வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (05/02/2018)

கடைசி தொடர்பு:13:35 (05/02/2018)

40 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத “வாவ் சிக்னல்” மர்மம்... வேற்றுக்கிரகவாசிகளின் அழைப்பா?

உலகில் விடை தெரியாமல் இருக்கும் மர்மக் கேள்விகளில் ‘வேற்றுகிரகவாசிகள் நிஜமாகவே இருக்கிறார்களா இல்லையா’ என்பதும் ஒன்று. அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பற்றிய செய்திகள் வெளிவந்துகொண்டேதான் இருக்கும். அண்மையில்கூட அப்படி ஒரு செய்தி வெளியானது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை நாசா நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அந்த வீடியோவின் ஓர் இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு பொருள் நிலவின் ஓரத்தில் அதிவேகமாகக் கடந்து சென்றதாகவும் அதை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பலரும் அதைக் கவனித்ததாகவும் தகவல் வெளியானது. அது நிச்சயமாக வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுதான் என்று கூறிய யூடியூப் சேனல் ஒன்று அந்த காட்சியைப் பதிவுசெய்து வெளியிட்டிருக்கிறது.

தொலைநோக்கி

வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மையோ பொய்யோ எதுவாக இருந்தாலும் விஞ்ஞானிகள் அவர்களைத் தொடர்பு கொள்வதற்குப் பல காலமாக முயற்சி செய்து வருகிறார்கள். ஒருவேளை பிரபஞ்சத்தின் வேறு ஏதாவது கிரகங்களில் யாராவது இருந்து அவர்கள் நம்மைத் தொடர்புகொள்ள முயலலாம் என்பதால் தொலைநோக்கிகள் மூலமாக விண்வெளியை ஆராய்ந்து வருகிறார்கள். ரேடியோ டெலஸ்கோப் அல்லது வானொலி அதிர்வெண் தொலைநோக்கிகள் எனப்படும் இவை விண்வெளியில் இருந்துவரும் சமிக்ஞைகளைத்  தொடர்ச்சியாக ஆய்வு செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படி ஒருநாள் ஒரு தொலைநோக்கிக் கண்டறிந்த ஒரு சமிக்ஞை உலகில் இருக்கும் விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

“வாவ் சிக்னல்”:

பிக் இயர் தொலைநோக்கி

அந்தச் சம்பவம் மட்டுமில்லை; அந்தச் சமிக்ஞை-க்கு பெயரே வாவ் சிக்னல்தான். அமெரிக்காவின் ஓஹியோ என்ற இடத்தில் அமைந்திருக்கிறது 'பிக் இயர் ' (Big Ear)என்ற தொலைநோக்கி, ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது. அப்போதெல்லாம் தொலைநோக்கியின் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களை ஒரு பேப்பரில் பிரின்ட் அவுட் எடுத்து அதில் ஏதாவது புதிய சமிக்ஞைகள் பதிவாகியிருக்கிறதா என்பதை ஆராய்வார்கள். 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல பிக் இயர் தொலைநோக்கி செயல்பட்டுக்கொண்டிருந்தது.

வானியல் ஆராய்ச்சியாளரான ஜெர்ரி ஆர்.ஏமான் தொலைநோக்கியில் இருந்து பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டிருந்த தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தார், முற்றிலும் எண்களால் நிரப்பப்பட்ட அந்தத் தகவல்களில் இருக்கும் புதிரை விடுவிப்பது என்பது சாதாரணமான காரியமில்லை. பேப்பரைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஓர் இடத்தில் சற்று வித்தியாசமாக அவர் கண்களுக்குத்  தென்படுகிறது அந்த எழுத்துக்கள்  6EQUJ5  அதை அப்படியே ஆங்கிலத்திற்கு மாற்றி பேப்பரின் ஓரத்தில் எழுதுகிறார், அவர் எழுதியிருந்த வார்த்தை ' Wow ! '. ஜெர்ரிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை நிஜமாகவே அவருக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

வாவ் சிக்னல்

என்றைக்கு இது பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று பார்க்கிறார். அது ஆகஸ்ட் 15-ம் தேதி. மொத்தம் 72 நொடிகள் அந்த சிக்னல் தொடர்ச்சியாகக் கிடைத்திருக்கிறது , இவர்  சில நாள்கள் கழித்துதான் அந்தத் தகவலைப் பார்த்திருக்கிறார். தகவல் வெளியானவுடன் உலகம் பரபரப்பானது. அப்போ வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதானா, நிஜமாகவே அவர்கள் நம்மைத் தொடர்புகொண்டார்களா, எதைப்பார்த்து அவர்கள் வியந்தார்கள்  என்பது வரைக்கும் பல விதமான கேள்விகள் எழத்தொடங்கின. எதுவாக இருந்தாலும் இந்த சமிக்ஞை மற்றவற்றைவிட சற்று வித்தியாசமானது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. 

“வாவ் சிக்னல்” கண்டுபிடிக்கப்பட்டபோதே கருவியில் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும், இயற்கையாகவோ அல்லது மனிதர்களால் வெளியிட்டப்பட்ட அதிர்வுகள் தவறாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று சிலர் சந்தேகப்பட்டார்கள், ஆனால், அவர்கள் யாரிடமும் போதிய ஆதாரங்கள் இல்லை. அவ்வளவு ஏன் கடந்த 2016-ம் ஆண்டு புளோரிடாவைச் சேர்ந்த வானியல் துறைப் பேராசிரியரான அன்டேனியோ பாரிஸ்  இதை மீண்டும் ஆராய்ந்து இந்த சிக்னல்  பூமிக்கு அருகில் இருந்த விண்கற்களாலோ அல்லது ஹைட்ரஜன் மேகக்கூட்டங்களாலோ ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கை வெளியிட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஓஹியோ பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்கற்களால் அந்த சமிக்ஞைகள் உருவாக்கப்படவில்லை என்றும், அன்றைய நாளில் அவர்கள் குறிப்பிட்ட விண்கற்கள் பூமியில் இருந்து மிகத் தொலைவில் இருந்தன என்றும், அப்படியே அது அருகில் இருந்தாலும் ஒரு நிமிடத்திற்கு மேல் ஒரு விண்கல்லால் சமிக்ஞைகள் உருவாவது இயலாத காரியம் என்றும் கூறியது. அதோடு அந்த புளோரிடா பேராசிரியரின் கருத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

வேற்றுகிரகவாசிகள்

ஒரு வேளை வேற்றுகிரகவாசிகள் உண்மையாகவே யாரையாவது  தொடர்பு கொள்ள முயற்சித்து சமிக்ஞையை அனுப்பியிருப்பார்கள் என்று வைத்துக்கொண்டால்கூட பல பில்லியன்/மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவைக் கடந்து பூமியை வந்து சேர்ந்திருக்கும். இந்தத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகத்தான்  இருக்கிறது, மேலும் வேற்றுகிரகவாசிகள் நம்மைத் தொடர்புகொள்ள முயற்சி செய்யலாம் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாகவே மாறிப்போனது வாவ் சிக்னல். இன்னும்கூட உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் பல நூறு  தொலைநோக்கிகள் விண்வெளியை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றன, ஒருவேளை  தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த எதிர்காலத்தில் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான  மர்மங்கள் விலகத் தொடங்கலாம்.   


டிரெண்டிங் @ விகடன்