வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (04/02/2018)

கடைசி தொடர்பு:11:23 (04/02/2018)

`பத்மாவத்’ ரத்தன் சிங் புது அவதாரம்... ஹன்சிகா, டாப்ஸி வாக்... லேக்மீ ஃபேஷன் வீக் அப்டேட்!

க்பூர்பேஷன் ஷோக்களில் முதன்மையாக விளங்கும் 'லேக்மீ ஃபேஷன் வீக்'கின் இந்த ஆண்டின் கோடைக்கால ஃபேஷன் ஷோ, சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. இதில் நாடெங்கிலுமிருந்து கலந்துகொண்ட ஆடை வடிவமைப்பாளர்கள், தங்களின் டிசைன்களை மாடல்களுக்கு அணிவித்து, ராம்ப் வாக் மூலம் அறிமுகப்படுத்தினர்.

லேக்மீ ஃபேஷன் வீக்

புத்தாடை என்றாலே அனைவருக்கும் ஆனந்தம்தான். சாதாரணமாக, கடைகளுக்குச் சென்றாலே ஏகப்பட்ட புது டிசைன்களில் ஆடைகள் கொட்டிக்கிடக்கும். சிலர், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆடைகளை வாங்கிச் செல்வர். மேலும் சிலர், நிறம், டிசைன் என அனைத்திலும் ட்ரெண்டில் என்ன உள்ளது என ஆராய்ந்து வாங்குவார்கள். அந்தவகையில் ட்ரெண்டை அறிமுகப்படுத்துவது ஃபேஷன் ஷோக்கள்தான். இந்தியாவில் உள்ள அனைத்து ஆடை வடிவமைப்பாளர்களும் தங்களின் படைப்புகளை ஃபேஷன் ஷோ மூலம் வெளியிடுவார்கள். அவற்றைக் குளிர்காலம் மற்றும் கோடைக்கால ஃபேஷன் ஷோ எனப் பிரித்து ஆண்டுக்கு இருமுறை நடப்பது வழக்கம்.

லேக்மீ ஃபேஷன் வீக், Wills Lifestyle Indian Fashion Week, Van Heusen India Mens Week, பெங்களூரு ஃபேஷன் வீக், வடஇந்திய ஃபேஷன் வீக் என இந்தியாவில் பல இடங்களில் விதவிதமான ஃபேஷன் ஷோ நடக்கும். மேலும் இவற்றைத் திருமண கலெக்‌ஷன், அலுவலக கலெக்‌ஷன், கேஷுவல் கலெக்‌ஷன் எனவும் வகைப்படுத்தலாம்.

லேக்மீ ஃபேஷன் வீக்கின் முதல் நாளன்று, ஆடை வடிவமைப்பாளர்கள் ரித்து குமார், ஊர்வசி கவுர் மற்றும் நெக்ஸ்ட் ஜென் ஆகியோரின் படைப்புகள் வெளிவந்தன. இது கோடைக்கால ஃபேஷன் ஷோ என்பதால், வெளிவந்த அனைத்து ஆடைகளும் மென்மையான துணிகளிலேயே இருந்தன. ஊர்வசி கவுரின் கலெக்‌ஷன் அனைத்தும் பண்டைய கால தோரணையிலேயே இருந்தது. பிரவுன், செம்பு, வெண்கலம் போன்ற நிறங்கள், காதி, கோட்டா போன்ற துணி வகைகள் என நம் பாரம்பர்யத்தின் மணம், டிரஸ், ஸ்கர்ட்ஸ் போன்ற ஸ்டைலிஷ் ஆடைகளில் காணப்பட்டது.

Urvasi Gaur Collection

ரிச்சர்ட் பாண்டவ் மற்றும் அமித் விஜயா ஆகியோர் இணைந்து வடிவமைத்த ஆடைகள் அனைத்தும் `Tie and Dye' எனும் ஒருவகையான அச்சிடும் வேலைப்பாடுகளைக்கொண்டிருந்தன. காதி, சில்க் காட்டன், சில்க் போன்ற துணி வகைகளில் `மிக்ஸ் அண்ட் மேட்ச்' எனும் theme வைத்து ஜாக்கெட், கஃப்தான், ட்ரென்ச் கோட், மாக்சி, ஸ்கர்ட்ஸ், கிராப் பேன்ட் போன்ற உடைகளை அறிமுகம் செய்தனர் இந்த இணை வடிவமைப்பாளர்கள்.

ஆடை வடிவமைப்பாளர் நவுஷாத் அலி, சுவிஸ் மற்றும் ராஜஸ்தான் பாரம்பர்ய டிசைன்களை இணைத்து, புதுவிதமான கலெக்‌ஷனை அறிமுகம்செய்தார். வெவ்வேறு அளவுகளில் பொல்கா டாட் (Polka Dot) டிசைனில், பச்சை, மஞ்சள், சிவப்பு, கருநீலம் நிறங்களில், கஃப்தான், ஜம்ப் சூட், டயர் டிரஸ், கிராப் பேன்ட் எனப் பல்வேறு ஆடைகள் வரிசையில் வந்தன.

இஸ்லாம் வேலைப்பாடுகளை தூண்டுதலாகக்கொண்டு, `தோபிகாட்' எனும் தன் முதல் கலெக்‌ஷனை அறிமுகம் செய்தார் இளம் ஆடை வடிவமைப்பாளர் முஹம்மத் மஸார். முற்றிலும் வெள்ளை நிற காதி ஆடைகளின் அணிவகுப்பை, துணி சலவை செய்பவர்களுக்குச் சமர்ப்பிப்பதாக தன் உரையாடலில் கூறினார் மஸார். பின் டக்ஸ் (Pin Tucks), ஸ்மாக் டிரஸ், சமச்சீரற்ற குர்த்தா வகைகள், lapelled ஜாக்கெட் எனப் புதுமையான ஆடை வகைகளை அறிமுகம் செய்தார்.

Mohammed Mazhaar

74 வயதான ரித்து குமார், பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரும்கூட. திருமண ஆடைகள் வடிவமைப்பதில் கில்லாடி. இந்த வருட கோடைக்கால ஃபேஷன் ஷோவில் இவரின் கேஷுவல் மற்றும் அலுவலக ஆடைகளின் அணிவகுப்புக்கு நடிகைகள் டாப்ஸி மற்றும் ஹன்சிகா மோத்வானி முதன்மை மாடல்களாக ராம்ப்பில் சென்றனர். `ஹிப் ஹாப்' கலெக்‌ஷனில் டாப்ஸியும் அலுவலக கலெக்‌ஷனில் ஹன்சிகாவும் பூனை நடையிட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Tapsee and Hansika

ஆடை வடிவமைப்பாளர், அணிகலன் வடிவமைப்பாளர், தொழிலதிபர் எனப் பன்முகங்களைக்கொண்டிருக்கும் 55 வயதான அனிதா டாங்க்ரியின் திருமண உடை அணிவகுப்போடு முதல் நாள் ஃபேஷன் ஷோ முடிவடைந்தது. இதில் முதன்மை மாடல்களாக `பத்மாவத்' புகழ் ஷாஹித் கபூர் மற்றும் அவரின் மனைவி மீரா ராஜ்புட் ராம்ப்பில் கலக்கினர். ஐவரி நிற ஷெர்வானியில் ஷாஹிதும், அதே நிற லெஹெங்கா சோலியில் மீராவும் ராம்ப் வாக்கிட்டு அனைவரையும் கவர்ந்தனர்.

Shahid and Mira

மேலும் இந்த விழாவில் ஷ்ரேயா சரண், யாமி கவுதம், கத்ரினா கயிஃபின் இளைய சகோதரி இசபெல் கயிஃப், கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் மனைவி சகாரிக்கா, ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Lakme Fashion Week

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளன்று ஆடை வடிவமைப்பாளர் ஹேமாங் அகர்வாலின் பனாரசி வகை ஆடைகளின் அறிமுகத்தோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. வெவ்வேறு மாநிலங்களிலிருந்து களம் இறங்கவிருக்கும் ஆடைகளின் அறிமுக அணிவகுப்பு, ஞாயிறு வரை தொடரும்.


டிரெண்டிங் @ விகடன்