வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (03/02/2018)

கடைசி தொடர்பு:15:20 (03/02/2018)

' எட்டாண்டுக் கால தாகத்தைத் தீர்க்க வேண்டும்!' - முதலமைச்சருக்கு சித்ரா லட்சுமணன் கோரிக்கை

எட்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் கலைமாமணி விருதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, அடுத்தடுத்து சாதனைகளை நிகழ்த்தும் ஊக்கத்தை கலைஞர்களுக்குத் தருவது, ரசிகர்களின் கைத்தட்டல்களும் பாராட்டுகளும். அதேபோல அவர்களது திறமையை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுகின்ற விருதுகளும்தான். கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசின் சார்பில் இதுவரை வழங்கப்பட்டு வந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள், கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாததால் திரை உலகத்தையும் திரைப்படக் கலைஞர்களையும் அரசு புறக்கணிக்கிறதோ என்ற சந்தேகம் தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த பலருக்கும் ஏற்பட்டது. அந்த சந்தேகத்தை அடியோடு போக்கி, திரைப்படக் கலைஞர்களின் எண்ண ஓட்டத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு, கடந்த பல ஆண்டுகளாக தரப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளை ஒரே நாளில் அறிவித்த தங்களுக்கு, கலை உலகம் மிகப்பெரிய நன்றிக்கடன்பட்டிருக்கிறது.

அதோடு, சிறந்த தமிழ்ப் படங்களுக்குப் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த மானியத் தொகையையும் அறிவித்து, வாட்டத்தோடு இருந்த பல தயாரிப்பாளர்கள் வாழ்க்கையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தங்களை, வாழ்த்த வார்த்தைகளே இல்லை. இதேபோல 1959-ம் ஆண்டிலிருந்து தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகளும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என்பதை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். கடந்த 8 ஆண்டுகளுக்காக வழங்கப்படாமல் இருக்கின்ற கலைமாமணி விருதுகளை உடனடியாக அறிவித்து, தமிழ்நாட்டில் உள்ள பலதரப்பட்ட கலைஞர்களையும் தாங்கள் கௌரவிக்க வேண்டுமென்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க