்

`` `இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதுதான், சிவகுமார் இலக்கிய உலகுக்குள் அறிமுகமானதற்கான தொடக்கம். அந்தச் சிறுகதைப் போட்டியில் சிவகுமார் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் பெற்றிருந்தோம். அப்போது முதலே எங்களின் நட்பு தொடர்ந்தது. என்னையும் அவனையும் `ட்வின்ஸ்' என்றுதான் நண்பர்கள் சொல்வார்கள். என்னைப் பார்த்தால் அவனைப் பற்றியும், அவனைப் பார்த்தால் என்னைப் பற்றியும் பிறர் விசாரிக்கும் அளவுக்கான நட்பு எங்களுடையது.

அவனது நினைவுநாளை அனுசரிக்கும்விதமாக நடைபெறும் நிகழ்வில், சென்ற ஆண்டில் அறிமுகமான எழுத்தாளர்களை ஊக்குவிக்க உள்ளோம். மேலும் அவரது மகள் எழுதி வெளியான ஆங்கில சிறார் நாவலை, சென்ற ஆண்டு புத்தகக் கண்காட்சியில் நான் வெளியிட்டேன். அதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் உதயசங்கர். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டுப் பேசுகிறார். க.சீ.சிவகுமாரின் படைப்புகள் குறித்து நண்பர்கள் பேசவிருக்கிறோம்.

க.சீ.சிவகுமார், தான் வாழ்ந்த கிராமத்தை தன் எழுத்துகளில் ஆழமாகப் பதிவுசெய்தவர். அவரது எழுத்துகளில் நகைச்சுவை அவ்வளவு அழகாகக் கையாளப்பட்டிருக்கும். அவரது நினைவைப் போற்றும்விதமாக ஆண்டுதோறும் இதுபோல ஒரு நிகழ்வை நடத்த நண்பர்கள் திட்டமிட்டுள்ளோம். ஆண்டுதோறும் அறிமுக எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிக்கு கௌரவம் செய்யும் திட்டமும் உள்ளது'' எனத் தன் நண்பரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

`நதி பெருகும் காலத்தில் நாம் சந்திப்போம்... அல்லால் நாம் சந்திக்கும் காலத்தில் நதி பெருகும்' என்ற க.சீ.சிவகுமாரின் வரியை போற்றும்வண்ணம் நதிபோல நண்பர்கள் இணைந்து நினைவஞ்சலி நடத்துகின்றனர். அந்த எழுத்தாளரின் 15 வயது மகளின் நாவல்  வெளியிடப்படுவது, அறிமுக எழுத்தாளர்களை ஊக்குவிப்பது போன்ற மிக முக்கியமான முன்னெடுப்பு. இதுதான் ஒரு படைப்பாளியை நாம் சரியானவிதத்தில் நினைவுகூருவதாகும்.


டிரெண்டிங் @ விகடன்