வெளியிடப்பட்ட நேரம்: 07:07 (02/02/2018)

கடைசி தொடர்பு:08:15 (02/02/2018)

பிரார்த்தனைக்குப் பலன் உண்டா? - உண்மையை உணர்த்தும் கதை! #MotivationStory

unnai arinthal

மெரிக்க தொழிலதிபரும், பல சுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியருமான டயிள்யூ.கிளெமென்ட்  ஸ்டோன் (W. Clement Stone) இப்படிச் சொல்லியிருக்கிறார்...  `மனிதனின் மிகப்பெரும் சக்தி பிரார்த்தனை.’ அதிலும் ஒரு சின்ன நுணுக்கமுண்டு. உளமுருகி, மனதார, தனக்காக அல்லாமல் வேறு யாரோ ஒருவருக்காகச் செய்யும் பிரார்த்தனைக்குத்தான் அபார சக்தி. வேண்டுதலுக்கு மட்டுமல்ல... மற்றவரை நினைத்து, பிறருக்காகச் செய்யும் ஒரு சிறு செயலுக்குக்கூட பலன் கிடைக்கும். இதை உணர்த்தும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதை கற்பனையாக இருக்கலாம்; இப்படி ஒன்று நடக்கவே நடக்க முடியாத சம்பவமாகவும் தோன்றலாம். ஆனால், இந்தக் கதை உணர்த்தும் உண்மை யாராலும் மறுக்க முடியாதது. 

கதை - கடல் பயணம்


ஒரு பயணிகள் கப்பல் புயலில் மாட்டிக்கொண்டது. உடைந்து மூழ்கியும் போனது. அந்தக் கப்பலில் பயணம் செய்த இரண்டு பேர் மட்டும் எப்படியோ, கையில் கிடைத்த மரக்கட்டைகளைப் பற்றிக்கொண்டு தப்பித்து, ஓர் ஆளரவமற்ற தீவில் கரையொதுங்கினார்கள். இருவரும் நண்பர்கள். அடுத்து என்ன செய்யலாம் என்பது இருவருக்குமே தெரியவில்லை. அவர்களைக் காப்பாற்றக் கடவுளைத் தவிர வேறு துணை இப்போது இல்லை. எனவே, பரஸ்பரம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அந்தத் தீவின் ஒரு கரையில் ஒருவரும், அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் இன்னொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யவேண்டியது... யாராவது ஒருவரின் வேண்டுதலுக்குக்கூடவா செவி சாய்க்காமல் போய்விடுவார் கடவுள்? உதவி வரும்... அப்போது இருவருமே இந்தத் தீவிலிருந்து தப்பித்து, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிவிடலாம். உதவி ஏதும் கிடைக்காத, உதவிக்கு ஆள் யாரும் இல்லாத, எதிர்காலம் என்னவென்றே புரியாத சூழ்நிலையில் இந்த ஒப்பந்தம் இருவருக்குமே சரி என்று தோன்றியது.   

ஒப்பந்தப்படி இருவரும் பிரிந்து தீவின் எதிர் எதிர் திசைக்குப் போனார்கள். பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்கள். முதலாமவன் கடவுளை நினைத்து வேண்டுகோள் விடுத்தான்... ``கடவுளே... பசி... அகோரப்பசி... சாப்பிட ஏதாவது கொடு!’’ இரக்கமில்லாதவரா கடவுள்?! அவன் கண்ணைத் திறந்து பார்த்தபோது, சற்று தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது... பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன ஆப்பிள் பழங்கள். அவன் அவற்றைப் பறித்துப் பசியாறினான். அதே நேரத்தில், இரண்டாமவன் உணவுக்கு என்ன செய்வான் என்று அவன் யோசிக்கக்கூட இல்லை. 
முதலாமவனுக்கு உணவுப் பிரச்னை தீர்ந்தது. துணைக்கு ஆளிருந்தால் நல்லதே என்று தோன்றியது... அதிலும் நம் மனைவி உடனிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று நினைத்தான். கடவுளை நினைத்துப் பிரார்த்தித்தான். அடுத்த நாள், அவனிருந்த தீவுக்கருகே ஒரு கப்பல் விபத்துக்குள்ளானது. அந்தக் கப்பலில் அவனைத் தேடிக்கொண்டு வந்திருந்த மனைவியும் இருந்தாள். எப்படியோ தப்பிப் பிழைத்து,மிகச் சரியாகத் தன் கணவன் இருக்கும் தீவுக்கு, அவனிடமே வந்து சேர்ந்தாள். அவளை வாரியணைத்துக்கொண்டான் அவன். அவனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். `நான் நினைப்பதெல்லாம் நடக்கிறதே... நிச்சயம் கடவுள் இருக்கிறார்... என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறார்...’ என்று யோசித்தான். 

கதை - தனித்து மாட்டிக்கொண்ட இருவர்

அடுத்த நாள், அவனுக்கும் அவன் மனைவிக்கும் உடைகள் வேண்டும், ஒரு வீடு வேண்டும், பிடித்த உணவு வேண்டும்... என்றெல்லாம் கடவுளிடம் பிரார்த்தித்தான். அந்தத் தீவு ஓர் அட்சய பாத்திரம்போல அவன் கேட்ட அனைத்தையும் தந்தது. அவன் மனம் நிறைந்துபோனான். அப்போதும் அவன் எதிர்த் திசையிலிருக்கும் தன் நண்பனைப் பற்றி யோசிக்கவேயில்லை. 

`எல்லாம் கிடைத்துவிட்டது... இனி வீடு திரும்பவேண்டியதுதான் பாக்கி. அதுவும் பிரார்த்தித்தால் கிடைக்காதா என்ன..?’ அவன் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தான். அது ஆச்சர்யமான சங்கதியல்ல... அற்புதம்! கடவுள் மனமிரங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த நாள் காலையில் அவனிருக்கும் கடற்கரையோரமாக ஒரு கப்பல் வந்து நின்றது. அவன், தன் மனைவியை அழைத்துக்கொண்டு கப்பலில் ஏறுவதற்காக விரைந்தான். அப்போதும் மற்றொரு திசையில் இருக்கும் தன் நண்பனைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை. கடவுள் தன் நண்பனின் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கவில்லை என்று நினைத்தான். 

அவன் கப்பலில் ஏறப்போகும் நேரத்தில், வானிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது... ``கொஞ்சம் பொறு... நீ ஏன் உன் நண்பனை விட்டுவிட்டுத் தனியாகக் கிளம்புகிறாய்?’’ 

கதை


``நான் என்னவெல்லாம் கேட்டு பிரார்த்தனை செய்தேனோ, அவையெல்லாம் எனக்குக் கிடைத்தன. அது என் பாக்கியம். ஆனால், என் நண்பனின் பிரார்த்தனை தகுதியில்லாதது. அதனால்தான் அவன் கேட்ட எதுவும் அவனுக்குக் கிடைக்கவில்லை...’’ 

அசரீரி சொன்னது... ``நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். அவன் ஒரே ஒரு பிரார்த்தனைதான் செய்தான். அதை நான் நிறைவேற்றித் தந்தேன். அது மட்டும் இல்லையென்றால், உன்னுடைய எந்த வேண்டுதலும் நிறைவேறியிருக்காது...’’ 

``அப்படியா கடவுளே... என் நண்பன் அப்படி என்னதான் பிரார்த்தனை செய்தான்?’’ 

``உன்னுடைய எல்லா கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்...’’ 

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்