இரண்டு கால் அகற்றப்பட்ட பின்னும் குதிரைப் பந்தயத்துக்கு தயாராகிவிட்ட நம்பிக்கைப் பெண்! | This woman who lost her leg, has never lost her hope

வெளியிடப்பட்ட நேரம்: 17:01 (02/02/2018)

கடைசி தொடர்பு:17:01 (02/02/2018)

இரண்டு கால் அகற்றப்பட்ட பின்னும் குதிரைப் பந்தயத்துக்கு தயாராகிவிட்ட நம்பிக்கைப் பெண்!

"என்னை அந்தப் பதினைந்து நிமிடங்களில் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள். ஆனால் நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்தபோது மூன்று நாட்களாகி இருந்தன. என் இரண்டு கால்களும் என்னிடமிருந்து பிரித்து இருந்தன. ஆனால் இன்றுவரை குதிரை ஓட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்". இது குதிரைப் பந்தய வீராங்கனை பெலீஷியா கிரிம்மன்ஹேக்கின் நம்பிக்கை வார்த்தைகள். 

குதிரையுடன் பெலீஷா

பெலீஷியா கிரிம்மன்ஹேக் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னால் தனது நண்பருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் வேகமாக வந்த கார் இவரது பைக்கின்மீது மோதியது. அப்போது பலத்த காயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். ஆனால், பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் பெலீஷியா கிரிம்மன்ஹேக்கின் உடலில் அசைவுகள் தெரிய மீண்டும் மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து கண் விழித்துப் பார்த்திருக்கிறார். அப்போது எழுந்து நடக்கப் பார்த்தவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. அவரது இரண்டு கால்களும் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டிருந்தன. 

'உலக அளவில் நடைபெறும் குதிரைப் பந்தயத்தில் தான் கலந்துகொள்ள வேண்டும்' என்ற முனைப்புடன் பயிற்சி எடுத்து வந்தவருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். இருந்தும் மனம் தளரவில்லை, மீண்டும் தன்னால் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்ள முடியும் என முயற்சி செய்தார். முதல் முயற்சி தோல்வியில் முடிகிறது... மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார். இப்போது வெற்றி வசமாகிறது. மீண்டும் குதிரையின் மீது ஏறி அமர்ந்துவிட்டார். பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொள்கிறார். கடிவாளத்தைச் சுழற்றியதும் குதிரை நகர ஆரம்பிக்கிறது. நகர ஆரம்பித்தது குதிரை மட்டுமல்ல நாட்களும்தான்... இப்போது ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. நகர ஆரம்பித்த குதிரை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது, பெலீஷியா கிரிம்மன்ஹேக் என்ற நம்பிக்கை மனுஷியைச் சுமந்து... 

பெலீஷியா

வருடங்கள் கடந்து விட்டாலும், தன்னுடைய வேலைகளைத் தானே கவனித்துக் கொள்கிறார். குதிரைப் பராமரிப்பு, இருப்பிட பராமரிப்பு என அனைத்து வேலைகளும் இவர்தான் செய்து கொள்கிறார். இவருக்கென பிரத்யோகமாக அமைக்கப்பட்ட வீல் சேரின் உதவியுடன் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்கிறார். இதற்கெல்லாம் அவர் சொல்லும் பதில், "இங்கு எதுவும் கெட்டுவிடவில்லை. நான் கால்கள் இல்லாமல் பிறந்ததாக நினைத்துக் கொள்கிறேன். நடந்தது நடந்துவிட்டது, இனி அதைப்பற்றி பேசிப் பயனில்லை. இப்போது நான் அடுத்த பாரா ஒலிம்பிக்கை நோக்கிக் காத்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம், நான் சாதிக்க நினைத்தேன் என்பதைவிட, எனது குதிரை என்னைச் சாதிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தது. என்னுடைய குதிரை என்னை முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டது. நான் என்ன நினைக்கிறேனே அதை என் கண்களின் மூலமாகவே எனது குதிரை கண்டுபிடித்துவிடும். எனது குதிரையை விலங்காக நினைக்கவில்லை. என் உடன் பிறந்த சகோதரனாக நினைக்கிறேன். நான் குதிரையை நேசிக்கவில்லை, குதிரைதான் என்னை நேசிக்கிறது. நான் பந்தயத்தில் வெல்ல நினைக்கிறேன் என்பதை என் குதிரை எப்போதோ கண்டுபிடித்துவிட்டது. ஊனமுற்றவர்களுக்கு மனிதர்கள் உதவுவதைப்போல, விலங்குகளும் உதவி செய்யும் என்பதை இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறேன்" என்கிறார், பெலீஷியா கிரிம்மன்ஹேக். 

இதற்கு முன்னர், இதேபோல இரண்டு கால்களை இழந்த ஏஞ்சலிகா ட்ராபெர்ட் என்ற பெண்மணி இரண்டு கால்கள் இல்லாமல் கடந்த 25 வருடங்களில் ஐந்து பாரா ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டு 24 பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏஞ்சலிகா ட்ராபெர்ட்டைப் பின்பற்றி பெலீஷியாவின் பார்வையும் 2020-ம் ஆண்டு நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. 

வாழ்த்துக்கள் பெலீஷியா!
 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close