வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (02/02/2018)

கடைசி தொடர்பு:19:17 (02/02/2018)

கல்லூரி வளாகத்துக்குள்ளே நெல் வளர்த்து அறுவடை செய்த சென்னைப் பொறியியல் மாணவர்கள்! #SpotVisit

மாணவர்கள் விவசாயம்

கல்லூரி பற்றி பல கலர் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த பாதங்கள் இன்று நாற்று நட ஆரம்பித்துள்ளன. எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி மாணவர்கள்தான் இந்த ஆர்கானிக் புரட்சியை ஆரம்பித்தவர்கள். நெல்மணிகளைத் தங்கள் கண்மணிகளாய் கருதும் அவர்களுடன் பேச அவர்களது விளைநிலத்திற்கே ஒரு ஸ்பாட் விசிட் அடித்தோம்.

அன்று அறுவடைக்கான நாள். மாணவர்கள் எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். அவர்களுடன் பேசியபோது...

இன்ஜினீயரிங் படிக்கும் நீங்கள் எதற்காக இயற்கை விவசாயம் செய்ய முடிவு செஞ்சீங்க?

“சென்னை , கேளம்பாக்கம் பக்கம், 250 ஏக்கர் இடத்தில் எங்க காலேஜ் இருக்கு. அந்த 250 ஏக்கர் நிலத்துக்கு நடுவுல ஒரு ஏக்கர் இடத்துல மட்டும் ஒரு விவசாயி விவசாயம் பண்ணாரு. அவரை இங்க விவசாயம் பண்ணாதீங்க அப்படின்னு காலேஜ் நிர்வாகமும் சொல்லல, அவரும் அவரோட பூர்வீக இடத்தை விட்டுக்கொடுத்துட்டு வெளியில போய் லாபம் பார்க்க ஆசைப்படல. இதெல்லாம் பார்க்கப் பார்க்க எங்களுக்கு ரொம்ப வியப்பா இருந்துச்சு. விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம்னு வாழுற ஒரு குடும்பம் எப்படி இவ்வளவு உறுதியா தன்னோட பூர்வீக நிலத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்காங்க? இதெல்லாம் நாங்க தினமும் கடந்து வர வர பெரிய விஷயங்களான ஜல்லிக்கட்டுப் போராட்டம், மீனவர்கள் பிரச்னை, விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, காவேரி பிரச்னை என நிறைய பிரச்னைகள் தலைத்தூக்க ஆரம்பிச்சிது. `கத்தி' படம் பாத்துட்டு கொஞ்சநாள் கனத்த இதயத்தோட இருந்த நகர்ப்புற மாணவர் கூட்டம்தான் நாங்களும். ஆனால், இப்போ நான் சொன்ன எல்லா விஷயங்களுக்கும் லாபத்தை தாண்டி ஏதோ உணர்வுபூர்வமான தொடர்பு இருந்துகொண்டே இருக்குன்னு நாங்கள் உணர ஆரம்பிச்சோம். எங்கள் கல்லூரி என்.எஸ்.எஸ் இயக்க மாணவர்கள் ஏற்கெனவே ஒரு சென்ட் இடத்துல தக்காளி, கத்திரிக்காய் எல்லாம் பயிரிட்டு இருந்தாங்க. வர்தா புயல்ல எல்லாம் போயிடுச்சு. அதனால அந்தப் பணியும் அப்படியே நின்னுடுச்சு. சரி இனிமே முறையா விவசாயம் செய்யலாமுன்னு முடிவு செஞ்சோம். நாங்க என்.எஸ்.எஸ் கேம்ப் போன காயாறு கிராமத்துல இருக்கிற விவசாயிகள்கூட பேசினதுல நிறைய கத்துக்கிட்டோம். முதல்ல கத்திரிக்காய், பூசணிக்காய் என ஆரம்பிச்சோம். இப்போ நெல்லு வரைக்கும் வந்திருக்கோம்.”

யாரெல்லாம் உங்ககூட வேலை  செய்றாங்க? எப்படி உங்க டீம் ஃபார்ம் ஆச்சு?

“இப்படி இன்ஜினீயரிங் படிச்சிக்கிட்டே விவசாயம் பண்ணலாமுன்னு யாரையாவது கூப்பிட்டா வருவாங்களான்னு யோசிச்சோம். நாங்க இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டும் ஆறு பேர் சேர்ந்து அரை ஏக்கர் நிலத்துல வேலை பார்க்க ஆரம்பிச்சோம். வேலை பார்க்கும்போது எடுக்கும் போட்டோஸ் எல்லாம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் தினமும் பதிவேற்றுவோம். அதைப் பார்த்துட்டு ஒவ்வொருத்தரா எங்களுடன் சேர்ந்தாங்க. "எனக்கும் ஒரு இடம் குடுங்க அண்ணா, நானும் விவசாயம் செய்றேன்"-னு பல குரல்கள் வந்து சேர்ந்துக்கிட்டே இருந்தது. இப்போ மொத்தம் 38 பேர் இருக்கோம். அதுல 20 பேர் மாணவிகள். இந்த டீம்ல இருக்கிற மாணவ, மாணவிகள் பெரும்பாலும் முதலாம் ஆண்டு படிக்குறவங்க. நாங்க “தானா சேர்ந்த கூட்டம்".  சமூக வலைதளங்கள் இல்லைனா இது சாத்தியமாகி இருக்குமானு தெரியல. தினமும் மாலை  4.30 மணி முதல் 5.30 அல்லது 6 மணி வரை நாங்க எல்லாரும் வேலை பார்ப்போம்.”

இந்த நிலம், நிலத்தோட வளம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இதற்கான அனுமதி எல்லாம் எப்படிக் கிடைச்சது?

“நாங்க இப்போ ஆசைக்காக நெல் பயிரிட்டோம். ஆனால், இந்த நிலத்துக்கு எந்தப் பயிர் சாகுபடி செய்தால் நல்லா இருக்கும், விளைச்சல் தரும் போன்ற விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சி அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பயிர்கள் பற்றிய முடிவுகளை எடுக்கலாம்னு இருக்கோம். கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர்றாங்க. இதற்கான செலவுகள் எல்லாம் நாங்கதான் ஏத்துக்குறோம். அப்போதானே பொறுப்பா விவசாயம் செய்வோம்.”

நெல் அறுவடை

விவசாயத்தில் இருக்கும் நுணுக்கங்களை எல்லாம் எப்படித் தெரிஞ்சிக்கிட்டீங்க?

“பெருந்துறையில் உள்ள கார்த்திகேய சிவசேனாதிபதியின் கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஆர்கானிக் விவசாயம் பற்றிய இரண்டு நாள் பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டோம். அங்கதான் விவசாய நுணுக்கங்கள் எல்லாம் கத்துக்கிட்டோம். விவசாயம்னா டிராக்டர் வெச்சி உழறது, மோட்டார் போட்டுத் தண்ணி பாய்ச்சுறதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த எங்களுக்கு அதைத் தாண்டி ஏகப்பட்ட வேலைகளும் அறிவியல் சார்ந்த நுணுக்கங்களும் தெரிய வந்தது. அங்கு இயற்கை உரம் தயாரிப்பது, நிலத்தின் பதம் பார்த்து தண்ணீர் பாய்ச்சுதல் என எல்லாமே தெரிந்துகொண்டோம். மாட்டுச்சாணியில் இருந்து பஞ்சகவ்யம், இயற்கை உரத்தில் இருந்து மண்புழு என எல்லா முறைகளும் நல்லாத் தெரிஞ்சிக்கிட்டோம்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ அப்படின்னு வள்ளுவரே சொல்லிருக்காரு. அதுக்கு ஏத்த மாதிரி எல்லாரும் உணவே மருந்துனு வாழணும்.

இதுக்கும் மேல பல விதத்துல எங்களுக்கு விவசாயம் சார்ந்த தகவல்கள் கிடைச்சது. 'நம்மாழ்வார் பேசுகிறேன்', 'ஒற்றை வைக்கோல் புரட்சி', 'பூமித்தாய் பேசுகிறேன்' போன்ற புத்தகங்கள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தது. அதுபோக யூடியூப் வீடீயோஸ், 'விவசாயம்' ஆப், என்.ஜி.ஓ-க்கள் எல்லாம் ஒரு தடையற்ற நம்பிக்கையின் ஆதாரமாக எங்களை வழி நடத்திக்கிட்டே இருகாங்க.”  

எஸ்.எஸ்..என் கல்லூரி மாணவர்கள்

நீங்க 'விவசாயம் பண்ணப்போறோம்' அப்படின்னு சொன்னதும் உங்க அம்மா அப்பா ரியாக்ஷன் எப்படி இருந்தது?

“அம்மா, அப்பாக்கிட்ட நாங்க விவசாயம் பண்ணப்போறோம்னு சொன்னதும் ரொம்ப யோசிச்சாங்க. 'இன்ஜினீயரிங் படிக்க அனுப்புனா இவங்க விவசாயம் பண்றேன்னு மண்வெட்டி எடுக்குறாங்களே. இவங்களுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைக்கிறது'-னு பல கேள்விகள் அவங்களுக்குள்ள எழுந்திருக்கும். ஆனால், நாங்க சொந்தமா உழைச்சுப் பயிரிட்ட வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணிக்காய் எல்லாம் போட்டோ எடுத்து அனுப்புனப்போ அவங்களுக்குப் பெருமையா இருந்தது.  ரொம்ப பாராட்டுனாங்க. அவங்க சப்போர்ட் இல்லாம எங்களால இந்த அளவுக்கு விவசாயம் செய்ய முடிஞ்சிருக்காது.”

மரம், செடி எல்லாம் நிறைய இருக்கே. இதெல்லாம் நீங்க வெச்ச மரங்கள்தானா? இதுவரைக்கும் என்னென்ன பயிர்கள் எல்லாம் பயிரிட்டிருக்கீங்க?

“இதுவரைக்கும் நெல், பூசணிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, சோளம், காராமணி, மரம் வகையில் வாழைமரம், நெல்லிக்காய், எலுமிச்சை, பூச்செடி வகையில் ரோஜா, முல்லை, மல்லி எல்லாம் இப்போதைய விளைச்சலில் இருக்கு. இனிமேல் கம்பு, ராகி, சாமை போன்ற நாட்டுப்பயிர்களைப் பயிரிட்டு நல்லபடியாக அறுவடை செய்வதே திட்டம். இன்னைக்கு நெல் பயிர் வளர்த்து அதை அறுவடை செய்ற அளவுக்கு நாங்கள் வந்திருக்கோம். ஒவ்வொரு விவசாயியின் மன வலியும், உடல் உழைப்பையும் நாங்க புரிஞ்சிக்கிட்டோம்.”

இன்ஜினீயரிங் படிக்கிற நாங்க விவசாயத்தில ஆர்வமா இருக்கிறோம். எங்களோட இன்ஜினீயரிங் டெக்னாலஜி எல்லாம் முடிஞ்ச அளவுக்கு நம்ப விவசாய மக்களுக்குப் பயன்படுற மாதிரி ப்ராஜெக்ட் பண்ணணும். எங்களோட எல்லா ப்ராஜெக்ட்டும் அக்ரி சார்ந்தே யோசிக்கிறோம். நான், ஜெரோம், கார்த்தி, கவின், அருண் பிரசாத், முத்தமிழ் செல்வன் என ஆறு பேர்ல இருந்து 38 பேராக வளர்ந்திருக்கோம். நங்கள் இந்தக் கல்லூரியை விட்டுப் போன பின்னும் எங்கள் தம்பி, தங்கைகள் எல்லாம் இப்போ நாங்க ஆரம்பிச்ச ஆர்கானிக் ஃபார்மிங்கை இன்னும் பெருசா பெருமையோட செய்வாங்கன்னு நம்புறோம். ஒரு 10 வருசத்துக்கு அப்பறம் அலுமினி மீட்டுக்கு நாங்க எல்லாரும் வரும்போது இந்த ஃபார்ம் எப்படி இருக்குமுன்னு நினைச்சி பாத்தா... " வார்த்தைகளுக்கான தேடலில் திகைத்து நிற்கிறார் பாலவெற்றிவேல்.

சற்று யோசித்து இதைச் சொல்லி முடித்துக்கொண்டார். 

"ஒரு முறை விவசாயம் செஞ்சி பாருங்க. நிச்சயம் நீங்கள் இந்த மண்மீது காதல் கொண்டு அதை விட்டு மீளாமல் தொடந்து மண்வெட்டி பிடிப்பீர்கள்."

நெல் அறுவடை செய்ய மாணவர்களுடன் கல்லூரியின் முக்கிய நிர்வாகிகள், இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மாணவர்களின் இந்த ஆர்வம் மற்றும் அயராத உழைப்பினை ஊக்குவிக்கும் வகையிலும் இவர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றவும் மேலும் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கித்தருவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் விவசாயம் அழியும் என்ற கூற்று நிதர்சனமான உண்மையாகிவிடுமோ என மனதில் அவ்வப்போது ஐயங்கள் எழும். ஆனால் இது போன்ற செயல்களால், அழிவது செயற்கை விவசாயமாகவும் வளர்வது இயற்கை விவசாயமாகவும் இருக்கும் என நம்பலாம்.


டிரெண்டிங் @ விகடன்